Published:Updated:

மா, தென்னை, பாக்கு, காய்கறிகள்.... பகுதி நேர விவசாயத்தில் அசத்தும் பாவை!

டிராக்டரில் பாவை
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டரில் பாவை

அனுபவம்

மா, தென்னை, பாக்கு, காய்கறிகள்.... பகுதி நேர விவசாயத்தில் அசத்தும் பாவை!

அனுபவம்

Published:Updated:
டிராக்டரில் பாவை
பிரீமியம் ஸ்டோரி
டிராக்டரில் பாவை

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாவை. குடும்ப உறவினர்கள் பலரும் தொழிலதிபர்களாக, வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், வியாபாரத்தோடு விவசாயத்தையும் முன்னெடுத்து வருகிறார், பாவை . விவசாயத்தில் முன் அனுபவம் இல்லாத நிலையில், வீட்டுத்தோட்ட அனுபவமே இவருக்கு ஆசானாக அமைந்திருக்கிறது. தனது வியாபாரப் பணிகளுக்கிடையில் சேலம் மாவட்டம், கருமந்துறையில் 80 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து அசத்தி வருகிறார் பாவை.

அவரது விவசாய அனுபவங்கள் குறித்துப் பேசினோம். புன்னகையுடன் பேசத் தொடங்கினார் பாவை.

“பி.வி.சி குழாய் தயாரிக்கும் தொழில் செய்றோம். அதை என் கணவர் கவனிச்சுக்கிறார். அவரோட தொழிலுக்கு உதவியா இருக்கிறேன். செடி வளர்ப்புக்கான மெட்டல் தொட்டி தயாரிப்பு, ஆடைகள்ல பெயின்டிங் டிசைன் பண்ற ஃபேஷன் தொழில்களை நடத்துறேன். அதோடு வீட்டு நிர்வாகத்தையும் கவனிச்சுக் கிறேன். இதுக்கிடையே, இயற்கை விவசாயத் தையும் செஞ்சிட்டு வர்றேன். கருமந்துறையில எங்க நிலம் இருக்குது.

ஒரே இடத்துல இல்லாம தனித்தனியே நிலங்கள் இருக்குது. அதுல பாக்கு, தென்னை, மா மரங்கள் இருக்கு. அதிகளவுல இருந்த மா மரங்களை மட்டும் குத்தகைக்கு விட்டுருவோம். பாக்கு, தென்னை மரங்களுக்கு எந்த உரமும் கொடுக்காம வெறும் தண்ணி மட்டும்தான் பாய்ச்சுவோம். அதுலயே வெளைஞ்சு வந்திடும்.

ஒரு ஆர்வத்துல வீட்டுத்தோட்டம் அமைச்சேன். அதுல விளைஞ்ச காய்கறிகளோட சுவை தனித்துவமா இருந்துச்சு. வீட்டுத் தோட்டத்துல என்னோட ஆர்வத்தைப் பார்த்துட்டு, ‘உனக்கு ஆர்வம் இருந்தா, நம்ம நிலங்கள்ல நடக்கிற விவசாய வேலைகளையும் கவனிச்சுக்கோ’னு குடும்பத்தினர் என்கிட்டச் சொன்னாங்க. நானும் மகிழ்ச்சியா அந்தப் பொறுப்பை ஏத்துக்கிட்டேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர், தனது விவசாய அனுபவங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

“இயற்கை விவசாயத்தோட அவசியத்தை புரிஞ்சுகிட்டு தொடர்ந்து இயற்கை விவசாயத்தை அதிகப்படுத்தலாம்னு ஆசைப்பட்டாலும், ‘முழுமையா இது சாத்தியமா’, ‘வருமானம் ஈட்ட முடியுமா?’னு நிறைய கேள்விகள் எழுந்துச்சு. அப்போ பாக்குலயும் தென்னையிலயும் மட்டும் ஓரளவுக்கு வருமானம் கிடைச்சிட்டு வருது. அதனால, செலவுகளைக் கட்டுக்குள் வெச்சு, இயற்கை விவசாயம் சாத்தியமேங்கிற நம்பிக்கையுடன் 6 வருஷத்துக்கு முன்ன விவசாய வேலைகளை அதிகப்படுத்தினேன். ஆரம்பத்துல காய்கறிகள் மட்டும் பயிரிட்டோம். சாதக, பாதக அனுபவங்கள் சேர்ந்தே கிடைச்சது. அதுல இருந்து பல விஷயங்களைக் கத்துகிட்டேன்.

ஆரம்பத்துல விவசாயம் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது. நாத்து நடுறதுல இருந்து களை பறிக்கிற வரை எல்லாத்தையும் ஆர்வமா கத்துக்கிட்டேன். தண்ணீர் பற்றாக்குறை அதிகம் இருந்துச்சு. சொட்டுநீர்ப் பாசனம் அமைச்சோம். சணப்பு, தக்கைப்பூண்டு விதைச்சு நல்லா வளர்ந்ததும் மடக்கி உழவு செஞ்சோம். தொழுவுரத்தையும் பிண்ணாக்கையும் கொட்டி நிலத்தை வளப்படுத்தினோம். படிப்படியா எல்லா நிலத்தையும் இயற்கை விவசாயத்துக்கு ஏதுவா மாத்தினோம். இப்போ ரெண்டு கறவை மாடுகள் இருக்கு. மாட்டுச் சாணத்துல இருந்து பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு இயற்கை உரங்களையும் இடுபொருள்களையும் தயாரிச்சுக்கிறோம். ரசாயன உரங்களே பயன்படுத்தாம, முழுக்கவே இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றோம்’’ என்றவர் டிராக்டர் இயக்கக் கற்றுக்கொண்ட அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘எனக்கு கார், லாரி ஓட்டத் தெரியும். அந்த அனுபவத்துல டிராக்டர் ஓட்ட கத்துக்கிட்டேன். எடைக் குறைவு என்பதுடன், ஓட்டுறதுக்கும் பல்வேறு விவசாய வேலைகளுக்கும் எளிமையா இருக்கும்னு ‘குபேட்டா’ பவர் டிராக்டரை வாங்கினோம். நேரம் கிடைக்கும்போது, நானே டிராக்டரை ஓட்டி, உழவு, களை எடுக்கிற வேலைகளைச் செய்றேன்.

‘‘நேரம் கிடைக்கும்போது, நானே டிராக்டரை ஓட்டி, உழவு, களை எடுக்கிற வேலைகளைச் செய்றேன்.’’

8 ஏக்கர் நிலத்துல நெல் சாகுபடி செய்றோம். வருஷத்துக்கு ரெண்டு போகம். ஒரு போகத்துல கறுப்புக்கவுனி, மாப்பிள்ளைச் சம்பா உள்ளிட்ட பாரம்பர்ய ரகங்களையும், இன்னொரு போகத்துல பொன்னி, இட்லி அரிசி ரக நெல் ரகங்களையும் பயிரிடுவோம். விளையிறதை எங்க குடும்பத் தேவைக்குப் போக, சொந்தக் காரங்களுக்கு மட்டும்தான் கொடுக்கிறோம். கேழ்வரகு, வரகு, சாமைனு சில சிறுதானியப் பயிர்களையும் விதைப்போம். போன வருஷம் முதல் முறையா 5 ஏக்கர்ல மஞ்சள் பயிரிட்டோம். விளைச்சல் அபாரமா இருந்துச்சு. சிறுதானியம், காய்கறிப் பயிர்கள், தானிய வகைப் பயிர்களைப் பாக்கு, தென்னை மரங்களுக்கிடையில ஊடுபயிராதான் பெரும்பாலும் பயிரிடுவோம். நெல்லைத்

தவிர, மற்ற விளைபொருள்களை விற்பனை செய்றோம். விற்பனையில எந்த வில்லங்கமும் இல்லை. உடனே விற்பனையாகிடுது’’ என்று புன்னகையுடன் சொன்னவர், தோட்டத்தில் உள்ள மரங்கள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘உயிர்வேலியா ஏராளமான தேக்கு மரங்கள் வெச்சிருக்கோம். 1,800 பாக்கு மரங்கள், 2,500 மா மரங்கள், 250 தென்னை மரங்கள், 150 பலா மரங்கள், 30 புளிய மரங்களும் விளைச்சல் கொடுக்குது. பெங்களூரா, பங்கனப்பள்ளி, செந்தூரம், நீலம்னு 8 வகையான மா மரங்கள் இருக்கு. இதையும் நாங்களே இயற்கை விவசாய முறையில கவனிச்சுக்கிறோம். ஒவ்வொரு வருஷமும் எல்லாப் பயிர்லயும் விளைச்சல் சரியா இருக்காது. ஏற்ற, இறக்கம் இணையாவே இருக்கும். போன வருஷம் பருவம் தவறிய மழையால மா மரங்கள்ல பூக்களெல்லாம் உதிர்ந்துப்போய் சரியா காய் பிடிக்கல. சொல்லிக்கிற அளவுக்கு வருமானம் கிடைக்கல. ஆனா, பாக்குல இருந்து சில லட்சங்கள் லாபம் கிடைச்சது.

தோட்டத்தில்
தோட்டத்தில்

இப்படி ஒவ்வொரு பயிர்லயும் வருமானம் நிலையா இல்லாட்டியும், கிடைக்கிற லாபத்தை வெச்சு சிரமம் இல்லாம விவசாய வேலை

களைச் செய்றேன். ஏற்காடு அடிவாரத்தில இருக்குற நிலத்திலும், வீட்டுத் தோட்டத்திலும் வீட்டுத் தேவைக்கான காய்கறிகள், கீரைச் செடிகளை வளர்க்கிறோம்’’ என்றவர், தோட்டத்தில் இருக்கும் கால்நடைகள் குறித்துப் பேசினார்.

“குஞ்சு பருவத்துல 50 சிறுவிடை ரகக் கோழிகளைத் தோட்டத்துல மேய்ச்சல் முறையில வளர்க்கிறோம். கொஞ்சம் வாத்து களும் இருக்கு. எதிர்காலத்துல கால்நடைகளை அதிகளவில் வளர்க்கும் திட்டமும்,

சில மதிப்புக்கூட்டல் யோசனைகளும் வெச்சிருக்கேன். இப்போ காய்கறிப் பயிர்களை அதிகளவுல பயிரிட்டுகிட்டு இருக்கோம். காலியா இருக்கிற நிலத்துலயெல்லாம்

பல வகையான பழ மரங்களையும் நட்டிருக்கோம். அதுக்குள்ள இன்னும் போதிய விவசாய அனுபவங்கள் கிடைச்சுடும்.

அப்போ முறையான வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும்னு உறுதியா நம்புறேன்’’ என்றவர் நிறைவாக,

‘‘வாரத்துல ரெண்டு நாள்கள் மட்டும்தான் விவசாய வேலைகளுக்கு நேரம் ஒதுக்க முடியுது. மத்தபடி பணியாளர்கள்தாம் விவசாய வேலைகளைக் கவனிச்சுக்கிறாங்க. என்னைப் பார்த்து என் தோழிகள் பலரும், வீட்டுத் தோட்டம், நிலத்துல இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. மற்ற தொழில்கள்ல கிடைக்காத மனநிறைவு விவசாய வேலையில்தான் கிடைக்குது” என்றார் நம்பிக்கையுடன்.