2,42,000 ஏக்கர்; அமெரிக்காவின் நம்பர் 1 விவசாய நில உரிமையாளர்... என்ன செய்கிறார் பில் கேட்ஸ்?

பில்கேட்ஸ் அமெரிக்காவின் நம்பர் ஒன் விவசாய நில உரிமையாளர் என்றால் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அது முற்றிலும் உண்மை.
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸின் பெயரைக் கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது அவருடைய ஆரம்பகால கம்ப்யூட்டர் புரோகிராமிங் திறன்களும், அவர் உருவாக்கிய கம்ப்யூட்டர் சாம்ராஜ்யமும்தான். இன்று அவர்தான் அமெரிக்காவின் நம்பர் ஒன் விவசாய நில உரிமையாளர் என்றால் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அது முற்றிலும் உண்மை. பில் கேட்ஸ் சத்தமில்லாமல் 2,42,000 ஏக்கர் விவசாய நிலங்களை அமெரிக்காவில் வாங்கியுள்ளார். இன்று அமெரிக்காவின் பெரிய தனியார் விவசாய நில உரிமையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். (ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆய்வின்படி, அவருடைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 121 பில்லியன் டாலர்.)

கடந்த சில ஆண்டுகளாக ஃபுளோரிடா, வாஷிங்டன் போன்ற இடங்களில் அவர் விவசாய நிலங்களை வாங்கத் தொடங்கினார். இன்று அவருக்கென 18 மாநிலங்களில் மிகப்பெரிய விவசாய பண்ணைகளை அவர் உருவாக்கியுள்ளார் என `தி லேண்ட் ஆய்வறிக்கை' (The Land Report) தெரிவிக்கிறது. குறிப்பாக, லூசியானாவில் 69,071 ஏக்கரில் விவசாய பண்ணையும், ஆர்கன்சாஸில் 47,927 ஏக்கர் நிலமும், நெப்ராஸ்காவில் 20,588 ஏக்கர் பரப்பில் பெரிய பண்ணையும் அவருக்கு உள்ளன. இது தவிர, அரிசோனாவின் பீனிக்ஸ் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள 25,750 ஏக்கர் நிலத்தில் அவருக்கு பெரும்பங்கு உள்ளது. தற்போது அந்தப் பகுதி ஒரு புதிய புறநகராக உருவாக்கப்பட்டு வருகிறது.
`தி லேண்ட்' ஆய்வறிக்கையின்படி, அவருடைய விவசாய நிலங்கள் நேரடியாகவும், அவருடைய தனிப்பட்ட முதலீட்டு நிறுவனமான கேஸ்கேட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன. இது தவிர அவரது மற்ற நிறுவனங்களான ஈக்கோலாப் உணவு-பாதுகாப்பு நிறுவனம், வ்ரூம் எனப்படும் பயன்படுத்திய கார் சில்லறை விற்பனை நிறுவனம் மற்றும் கனடிய தேசிய ரயில்வே நிறுவனம் ஆகியவையும் விவசாய நிலங்களில் கணிசமாக முதலீடு செய்துள்ளன.

உலகின் மிகப்பெரிய ஒரு தொழில்நுட்ப கோடீஸ்வரர் அமெரிக்காவின் மிகப்பெரிய விவசாய நில உரிமையாளராக இருப்பார் என்பது பலருக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கலாம். கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேலாக, பில் கேட்ஸ் உலகளவில் விவசாயத்தில் கணிசமாக முதலீடு செய்து வருகிறார். 2008-ல், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சப்-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள சிறு விவசாயிகளிடையே அதிக மகசூல், நீடித்த விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 306 மில்லியன் டாலர் மதிப்பிலான மானியங்களை அறிவித்தது. பின்னர், மாறிவரும் காலநிலையை தாக்குபிடிக்கும் ``சூப்பர் பயிர்கள்” (super crops) மற்றும் அதிக பால் தரும் கறவை மாடுகளின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்துக்காக அதிகளவில் முதலீடு செய்தது. இந்த முயற்சிகளை முன்னெடுப்பதற்காக லாப நோக்கற்ற கேட்ஸ் ஆக் ஒன் நிறுவனத்தையும் பில் கேட்ஸ் கடந்த ஆண்டு அமைத்தார்.
ஆனால், பில் கேட்ஸின் விளைநிலங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, ஒரு குறிப்பிட்ட பகுதி நிலங்கள் இயற்கை பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இப்படி பில் கேட்ஸ் மட்டும் விவசாயத்தில் முதலீடு செய்யவில்லை. இவரைப்போல பல உலக பணக்காரர்கள் விவசாயத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.
`தி லேண்ட்' ஆய்வறிக்கையின்படி உயர்மட்ட தனி நபர் விவசாய நில உரிமையாளர்களின் பட்டியலில் கேட்ஸைப்போல பல பெரும் பணக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர். வொண்டர்ஃபுல் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஸ்டீவர்ட் மற்றும் லிண்டா ரெஸ்னிக் (அவர்களின் நிகர சொத்து மதிப்பு: 7.1 பில்லியன் டாலர்) 190,000 ஏக்கர் நிலங்களில் முதலீடு செய்து, இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றனர்.

அவர்களுடைய விவசாய நிலங்கள் POM வொண்டர்ஃபுல், வொண்டர்ஃபுல் பிஸ்தா மற்றும் வொண்டர்ஃபுல் ஹாலோஸ் மாண்டரின் உள்ளிட்ட பிராண்டுகளுக்கான உணவுப் பொருள்களை பெருமளவில் உற்பத்தி செய்கின்றன. கேட்ஸ் நாட்டின் மிகப்பெரிய விவசாய நில உரிமையாளராக இருக்கலாம். ஆனால், தனிநபர் நில உரிமையாளர் பட்டியலில் அவர் பெயர் முதலிடத்தில் இல்லை. `தி லேண்ட் ஆய்வறிக்கை'யின்படி, அமெரிக்காவில் 100 தலைசிறந்த தனி நபர் நில உரிமையாளர்களின் பட்டியலில், 2.2 மில்லியன் ஏக்கர் பண்ணைகள் மற்றும் காடுகளை வைத்திருக்கும் லிபர்ட்டி மீடியா தலைவர் ஜான் மலோன் முதலிடத்தில் இருக்கிறார். எட்டு மாநிலங்களில் 2 மில்லியன் ஏக்கர் அளவில் பண்ணைகள் அமைத்துள்ள சி.என்.என் ஊடக நிறுவனர் டெட் டர்னர் 3-வது இடத்தில் உள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் கூட மிகப்பெரிய அளவில் விவசாயத்தில் முதலீடு செய்துவருகிறார். மேற்கு டெக்சாஸில் 4,20,000 ஏக்கரில் முதலீடு செய்துள்ள ஜெஃப் இப்பட்டியலில் 25-வது இடத்தில் இருக்கிறார்.