Published:Updated:

தேனி குழாய்கள் விவகாரம்!அமைச்சருக்காகப் பின்வாங்கினாரா பி.ஆர்.பாண்டியன்?

போராட்டம்

உடைக்கப்பட்ட குழாய்களுக்கு நவம்பர் 8-ம் தேதிக்குள் இணைப்பு கொடுக்காவிட்டால் வாக்காளர் அட்டை, ஆதார், ரேஷன் அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது...

தேனி குழாய்கள் விவகாரம்!அமைச்சருக்காகப் பின்வாங்கினாரா பி.ஆர்.பாண்டியன்?

உடைக்கப்பட்ட குழாய்களுக்கு நவம்பர் 8-ம் தேதிக்குள் இணைப்பு கொடுக்காவிட்டால் வாக்காளர் அட்டை, ஆதார், ரேஷன் அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது...

Published:Updated:
போராட்டம்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நீர் வழித்தடம் இல்லாத மேடான பகுதிகளுக்கு குழாய்கள் மூலமாகத் தண்ணீர் எடுத்து விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு விவசாயிகள் பயன்படுத்திய தண்ணீர் சட்டவிரோதமாகக் குழாய்கள் அமைத்தும், முல்லைப் பெரியாற்றில் இருந்தும் எடுக்கப்படுவதாகக் கூறி பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் 47 குழாய்களை அகற்றினர்.

போராட்டம்
போராட்டம்

இதனால் விளை நிலங்களுக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பயிர்கள் கருகும் நிலை உருவாகியுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் சங்கத்தினர் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இறுதியாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் வழக்கை சந்தித்துக்கொள்ளுமாறு கூறி விவசாயிகளை அமைச்சர் அனுப்பிவிட்டார்.

இதற்கிடையே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் குழாய்களை அகற்றியிருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு பின்னால் நிதி அமைச்சர் குடும்பம் இருக்கிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த கட்டமாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்
போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள்

கம்பம் பள்ளதாக்கு விவசாய சங்கத்தினருக்கு ஆதரவாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் சின்னமனூரில் பாதிக்கப்பட்ட விவசாயி நிலங்களைப் பார்வையிட்டார். 

அப்போது, தேனி மாவட்டம் மட்டுமன்றி முல்லை பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாகக் கூறி 10 லட்சம் ஏக்கர் நிலங்கள் நிதியமைச்சர் பி.டி.ஆர் குடும்பம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களின் சுய லாபத்துக்காக அனுமதியின்றி குழாய்கள் பதித்ததாக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, இதைக் கண்டித்து சின்னமனூரில் இருந்து தேனி கலெக்டர் அலுவலகம் நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார்.

விவசாயிகள்
விவசாயிகள்

அதன்படி, சின்னமனூரில் ஓடைபட்டி, எரசை, கன்னிசேர்வைபட்டி, காமாட்சிபுரம், சின்ன ஒவலாபுரம், வெள்ளையமயம்மாள்புரம், முத்துலாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் ஆயிரம் பேர் சின்னமனூர் காந்தி சிலை அருகே கூடினர். இதனால் விவசாயிகள் தங்கள் பிள்ளைகளைக் கூட பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பவில்லை. கிராமப்புறங்களுக்கு செல்ல வேண்டிய டவுன் பஸ்கள் இயங்கவில்லை.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், கம்பம் பள்ளதாக்கு விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி, அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஜக்கையன், முன்னாள் எம்.பி பார்த்திபன் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது தேனி நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முயன்றபோது போலீஸார் தடைவிதித்தனர். 

போராட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஜக்கையன்
போராட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க அமைப்பு செயலாளர் ஜக்கையன்

போராட்டத்தில் கூடியவர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ``குழாய்களை அகற்ற உத்தரவிட்டது யார் என்பதற்கு பதில் இல்லை. கலெக்டர்தான் இவ்விவகாரம் தொடர்பாக முறையாக அறிக்கையை அரசுக்கு அனுப்பாமல் விவசாயிகளுக்கு தீங்கு செய்துவிட்டார்'' என்றார்.

இதையடுத்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடைக்கப்பட்ட குழாய்களுக்கு நவம்பர் 8-ம் தேதிக்குள் இணைப்பு கொடுக்காவிட்டால் வாக்காளர் அட்டை, ஆதார், ரேஷன் அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. 

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்,  ``இன்றே கலெக்டரிடம் அரசு ஆவணங்களை ஒப்படைத்து தீர்வு காண வேண்டும். ஒருவாரம் தள்ளிப்போடுவது நல்ல தீர்வுக்கு வழிவகுக்காது. எங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க எத்தனை முறைதான் குடும்பத்தோடு ரோட்டுவர முடியும்.  ஏற்கெனவே இவ்விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக இருப்பது நிதி அமைச்சர்தான். அவர்களின் குடும்பத்தினரால் தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது எனப் பேசியவர். தற்போது கலெக்டர்தான் பிரச்னைக்கு காரணம் என்பது போல அவரை பற்றியே மட்டும் பேசிவிட்டு, முதல்வர் நடவடிக்கை எடுப்பார் எனக் கூறுவது பின்வாங்குவது போல உள்ளது'' என்றனர்.

இதுகுறித்து பி.ஆர்.பாண்டியனிடம் கேட்டோம். ``என்னுடைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கவில்லை. ப்ரோட்டாகால் அடிப்படையில் எதையும் செய்ய வேண்டும். குழாய்களை அகற்றுவது குறித்து நீதிமன்ற உத்தரவு எதுவும் இல்லை. ஆனால், நீதிமன்ற உத்தரவு எனக் கூறி மாவட்ட நிர்வாகம் குழாய்களை அகற்றியுள்ளது. நிதியமைச்சர் மற்றும் அவரின் சகோதரர் குறித்து பேச வேண்டியது ஒன்றுமில்லை. ஏற்கெனவே இவ்விவகாரம் முதல்வர் வரை சென்று குழாய்களை இணைத்துக்கொள்ள உத்தரவு வந்துவிட்டது.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்

ஆனால், கலெக்டர் தவறான அறிக்கை கெடுத்துவிட்டார். அவரிடம் விளக்கம் கேட்டேன். சரியான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி குழாய்கள் அகற்றப்படவில்லை என ஒப்புக்கொண்டுவிட்டனர். ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளோம். அதற்குள் நடவடிக்கை இல்லையெனில், அரசு ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டம் நடக்கும். நானும் அதில் பங்கேற்பேன்'' என்றார்.