வெயில் வராது, வெளிச்சம் இருக்கும்; எங்க வீட்டு பால்கனியில் என்ன செடி வளர்க்கலாம்? #DoubtOfCommonMan

கீரைகளை வெளியில் வாங்குவதைத் தவிர்த்து வீட்டிலேயே வளர்த்துச் சாப்பிடலாம்.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், "அடுக்குமாடிக் குடியிருப்பில் என்ன செடிகள் வளக்கலாம்... எங்கள் வீட்டு பால்கனியிலும் வெளிச்சம் வரும். ஆனால், வெயில் வராது. அதனால் அதற்கு ஏற்ற செடிகளைப் பரிந்துரைக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார் வாசகர் அதிதி. அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.


செடி வளர்ப்பதன் மீது அனைவருக்கும் ஆர்வம் மேலோங்கத் தொடங்கியுள்ளது. பெருநகரங்களில் அவரவர்கள் வீடுகளுக்கு ஏற்ப திட்டமிட்டு செடிகள் வளர்க்கிறார்கள். சிலர் தங்கள் வீடுகளின் மாடிப் பகுதியில் `மாடித் தோட்டம்' அமைக்கிறார்கள். சிலர் தங்களின் இருப்பிட வசதிக்கேற்ப சிறு தொட்டிகளில் செடிகள் வளர்க்கும் முயற்சியை முன்னெடுக்கிறார்கள். செடிகள் வளர்ப்பதில் பல நன்மைகளும் உண்டு. நோய்களை விரட்டி, ஆரோக்கியத்தை வளர்க்கும் விதமாகச் சிலர் மருத்துவப் பயனுள்ள செடிகள் வளர்ப்பர். ஒவ்வொரு செடியும் 97 சதவிகிதம் ஈரத்தன்மையை வெளியிடுவதால், சளி, தொண்டையில் தொற்று, வறட்டு இருமல், வறண்ட சருமம் போன்ற பிரச்னைகள் வராது. அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் இருந்தால் கூடச் சீக்கிரமே குணமாகிவிடும்.


செடிகளைப் பராமரிப்பதில் நேரம் செலவிடும்போது மன அழுத்தம் குறையும். இப்படி பல நன்மைகள் செடிகள் வளர்ப்பதில் உண்டு. பலருக்கும் செடிகள் வளர்ப்பதில் ஆர்வமிருந்தும் தங்கள் இருப்பிடங்களில் அதற்கான சாத்தியங்கள் இல்லாமல் இருப்பர். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் இதைப் பற்றிய போதிய தகவல்கள் தெரியாததால் குழம்புகிறார்கள். நம் வாசகர் கேட்ட கேள்வியை எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த `பம்மல்' இந்திரகுமாரிடம் கேட்டோம்.
"அடுக்குமாடிக் குடியிருப்பில் பால்கனியில் வெயில் அவ்வளவாக வராது. எனவே, பால்கனியின் கைப்பிடிகளைத் தொட்டியாக மாற்றிச் செடிகள் வளர்க்கலாம். ரெண்டடிக்கு ஐந்தடி ஸ்டாண்டர்டு கடப்பா கல் கிடைக்கும். அவற்றில் இரண்டு ஸ்லாப் (slab) வாங்கி வைத்து ஒன்றறையடி உயரத்திற்குத் தொட்டியாக மாற்றிக் கீரை வகைகள், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை கன்றும் பால்கனியில் வளர்க்கலாம். இவற்றுக்கெல்லாம் வெயில் அவ்வளவாக தேவையில்லை. வெளிச்சம் வரும் இடத்தில் வளர்க்க ஏதுவான செடிகள் இவை. கீரை மிகச்சிறந்த உணவு. வெளியில் வாங்கும் கீரை இலைகளில் எல்லாம் இப்போது நூறு சதவீதம் பூச்சி மருந்து ஒட்டியிருக்கிறது. எனவே, கீரைகளை வெளியில் வாங்குவதைத் தவிர்த்து வீட்டிலேயே வளர்த்துச் சாப்பிடலாம். கைப்பிடி சுவரை கடப்பா கல் போட்டு தொட்டியாக மாற்றுவதால் அடியில் சூடுவரும். எனவே, கீழே ஒரு மூன்று அங்குலத்துக்குக் கரும்புச் சக்கையைக் கொட்டிவைக்கவும்.

பிறகு, தோட்டமண் ஒரு பங்கு, மாட்டுச் சாணம் ஒரு பங்கு, மீண்டும் கரும்புச் சக்கை இரண்டு இன்ச்சுக்கு மேல் கலந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும். ஏனெனில் தண்ணீரைப் பாதுகாக்கும். தொட்டி கட்டும்போதே அதிகப்படியான தண்ணீர் வெளியாவதற்கு ஏற்ப கட்டவேண்டும். இவ்வாறு தொட்டி அமைத்து அதில் நம் விருப்பத்திற்கேற்ப கீரை விதைகள் தூவி வளர்க்கலாம். புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை கூட வளர்க்கலாம். காய்கறிச் செடிகளுக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வெயில் தேவை. அடுக்குமாடிக் குடியிருப்பில் வெயில்வர வாய்ப்பில்லை. ஆனால், அடுக்குமாடிக் குடியிருப்பில் தக்காளிச் செடி வளர்க்கலாம். தோட்டத்தில் வளர்வது போல் அல்லாமல் குடியிருப்புகளில் வளர்க்கப்படும் தக்காளிச் செடிகள் கொடி மாதிரி வெளியில் பரந்து தொங்கும். எனவே, தக்காளிச் செடி தாராளமாகத் தொட்டியில் வைத்து வளர்க்கலாம். காராமணி, கொடி, அவரையும் வளர்க்கலாம்" எனக் கூறினார்.
இதேபோல விகடனின் #DoubtOfCommonman பக்கத்தில் கேட்க உங்களிடம் கேள்விகள் இருந்தால், இந்தப் படிவத்தில் பதிவுசெய்யவும்.
