Published:Updated:

களைக்கொல்லி நன்மையா? தீமையா? - ஓர் அலசல்!

களைக்கொல்லி
பிரீமியம் ஸ்டோரி
News
களைக்கொல்லி

அலசல்

“சித்திரை மாதத்தில் பொன்னேர் பூட்டி கோடை உழவு செய்ததால் களைகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. இப்போது களைக்கொல்லிகள் பயன்பாடு அதிகரித்திருப்பதால் உழவு ஓட்டிக் களைகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் வெகுவாக அழிந்து வருகின்றன.

இந்தக் களைக்கொல்லிகள் வேலையாட்களின் வேலையைப் பறித்துக்கொண்டதோடு மண்ணை மலடாக்கும் வேலையையும் செய்து வருகின்றன” என்று பசுமை விகடன் அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார் சேலம் மாவட்டம், ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயியும், ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவருமான சி.வையாபுரி.

களைக்கொல்லி நன்மையா? தீமையா? - ஓர் அலசல்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

களைக்கொல்லி பயன்பாட்டால் ஏற்பட்டு வரும் விளைவுகள் குறித்து அவரிடம் பேசினோம். “களைக்கொல்லி நமது பாரம்பர்யமான உழவு நடைமுறைகளைச் செயலிழக்கச் செய்துவிட்டது. இது மனிதர்கள் உண்ணும் உணவோடும், கால்நடைகளின் தீவனத்தோடும், நிலத்தடி நீரோடும் கலந்து எல்லாவற்றிலும் நச்சுத் தன்மையைப் புகுத்திவிட்டது.

களைகள் பரிணாம வளர்ச்சியில் உருவான ஓர் அற்புதமான தாவரப் படைப்புகள். இவற்றை முற்றிலுமாக அகற்ற முற்பட்டால் காலப்போக்கில் விளைநிலங்கள் எல்லாம் களர் நிலங்களாக மாறிவிடும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நெல் பயிரில் வளரும் களைகள், நெல் பயிர்களுக்குத் தழை உரமாகிவிடும். மானாவாரி புஞ்சைப் பயிர்களில் களை எடுத்தால் அவை கால்நடைகளுக்கான பசுந்தீவனம். கோடிக்கணக்கான உழைப்பாளிகளின் வேலைவாய்ப்பை இழக்கச் செய்து கொண்டிருக்கிறது களைக்கொல்லி. விவசாயிகளும் இந்தக் களைக்கொல்லி வளைக்குள் விழுந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

களைக்கொல்லி நன்மையா? தீமையா? - ஓர் அலசல்!

களைக்கொல்லி என்கிற ரசாயன உயிர்க் கொல்லி, அரிய மூலிகைத் தாவங்களுக்கு இழப்பை உண்டாக்குவதோடு கால்நடை களுக்கான மேய்ச்சல் தளங்களையும் அழித்து வருகிறது. களைக்கொல்லியின் பாதிப்பை உணர்ந்துதான் கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய நிலத்தில் ஆட்களை வைத்தே களை எடுத்து வருகிறேன். அந்தக் களைகளை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். களைக்கொல்லிப் பயன்பாட்டை விவசாயிகளிடையே ஊக்குவிப்பதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் முதன்மையாகத் திகழ்கிறது. களைக்கொல்லி பயன்பாட்டுக்குத் தடை விதிக்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயிலிடம் பேசினோம். “களைக்கொல்லி என்றாலே ‘கொல்’லுதல் என்ற அர்த்தத்தைத்தான் தருகிறது. களைச்செடிகளை அழிக்க ரசாயன மருந்து தெளிப்பது மேல்நாட்டுக் கலாசாரம். நம்முடைய கலாசாரமில்லை. பசுமைப் புரட்சிக்கு முன்பு, நம்நாட்டில் உழவு முறையால் களையைக் கட்டுப்படுத்தி வந்தனர். நம்முடைய நிலங்களில் உள்ள பெரும்பான்மையான களைச்செடிகள் கீரைகள்தான். சோத்துக் கீரை, சேத்துக் கீரை, பண்ணைக்கீரையென விதவிதமான கீரைத் தாவரங்கள் இருந்தன. இந்தக் கீரைகள்தான் நம் வீட்டின் உணவுப் பொருள்கள். களைக் கொல்லிகள் மண்ணில் விழும்போது மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்கள், மண்புழுக்களைப் பாதிக்கும். களைக்கொல்லியால் இவை வேகமாக அழிந்து வருகின்றன. களைக்கொல்லி தெளிப்பதால் மண்ணில் உள்ள இயற்கைச் சத்து, ஹியூமஸ் அளவு குறையும். இதனால் மண்ணின் நலம் குறைகிறது. மண்ணின் நலம் குறைந்தால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். களைக்கொல்லி தெளிக்கும்போது அழியும் மண் உயிர்களை மீண்டும் எரு, மூடாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி உயிர்ப்பிக்கலாம். முடிந்தளவு களைக் கொல்லிகளைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது” என்று வேண்டுகோள் விடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரசாயன களைக்கொல்லிகளைத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஊக்குவித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு இயற்கை விவசாயிகள் மத்தியில் உண்டு. இதுபற்றி அறியத் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முரளி அர்த்தநாரியிடம் பேசினோம். “உலக அளவில் 2 லட்சம் களைச்செடிகள் இருக்கின்றன. கீரைகள், மூலிகைகள், தீவனங்கள் எனப் பலவகையான களைச்செடிகள் இருக்கின்றன. எல்லாக் களைச்செடிகளும் தேவையில்லாதவை என்று சொல்ல முடியாது. எங்கு பார்த்தாலும் நிலங்களில் முளைத்திருக்கும் பார்த்தீனியம் ஒரு மோசமான களைச்செடி. இது அழிக்க வேண்டிய ஒரு களைச்செடி. எல்லாக் களைச்செடிகளும் பயிர்களைவிட வீரியத்தன்மை கொண்டது; விரைவில் வளரும்; விதைகளை அதிகளவில் பரப்பும்; தண்ணீரை எளிதில் உறிஞ்சும். இதனால் பிரதான பயிருக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீர், சத்துகள் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனாலேயே களைகளை அழிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதை அழித்தால்தான் மகசூல் அதிகரிக்கும் என்ற நிலை நிலவுகிறது.

களைக்கொல்லி
களைக்கொல்லி

ஒவ்வொரு பயிருக்கும் எனத் தனித்தனியே களைக்கொல்லிகள் உண்டு. அந்தந்தப் பயிருக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளைத்தான் பயன்படுத்த வேண்டும். அளவுகளைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கக் கூடாது. பெரும்பாலும் தெளிப்பு முறையில்தான் கொடுக்கப்படுகிறது. தற்போது சில களைக்கொல்லிகள் குருனை வடிவில் வருகிறது. விவசாயிகள் நினைப்பது போல் மண் பாதிக்கப்படுமா? என்றால் பெரிதாகப் பாதிப்பு இருக்காது. தெளிக்கப்படும் களைக்கொல்லி மண்ணில் உயிர் வேதி வினை முறையில் கலந்து, மண்ணுக்கும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் களை மேலாண்மையில் வேலை செய்திருக்கிறேன். களைக்கொல்லி மோசமான விளைவுகளை ஏற்படுத்தாது. சொல்லப்போனால் களைக் கொல்லி தயாரிப்பில் கார்பன்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

களைக்கொல்லி
களைக்கொல்லி

பயிர் சாகுபடியில் களைக்கொல்லி மூன்று முறை பயன்படுத்தப்படுகிறது. நடவு செய்த 3 - 5 நாள்களில், 10 - 15 நாள்களில், 30 - 40 நாள்களில் எனப் பயிர்களின் வளர்ச்சியைப் பொறுத்து இருக்கிறது. 120 நாள்களில் வளரும் பயிர்களில் 40 நாள்கள் களை இல்லாமல் பார்த்துக்கொண்டாலே அந்தப் பயிர் நன்றாக வளர்ந்து வந்துவிடும். பூச்சிக்கொல்லி மருந்துகளில் சிவப்பு நிற முக்கோணம் இருக்கும். ஆனால், களைக்கொல்லியில் பச்சை நிற முக்கோணம்தான் இருக்கிறது.

பயிரை வளர்த்தெடுக்கும் ஒரே நோக்கம் தவிர வேறெந்த நோக்கமும் களைக்கொல்லிக்கு இல்லை. அதனால்தான் அதைப் பரிந்துரைக்கிறோம். முன்பெல்லாம் லிட்டர் கணக்கில் அடித்திருந்தாலும், இப்போதெல்லாம் 40 மி.லி, 50 மி.லி என்றுதான் பரிந்துரைக்கிறோம். களைக்கொல்லியைக் கவனமாகப் பயிர்களுக்குக் கொடுக்க வேண்டும். 30 நாள் வளர்ந்த களைச்செடிக்கு 4 நாள்களில் அடிக்கக்கூடிய மருந்தைத் தெளிப்பது, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகத் தெளிப்பது, களைக்கொல்லியைக் கைபம்பில் தெளிக்காமல் விசைத்தெளிப்பான்களில் தெளிப்பது போன்ற செயல்பாடுகளாலேயே களைக்கொல்லியால் மண் பாதிப்படைகிறது. களைக்கொல்லியை ஊக்குவிக்க நாங்கள் ஒன்றும் கெமிக்கல் கம்பெனிகளின் விற்பனை ஏஜென்ட் அல்ல. ‘ஒருங்கிணைந்த களை மேலாண்மை முறையைப் பின்பற்றுங்கள்’ என்றுதான் விவசாயிகளை வலியுறுத்துகிறோம். முதலில் கைக்களை எடுங்கள்; அது முடியவில்லையென்றால் மிஷினில் களையெடுங்கள். கடைசி முயற்சியாகக் களைக்கொல்லியைப் பயன்படுத்துங்கள் என்று வலியுறுத்துகிறோம். விவசாயிகள் களைக்கொல்லி பயன்பாட்டை முழுமையாகப் பின்பற்றிச் செயல்பட்டாலே போதும். எந்த ஆபத்தும் நேராது” என்றார்.