Published:Updated:

`ரெயின் கோட்' ஆடு - வாயைத் திறந்து கேட்காது! மாற்றியோசித்த ஒரத்தநாடு விவசாயி!

`ரெயின் கோட்' - ஆடு

ரொம்ப தூரம் செல்லாமல் இருக்க ஆட்டின் முன்காலில் ஒன்றை முழங்காலோடு மடக்கி வைத்துக் கட்டிவிட்டு மேய்ச்சலுக்கு அனுப்பும் மனிதர்களுக்கு மத்தியில் ஆடு நனையாமல் இருக்க விவசாயி கணேசன் `ரெயின் கோட்' போட்டிருப்பதாகப் பாராட்டுகின்றனர்.

`ரெயின் கோட்' ஆடு - வாயைத் திறந்து கேட்காது! மாற்றியோசித்த ஒரத்தநாடு விவசாயி!

ரொம்ப தூரம் செல்லாமல் இருக்க ஆட்டின் முன்காலில் ஒன்றை முழங்காலோடு மடக்கி வைத்துக் கட்டிவிட்டு மேய்ச்சலுக்கு அனுப்பும் மனிதர்களுக்கு மத்தியில் ஆடு நனையாமல் இருக்க விவசாயி கணேசன் `ரெயின் கோட்' போட்டிருப்பதாகப் பாராட்டுகின்றனர்.

Published:Updated:
`ரெயின் கோட்' - ஆடு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தான் வளர்க்கும் ஆடு மேய்ச்சலுக்குச் செல்லும்போது மழையில் நனையாமல் இருக்க சாக்கை உடையாக அணிந்துவிடுகிறார். கால்நடைகள் மீது அக்கறைகொண்ட அவரின் செயலையும், `ரெயின் கோட்' போட்டு மேய்ச்சலில் ஈடுபடும் ஆடுகள் குறித்தும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

விவசாயி கணேசன்
விவசாயி கணேசன்

ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் வயது 70. விவசாயியான இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பொழிந்து வருவதால் மேய்சலுக்குச் சென்ற அவரது ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது.

தன்னுடைய பிள்ளைகளாகக் கருதி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கணேசனுக்கு ஆடு மழையில் நனைந்து ஈரத்தில் நடுங்குவதைப் பார்க்க மனமில்லை. மேய்ச்சலுக்குப் போகும் ஆடு மழையில் நனையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு ஆட்டுக்கு `ரெயின் கோட்' போட்டால் என்னவென்று தோன்றியிருக்கிறது.

`ரெயின் கோட்' - ஆடு
`ரெயின் கோட்' - ஆடு

சட்டனெ அதைப் பிடித்துக்கொண்டவர் அரிசி சாக்கை ரெயின் கோட்டாக்கி ஆடுகளுக்கு அணிந்து விட்ட பிறகு தினமும் மேய்ச்சலுக்கு அனுப்பி வருகிறார். இந்தச் செயலைப் பார்த்தவர்கள் அவரை நெகிழ்ந்து பாராட்டியதுடன் சாக்கு அணிந்திருந்த ஆடுகளை போட்டோ எடுத்து `ரெயின் கோட்' என சமூக வலைதளங்களில் பதிவிட்டது நெட்டிசன்களைப் பெரிதும் கவர்ந்தது.

ரொம்ப தூரம் செல்லாமல் இருக்க ஆட்டின் முன்காலில் ஒன்றை முழங்காலோடு மடக்கி வைத்துக் கட்டிவிட்டு மேய்ச்சலுக்கு அனுப்பும் மனிதர்களுக்கு மத்தியில் ஆடு நனையாமல் இருக்க `ரெயின் கோட்' போட்ட கணேசன் உயர்ந்த மனம் கொண்டவராகவும் பார்க்கப்படுகிறார்.

ஆடு
ஆடு

இது குறித்து கணேசனிடம் பேசினோம், ``15 வருடங்களுக்கு மேலாக ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுப்பட்டு வருகிறேன். கால்நடை வளர்ப்புதான் எனக்கான வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பிள்ளைகளைப்போல கவனித்து அதுகளுக்கு தேவையானதை பார்த்துப் பார்த்து செய்வேன்.

கடந்த ஆண்டு பெய்த மழையில் நோய் வாய்ப்பட்டு மூன்று ஆடுகள் இறந்துவிட்டன. அதனால் இந்த முறை மழை தொடங்கிய உடனே அதிலிருந்து ஆடுகளைப் பாதுக்காப்பாகக் கவனிக்கத் தொடங்கினேன். தினமும் காலை 9 மணி முதல் சாயங்காலம் 5 மணி வரை ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். கடந்த சில வாரங்களாகத் தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.

அரிசி சாக்கை உடையாக அணிந்திருக்கும் ஆடுகள்
அரிசி சாக்கை உடையாக அணிந்திருக்கும் ஆடுகள்

அதனால் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி நனையாமல் இருக்க மரத்தடியில் மழைக்கு ஒதுங்கி நிற்கும். அதிலிருந்து காக்க வீட்டுக்கு அரிசி வாங்கும் சாக்கை ஆடுக்கு உடையாக அணிந்து மேய்ச்சலுக்கு அனுப்பினால் என்னவென்று தோன்றியது. அதன்படி தலைப்பகுதி நீங்களாக முதுகிலிருந்து கீழ் பகுதி வரை சாக்கை போர்த்தியது போன்று வைத்து கீழ் பகுதியில் சணலால் கட்டிவிட்டேன்.

பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுக்கும் இதே முறையில் உடைய போட்டுவிட்டேன். இதைப் பார்த்த எங்க ஊர்க்காரர்கள் இவனுக்கு கிறுக்கு பிடிச்சிருச்சானு பேசிக்கொண்டனர். அதை நான் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. முழுசா நனைந்த பிறகு முக்காடு எதுக்குனு பழமொழி சொல்வார்கள். ஆனால், என் ஆடு முழுசாக நனையாமல் இருக்கவும், மழையில் இருந்து காக்கவும் ரெயின் கோட் போடுவதைத் தொடர்ந்து வருகிறேன்.

மேய்சலுக்குச் செல்லும் ஆடுகள்
மேய்சலுக்குச் செல்லும் ஆடுகள்

மழை இல்லை என்றால் வழக்கமாகச் செல்வது போலவே மேய்ச்சலுக்குச் செல்லும். அதே போல் இரவு நேரத்தில் படுத்திருக்கும் போதும் கொசுக்கடியிலிருந்து காக்கவும் சாக்கை உடையாக அணிவித்து வருகிறேன். ஆடு உள்ளிட்ட கால் நடைகளுக்கு தனக்கு வேண்டியதை வாயைத் திறந்து கேட்க முடியாது. அவற்றுக்கு என்ன தேவையோ அதை நாம செய்து கொடுக்கணும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன். இதைப் பார்த்தவர்கள் ஆடு கூட சேர்த்து என்ன போட்டோ பிடிச்சிக்கிட்டு போறாங்க'' என்றார்.