`உலக மக்களின் மனசாட்சியை உலுக்கிய நூல்கள்’ என்று சில நூல்களைத்தான் சொல்ல முடியும். அவற்றில் முக்கியமானது ஜப்பானியக் கிழவன், மசானபு ஃபுகோகா எழுதிய ‘ஒற்றை வைக்கோல் புரட்சி.’ ‘விவசாயத்தின் உச்ச நோக்கம் பயிர்களை வளர்ப்பதல்ல; மாறாக, மனிதர்களை முழுமை பெற்றவர்களாக வளர்த்தெடுப்பதுதான்’ என்று கூறி விவசாயத்துக்கு புதிய பார்வையை வழங்கிய நூல். இயற்கை வேளாண்மைக்கு அப்பால், மனிதகுலத்தின் ஒட்டுமொத்த மனசாட்சிக்கும் வளர்ச்சிக்குமான நூல்.

மசானபு ஃபுகோகா இயற்கையை ஒட்டி விவசாயம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் மட்டுமன்றி, ஏன் அப்படி யோசித்தார் என்பதை விளக்கும் நூலாகவும் இது இருக்கிறது. அவர் ஜப்பானிய மொழியில்தான் எழுதினார். எழுதிப் பல ஆண்டுகள் ஆன பின்னரும் ஜப்பானிய விவசாயிகள் மத்தியில் பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. அந்த நேரத்தில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மண்ணியல் பட்டம் பெற்று கலிஃபோர்னிய வனத்துறையில், காடுகளில் மரங்களை வெட்டுவதால் ஏற்படும் மண் அரிப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டுவந்தார் லேரி கோர்ன் (Larry Korn) என்ற இளைஞர்.
ஒருகட்டத்தில் வாழ்க்கைமீது அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. இனம்புரியாத சோகம். பணியில் பெரிய ஈர்ப்பு இல்லை. உள்ளுக்குள் ஏதோ ஒரு தேடல். அதன் விளைவாக மசானபு ஃபுகோகா பற்றிக் கேள்விப்பட்டு கையில் ஒரு பையோடு அவரிடம் போனார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கையில் பணமில்லை. மனதில் திட்டங்கள் ஏதுமில்லை. ஒரு கூரை வேய்ந்த மண் குடிசையில் இரண்டு ஆண்டுகள் அவரிடம் மாணவராக, சீடராக வாழ்ந்து ஃபுகோகாவின் புரிதல்களை உள்வாங்கினார். ஜப்பானிய மொழியில் ஃபுகோகா எழுதிய `ஒற்றை வைக்கோல் புரட்சி’ நூலை, அதன் ஆன்மா சிதையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1978-ம் ஆண்டு வெளியிட்டார். அதன் பிறகு, ஃபுகோகா உலக விவசாயத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போடும் தத்துவத்தைத் தந்தவராக உலகமெங்கும் அறியப்பட்டார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS`ஒற்றை வைக்கோல் புரட்சி’ ஆங்கிலத்தில் வெளியானதும் உலகின் பல பகுதிகளிலும் சின்ன சின்ன நிலநடுக்கங்கள் நிகழ்ந்தன. `பச்சைப் புரட்சி மண்ணைக் கெடுக்கிறது; விவசாயிகளைக் கடனாளியாக்குகிறது’ என்பதையெல்லாம் பொட்டில் அடித்ததுபோல் உணர்த்தியது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் இந்த நூலை வாசித்தார்; அவருக்குள்ளும் ஒரு நடுக்கமும் பெரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது. வாழ்நாள் முழுவதும் அந்த ஜப்பான் நாட்டு உழவனைப் பற்றிப் பேசிவந்தார்.

ஃபுகோகாவிடம் பயிற்சி முடித்து அமெரிக்கா சென்ற லேரி கோர்ன், புகோஃகாவிடம் கற்றதைத் தன் பாணியில் செயல்படுத்தினார். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இயற்கை விவசாயம், நிரந்தர வேளாண்மை, உள்ளூர் உற்பத்தி-உள்ளூர் நுகர்வு உள்ளிட்டவற்றைப் பரவலாக்கினார். ஃபுகோகாவின் அமெரிக்கப் பயணம் முழுவதும் மொழிபெயர்ப்பாளராக உடனிருந்தார்.
ஃபுகோகா தன் அமெரிக்க அனுபவங்களை நூலாக்கினார். அதையும் லேரி கோர்ன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1982-ம் ஆண்டு, லேரி கோர்ன் தன் பசிபிக் வட அமெரிக்கப் பகுதியில் இயற்கை விவசாயம் மற்றும் நிரந்தர வேளாண்மையைப் பரப்பிய அனுபவங்களை ‘விளைந்து தள்ளும் எதிர்காலம் – வளம் குன்றாத விவசாயத்துக்கான வழி’ என்ற அர்த்தம் தரும் நூலை வெளியிட்டார். அயர்லாந்தின் மேரி ரெனால்டுடன் சேர்ந்து ‘தோட்டத்தில் விழிப்பு’ என்ற பொருள்படும் நூலை எழுதினார்.
அவரின் மகள் லியா அவரைப் பற்றி ஒரு நேர்காணலில், ``அவர் மக்களை இந்தப் பாதைக்கு திசை திருப்பினார். `நாம் இயற்கையிடமிருந்து விலகிவிட்டு, இயற்கையைச் சரிசெய்ய வேண்டும் என்று முயல்கிறோம். இது பிரச்னையைத்தான் பரிசளிக்கும். இந்த இடத்தில்தான் மனிதகுலம் இப்போது உள்ளது’ என்பதைத் தொடர்ந்து விதைத்தார். தன்னுடைய காலத்தைவிட வேகமாக முன்னே ஓடியவராக இருந்தார். அதனால்தான் கையில் ஏதுமின்றி, ஃபுகோகா முன்பு நிற்க முடிந்தது” என்றார்.
ஃபுகோகாவை உலகுக்கு அறிமுகப் படுத்தியதுடன் அவரிடமிருந்து கற்றுணர்ந்த புரிதல்களோடு தன் வாழ்வை நடத்திய லேரி, கடந்த நவம்பர் 19-ம் தேதி பேரியற்கையோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
பல்லாயிரம் தமிழக இளைஞர்களின் இயற்கை விவசாய உத்வேகத்துக்குக் காரணமாக இருந்த லேரி கோர்னுக்குத் தமிழக இயற்கை விவசாயிகள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘அறச்சலூர்’ ரா.செல்வம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இயற்கையில் கலந்த விதைக் காவலன்!
வளையாம்பட்டு வெங்கடாச்சலம். திருவண்ணாமலை அருகேயுள்ள வளையாம்பட்டுக் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர்.

விவசாயம், கணிதம் ஆகிய துறைகளில் புதுக் கோணத்தைக் காட்டியவர். 1990-ம் ஆண்டே விதைகளைச் சேகரிக்கப் பயணம் தொடங்கியவர். நெல் விதைகளுக்கு மட்டுமன்றி சிறுதானிய விதைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். 30 கேழ்வரகு ரகங்கள், 10 தினை வகைகள், 40 நெல் ரகங்களைச் சேகரித்துக் காட்சிப்படுத்தியவர். ‘நன்னன் நாடு’ என்ற பெயரில் இதழ் வெளியிட்டவர்.
‘விதைகள் பண்பாட்டின் அடையாளம்’ என்பதைத் தொடர்ந்து கூறி வந்தவர். தமிழர்களின் கணக்கியலைத் தமிழர்களுக்கு மீள் அறிமுகம் செய்தவர்களில் வெங்கடாச்சலம் முக்கியமானவர். சிந்து சமவெளி அளவைகள் குறித்து ஆய்வு செய்தவர். இயற்கை விவசாயத்தை, விதைகளைத் தமிழர்களின் மரபோடு இணைத்துப் பார்க்கத் தூண்டியவர். இயற்கையை நேசித்த வளையாம்பட்டு வெங்கடாச்சலம், கடந்த 10.11.2019 அன்று தனது 94-ம் வயதில் இயற்கையோடு கலந்தார்.