Published:Updated:

லட்சங்களில் விலைபோகும் `காட்டுக் காளான்...' காரணம் இதுதான்!

ம. பிரபு

சாதாரண காளான்களைவிடவும் பல மடங்கு அதிகமாக விலைபோகிறது இந்த கார்டிசெப்ஸ் காளான். இதனுடைய மருத்துவ குணங்கள்தான் அதற்குக் காரணம்.

cordyceps mushroom
cordyceps mushroom

காளான் என்பது இயற்கையாக மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர வகை உயிரினம். உலக அளவில் 12,000 முதல் 15,000 வகையான காளான் வகைகள் காணப்படுகின்றன. அவற்றில் 2,000 காளான் இனங்கள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. காளான்கள் பொதுவாக அதிக விலையில், சந்தையில் விற்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தையும் மனித உடலுக்கு முழுமையான சத்துகளையும் கொடுக்கிறது. உணவைத் தவிர, இவை மருத்துவத் துறையிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அப்படிப்பட்ட காளான்களில் மருத்துவ குணம் நிறைந்த காளான்கள் அதிகமான அளவில் இருக்கின்றன. அவற்றுள் கார்டிசெப்ஸ் காளான் (cordyceps mushroom) முக்கியத்துவம் வாய்ந்தது.

Vikatan

பொதுவாக, இந்தக் காளான் வெப்ப மண்டலக் காடுகளில் காணப்படும். அதனால், இந்தக் காளானை 'காட்டுக் காளான்' என்றும் அழைப்பர். இந்தக் காளான்களில் 400 வகைகள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை பூட்டான், சீனா, கொரியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை. மிகவும் பிரபலமான மருத்துவ இனங்கள் கார்டிசெப்ஸ் சினென்சிஸ் மற்றும் கார்டிசெப்ஸ் மிலிட்டரிஸ் ஆகும். நம்மில் காளான்களைப் பற்றி தெரிந்த பலருக்கு கார்டிசெப்ஸ் காளானைப் பற்றி பெரிதாகத் தெரியாது.

கார்டிசெப்ஸ் என்பது ஒட்டுண்ணி பூஞ்சைகளின் ஓர் இனமாகும். இது பூச்சிகளின் லார்வா மற்றும் உடலில் வளரும் காளான் ஆகும். இந்தப் பூஞ்சைகள் அவற்றின் உடலைத் தாக்கும்போது, அவை அதன் திசுக்களை மாற்றி, ஹோஸ்ட்டின் உடலுக்கு வெளியே நீண்ட, மெல்லிய தண்டுகளாக வளர்கின்றன. இந்தக் காளான் ஒரு நீண்ட (20 - 50 மிமீ), விரல் போன்ற உடலைக் கொண்டுள்ளது மற்றும் பொதுவாக பழுப்பு அல்லது ஆரஞ்சு - பழுப்பு நிறமாக இருக்கும். மேற்பரப்பு தோராயமாக துளையிட்டதுபோல காட்சி அளிக்கும். இது பாரம்பர்ய சீன மருத்துவத்தில் நீண்ட காலமாகவும், இந்திய சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. கார்டிசெப்ஸ் பெரும்பாலும் இயற்கை ஆற்றல் ஊக்கியாகக் கருதப்படுகிறது. கார்டிசெப்ஸ் ஆஸ்துமா, மனச்சோர்வு, நீரிழிவு நோய், சோர்வு, அதிக கொழுப்பு மற்றும் மேல் சுவாசக் குழாய் நோய் போன்ற உடல்நலப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் சீன மருத்துவத்தில் கருதப்படுகிறது.

Cordyceps mushroom
Cordyceps mushroom

கார்டிசெப்ஸில் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் ஒரு சிறப்பு வகை சர்க்கரையைக் கொண்டுள்ளது. கார்டிசெப்ஸ் என்பது ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் எதிர்ப்பு அழற்சி விளைவுகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இவை இரண்டும் உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்க உதவும்.

கார்டிசெப்ஸ், உடலில் அடினோசின் ட்ரைபாஸ்பேட் (ஏடிபி) மூலக்கூறின் உற்பத்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. இது தசைகளுக்கு அதிகம் ஆற்றல் வழங்கும். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இன்று பல்வேறு நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு இயற்கை ஊட்டச்சத்தாக இது கொடுக்கப்படுகிறது. இதய ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை அளிக்கிறது.

Vikatan

இவ்வளவு பலன்களைக் கொண்ட கார்டிசெப்ஸ் இன்று பாரம்பர்ய மருத்துவமுறைகள் மட்டுமன்றி, நவீன மருத்துவத் துறைகளிலும் விரிவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இது வட இந்தியாவில் பெரும்பாலும் காணப்படுகிறது. தமிழகத்தில் ஒரு சில காடுகளில் மட்டும் தென்படும் இந்தக் காளானைத் திருப்பூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உற்பத்தி செய்கின்றனர். இந்தக் காளானை உற்பத்தி செய்ய செலவு அதிகம் ஆகும். இது சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. காடுகளில் கிடைக்கும் இந்த அரியவகை காளான் லட்சக்கணக்கில் விலைபோகிறது.