Published:Updated:

ஊரடங்கு காலத்தில் உதவிய வீட்டுத்தோட்டம்! - பால், அரிசி, காய்கறி...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீட்டுத்தோட்டத்தில் வேணுகுமார்
வீட்டுத்தோட்டத்தில் வேணுகுமார்

தற்சார்பு

பிரீமியம் ஸ்டோரி
ற்சார்பு வாழ்க்கையை உலகுக்கு நினைவுபடுத்தியிருக்கிறது கொரோனா. இந்தியப் பிரதமர் முதல் உலகம் முழுவதும் தற்சார்பு வாழ்க்கை பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

இக்கட்டான காலத்தில் தேவையான பொருள்களைத் தேடி அலையும் கொடுமை, தற்சார்பு வாழ்க்கை பற்றி யோசிக்கவைத்திருக்கிறது. குறிப்பாக, காய்கறிகளை வாங்கி வீடு வந்து சேர்வதற்குள் வாழ்க்கையையே வெறுக்க வைத்துவிட்டது ஊரடங்கு. இதனால் பலரும் இந்த ஓய்வைப் பயன்படுத்தி வீட்டுத்தோட்டம் அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நெல் வயல்
நெல் வயல்

இதை ஏற்கெனவே பலர் செய்துவருகிறார்கள். அந்த வரிசையில் வீட்டுத்தோட்டம் மூலமாக நெல், காய்கறி, கீரை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்து தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் நாகர்கோவில், இந்து கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் வேணுகுமார். நாகர்கோவில் வெளிச்சந்தையை அடுத்த கண்ணமங்கலத்தில் இருக்கிறது அவர் வீடு. ஓர் அதிகாலை வேளையில் அவர் வீட்டுக்குச் சென்றோம். வீட்டு முற்றத்தில் நிழல்தரும் கூரையாக இருந்த மாமரம் நம்மை வரவேற்றது. கீரைகளுக்குப் பாசனம் செய்துகொண்டிருந்த வேணுகுமார், தண்ணீர் கலக்காத அசல் பசும்பாலில் தேநீர் கொடுத்து உபசரித்தபடி பேசத் தொடங்கினார்.

“வீட்டைச் சுற்றி ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. அதில் ஒரு ஏக்கர்ல தென்னை இருக்கு. மீதமுள்ள ஒரு ஏக்கர்ல வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை இயற்கை முறையிலேயே விளைவிக்கிறேன். மா, பலா, முருங்கை மரங்களை வளர்க்கிறேன். வெண்டை, கொத்தவரங்காய், கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, மிளகாய்னு எல்லா வகையான காய்கறிகளையும் சாகுபடி செய்யறேன். அதேபோல உடம்புக்கு ஆரோக்கியமான கீரைகள் தோட்டத்துல எப்பவும் இருக்கும். சிவப்பு, பச்சை நிறத்தில் இருக்கும் சுட்டிக்கீரை, பச்சைக்கீரை, மருத்துவ குணம்கொண்ட பொன்னாங்கண்ணிக்கீரைனு பல வகையான கீரைகளை வளர்க்கிறேன். தினமும் உணவுல கீரை இல்லாம இருக்காது’’ என்று தனது தோட்டத்தை அறிமுகப்படுத்தியவர்,

“என் அப்பா வீரியபெருமாள் முழுக்க இயற்கை விவசாயம்தான் பண்ணினாரு. அவரைப் பார்த்துதான் எனக்கு விவசாயத்துல ஆர்வம் வந்துச்சு. அப்பா காலத்துலயே வீட்டுத்தோட்டம் இருந்தது. அதோடு நெல், தென்னை விவசாயமும் செஞ்சாரு. இப்போ நான் அதைத் தொடர்ந்து செஞ்சுக்கிட்டு இருக்கேன். அப்பாவைப் பார்த்துப் பார்த்துதான் இயற்கை விவசாயம் மேலயும் எனக்கு ஆர்வம் உண்டாச்சு. எங்க வீட்டுல பாலுக்காக ரெண்டு, மூணு பசு மாடுகளை அப்பா வளர்த்தார். அந்த மாடுகளுக்குத் தீவனம் வைக்கிறது, பால் கறக்குறதுனு எல்லா வேலைகளையும் நான் பார்ப்பேன். அந்த அனுபவம் இப்பவும் கைகொடுக்குது. வீட்டுல பசுமாடு இருக்குறதால இதுவரைக்கும் காசு கொடுத்து வெளியில பால் வாங்கினதே இல்லை. பசுஞ்சாணத்தை உரமாகப் பயன்படுத்திக்கிறோம். அதோடு தினமும் வீட்டு முற்றத்துல சாணக்கரைசலைத் தெளிச்சு விட்டுடுவோம். அது சிறந்த கிருமிநாசினியா இருக்கு’’ என்றவர்,

சுட்டிக்கீரை
சுட்டிக்கீரை

“காய்கறிச் செடிகளுக்குப் பசுஞ்சாணத்தை மட்கவெச்சு உரமாகப் பயன்படுத்திக்கிறோம். மண்புழு உரத்தைக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துறோம். வேப்பெண்ணெயைப் பூச்சிவிரட்டியா பயன்படுத்துறேன். தோட்டத்துல கிடைக்குற காய்கறிகளை விற்பனை செய்யறதில்லை. வீட்டுத் தேவைக்குப்போக, வீட்டுக்குப் பக்கத்துல இருக்குற அண்ணன்கள், உறவினர்களுக்குக் கொடுக்கிறோம்’’ என்று நெல் விவசாயம் பற்றி விளக்கினார்.

பல வகையான கீரைகள்
பல வகையான கீரைகள்

“இந்த ரெண்டு ஏக்கர் இல்லாம வீட்டுக்குப் பக்கத்துல ஒரு ஏக்கர் வயல் இருக்குது. குளத்துப் பாசனம்தான். எப்பவும் தண்ணீர் இருக்கும். அங்கே இயற்கை முறையில ரெண்டு போகம் நெல் சாகுபடி செய்வேன். ஒரு போகத்துக்குப் பொன்மணி, இன்னொரு போகத்துக்கு அம்பை-16 நெல் ரகங்களைச் சாகுபடி செய்வேன். வயலில் நாற்று நடுவதற்கு முன்னாடி, தொழுவுரத்தை அடியுரமாகப் போடுவேன். பிறகு, மேலுரமா வேப்பம் பிண்ணாக்கு, புன்னைப் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு மூணையும் கலந்து 50 கிலோ கொடுப்பேன். பூச்சித்தொல்லை இருந்தா, 10 மி.லி வேப்பெண்ணையை 10 லிட்டர் தண்ணியில கலந்து தெளிப்பேன். வேப்பெண்ணெய்ப் பயிர்ல ஒட்டுறதுக்காகக் கொஞ்சம் சோப்பு ஆயில் கலந்துக்குவேன். ஒரு ஏக்கருக்கு அஞ்சு டேங்க் (ஒரு டேங்க் 10 லிட்டர்) தேவைப்படும். இதைத் தாண்டி வேற பராமரிப்பு ஒண்ணும் இருக்காது. சராசரியா ஒரு ஏக்கர்ல 30 மூட்டை நெல் கிடைக்கும். வீட்டுத் தேவைக்குப் போக, மீதமுள்ள நெல்லை கோட்டாறு மார்க்கெட்டில் வித்துடுவேன்’’ என்றவர் இயற்கை விவசாயத்தின் தேவை குறித்துப் பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இயற்கை விவசாயத்தை நான் வருமானத்துக்காகச் செய்யலை. வீட்டுத் தேவைக்காகத்தான் செய்யறேன். முன்னாடி மண்புழு இயற்கையாகவே விளைநிலங்கள்ல இருந்தது. பூச்சிக்கொல்லிப் போட்டு மண்புழுக்களைக் கொன்னுட்டாங்க. இப்போ மண்புழுவை காசு கொடுத்து வாங்கி வளர்க்கிறாங்க. இயற்கை விவசாயத்தைக் கைவிட்டதால நஞ்சு கலந்த அரிசி, காய்கறிகளை விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுறாங்க. அதுல இருக்குற நச்சுப்பொருளெல்லாம் நம்ம உடம்புலதான் சேருது. நம்ம உடல் ஆரோக்கியத்துக்கு அடிப்படையா இருக்குறதே உணவுதான். விஷம் கலந்த உணவைச் சாப்பிட வேண்டாம்னு முடிவு செஞ்சுதான் ஆரோக்கியம் கொடுக்குற இயற்கை உணவுப் பக்கம் திரும்பினேன்’’ என்றவர் நிறைவாக,

வீட்டுத்தோட்டத்தில் வேணுகுமார்
வீட்டுத்தோட்டத்தில் வேணுகுமார்

“ ‘எதையும் இஷ்டப்பட்டுச் செய்தால் கஷ்டம் தெரியாது.’ இயற்கை விவசாயமும் அப்படித்தான். யார் வேண்டுமானாலும் இயற்கை விவசாயம் செய்யலாம். ஆர்வம் இருந்தால் அதற்கான நேரத்தை ஒதுக்க முடியும். நான் காலையில ஒரு மணி நேரம், மாலையில ஒரு மணி நேரம் விவசாயத்துக்காகச் செலவிடுறேன். என் மனைவி லதா, மகன்கள் அஜயன், வினஜய் ஆகியோரும் என்னோட சேர்ந்து விவசாயத்தைக் கவனிச்சுக்குறாங்க. வீட்டை ஒட்டியே காய்கறித் தோட்டம் போட்டிருக்கிறதுனால பராமரிக்கிறது சுலபமா இருக்கு. குழந்தையைப் பராமரிப்பதுபோல் செடிகளைப் பராமரித்தால் நல்ல பலன் கொடுக்கும்.

நான் இயற்கைத் தோட்டம் அமைச்ச பிறகு கடைகள்ல காய்கறிகள் வாங்குறதே இல்லை.

இந்த ஊரடங்கு நேரத்துலதான் இதன் அருமை முழுமையா புரியுது. இயற்கை விவசாயக் காய்கறிகள் நீண்டநாள் கெட்டுப்போகாம இருக்கும். இயற்கையில் விளைவித்த காய்கறி, தேங்காய், சுத்தமான பசும்பால், அரிசினு தினமும் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுறதே மகிழ்ச்சியான விஷயம்தான். அதேபோல நான் வளர்த்த தோட்டத்துல பூப்பூத்து, காய் காய்க்கிறதைப் பார்க்கும்போது கிடைக்குற திருப்தி எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. நாம விளைவிச்ச இயற்கைக் காய்கறிகள்ல சமையல் செஞ்சு குடும்பத்தோடு சாப்பிடும்போது அதில் கிடைக்கிற சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, வேணுகுமார், செல்போன்: 94427 88711

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு