Published:Updated:

`நமக்கெல்லாம் விருது கொடுப்பாங்களான்னு யோசிச்சேன்!'- மழைநீரை சேகரித்த விவசாயி; நெகிழவைத்த கலெக்டர்

மணிமாறன்.இரா
வெங்கடேஷ்.ஆர்

வீட்டின் மேற்கூரையில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தி, துளி மழைநீரைக் கூட வீணாக்காமல் கிணற்றுக்குள் சேகரித்து அசத்தி வரும் புதுக்கோட்டை விவசாயி வீரமணிக்கு, பாராட்டுச் சான்றிதழ் அளித்துக் கௌரவித்தார் மாவட்ட கலெக்டர்.

விவசாயி வீரமணிக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர்
விவசாயி வீரமணிக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர் ( வெங்கடேஷ்.ஆர் )

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அரசும் நீர் நிலைகளைத் தூர்வாரத் தவறிவிட்டது. இந்த நிலையில், இப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி தங்களின் சொந்தச் செலவில் நீர் நிலைகளைத் தூர்வாரி வருகின்றனர்.

மழைநீர் சேகரிப்புத் தொட்டியுடன் விவசாயி வீரமணி
மழைநீர் சேகரிப்புத் தொட்டியுடன் விவசாயி வீரமணி

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கொத்தமங்கலம் மேற்குப் பகுதியைச் சேர்ந்த விவசாயி வீரமணி என்பவர் தனி ஆளாகக் களத்தில் இறங்கி தன் வீட்டில் தூர்ந்துபோன கிணற்றை சீரமைத்து, வீட்டின் மேற்கூரையில் மழைநீர் சேகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். மழை பெய்யும்போது மொத்த நீரும் கிணற்றுக்குள் செல்லும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.

மேலும், மரக்கன்றுகளுக்கு நேரடியாக வேருக்குத் தண்ணீர் செல்லும் வகையில், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறையையும் தன் வீட்டுத் தோட்டத்தில் செயல்படுத்தியிருக்கிறார். இதைப் பற்றி, `துளி மழை நீரைக்கூட வீணாக்காமல் சேகரித்து மழை நீர் சேகரிப்பில் அசத்தும் விவசாயி' என்று நமது இணையதளத்திலும் பசுமை விகடனிலும் கட்டுரைகளை வெளியிட்டோம்.

விவசாயி வீரமணிக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர்
விவசாயி வீரமணிக்கு சான்றிதழ் வழங்கும் மாவட்ட ஆட்சியர்

இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம், விவசாயி வீரமணி வீட்டுக்கே நேரடியாகச் சென்று ஆய்வு நடத்தியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து விவசாயி வீரமணிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில், சுதந்திர தினவிழாவில் நீங்கள் பங்கேற்க வேண்டும், உங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.

இதனை எதிர்பார்க்காத வீரமணி சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டார். அங்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் மாவட்ட எஸ்.பி செல்வராஜ் ஆகியோர் பாராட்டுச் சான்றிதழை வழங்கிக் கௌரவித்தனர்.

விவசாயி வீரமணி வீடு
விவசாயி வீரமணி வீடு

வீரமணியிடம் பேசினோம். `` சுதந்திர தினவிழாவில் திடீர் என என் பெயரைக் கூப்பிட்டு பாராட்டு சான்றிதழைக் கையில் கொடுத்தார்கள். அந்த நிமிடம் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கையால் விருது வாங்கும் வரையிலும் நமக்குப் போய் விருது எல்லாம் கொடுப்பாங்களா என நினைத்தேன். இந்த விருது இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. மழைநீர் சேகரிப்பு பற்றி பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். மழை சேகரிப்பில் ஆர்வம் காட்டுகின்றவர்களுக்கு அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்" என்றார் உற்சாகத்துடன்.