சொந்தச் செலவில் நீர்நிலைகளைத் தூர்வாரும் ஓ.பி.எஸ்! - பணிகள் எப்படி நடைபெறுகின்றன?#DoubtOfCommonMan

மழைக்காலத்துக்கு முன்பாக 10 நீர்நிலைகளைத் தயார்செய்ய வேண்டும் என்பதே இலக்கு. அதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
தேனி மாவட்டத்தில் 30 நீர்நிலைகளைச் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிமராமத்துப் பணியின்கீழ் தூர்வாரிவருகிறது தமிழக அரசு. நீர்நிலைகளின் கரைகள் மட்டுமல்லாமல், நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய வரத்துக் கால்வாய்களையும் மீட்கும் பணியாக, தற்போது நடைபெற்றுவரும் குடிமராமத்துப் பணிக்கு இணையாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது சொந்தச் செலவில் தேனி மாவட்டத்தில் 10 நீர்நிலைகளைத் தூர்வாரிவருகிறார்.

விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் முத்துக்குமார் இருளப்பன் என்ற வாசகர், "ஓ.பி.எஸ் குடும்பத்தினர் பெரியகுளம் பகுதியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்களே, முழுமையாக முடித்துவிட்டார்களா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதுகுறித்து விசாரித்தோம்.
ஆண்டிபட்டி மயிலாடும்பாறை கோவிலான்குளம், கோடாங்கிபட்டி கணக்கண்குளம், தாடிச்சேரிக் கண்மாய், ஜங்கால்பட்டி வண்ணான்குளம், எரசை நாயக்கன்குளம், வெப்பங்கோட்டை மாசாணம்குளம், மீனாட்சிபுரம் செட்டிகுளம், தென்கரை பாப்பையன்பட்டிகுளம், பாலகோம்பை ஊசிமலைக்கண்மாய், தேவாரம் பெரியதேவிக் குளம் ஆகிய நீர்நிலைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் அனைத்தையும் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் கவனித்து வருகிறார். பணிகள் தொய்வில்லாமல் நடக்கிறதா என அடிக்கடி தன் ஆட்களை வைத்து மேற்பார்வை செய்துகொள்கிறார். சில நேரங்களில் அவரே நேரடியாகச் சென்றும் ஆய்வுசெய்கிறார். மழைக்காலத்துக்கு முன்பாக 10 நீர்நிலைகளைத் தயார் செய்ய வேண்டும் என்பதே இலக்கு. அதை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சில வாரங்களில் சில நீர்நிலைகளில் முழுமையாகப் பணிகள் முடிந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

அந்தந்தப் பகுதிகளில் உள்ள, தனக்கு நம்பிக்கையான கட்சி நிர்வாகிகள் மற்றும் கான்ட்ராக்டர்களை இந்தப் பணியில் அமர்த்தியிருக்கிறார் ஓ.பி.எஸ். மேலும், அந்தந்த நீர்நிலைகளால் பயன்பெறும் ஆயக்கட்டுதாரர்களை வைத்து குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் தொடர்ந்து வேலை நடக்கிறதா எனக் கண்காணிப்பது மட்டுமல்ல, மணல் திருட்டு நடைபெறாமல் இருக்கவும் அக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்படி எல்லாம் பாசிட்டிவாக இருக்க, மைனஸ்களும் இல்லாமல் இல்லை. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய பொறுப்பு, அதைச் சீர்செய்யும் துணை முதல்வரிடம் உள்ளது. அந்தவகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகத் தீர்க்கமான முடிவை எடுக்க மறுக்கிறார் ஓ.பி.எஸ்.
தமது செலவில் தூர்வாரப்படும் நீர்நிலைகளில் ஒன்றான தென்கரை பாப்பையன்பட்டி குளத்தில் பணிகளைத் தொடங்கி வைக்க வந்த ஓ.பி.எஸ், குளத்தின் ஓரத்தில் தட்டாம்பயறு சாகுபடி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்துவிட்டார். உடனே அருகிலிருந்த அதிகாரிகளை அழைத்து, ``யார் விவசாயம் பார்க்கிறார்கள்? உடனே அதை எடுத்துவிடுங்கள்…” என்றார். அதற்கு “அது, நமக்கு வேண்டியவர்கள்…” என அவர்கள் சொல்ல… “யாரா இருந்தா என்ன? அது என்னோடதா இருந்தாலும் சரி, என் பையன், என் தம்பியா இருந்தாலும் சரி, அதை எடுத்துவிடுங்கள்…” என்று கடுகடுத்தார்.

அடுத்த நாளே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தென்கரை, பெரியகுளம் அருகே உள்ள பகுதி என்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் தனக்குத் தெரிந்தவராகத்தான் இருப்பார் என்ற முறையில் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். ஆனால், மற்ற இடங்களில், “எதுக்கு வம்பு” என இவர் ஒதுங்கிக்கொள்வதாக மக்கள் நினைக்கிறார்கள்.
பாப்பையன்பட்டி குளம்போல, அனைத்து நீர்நிலைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தீவிர நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் என விவசாயிகள் கருதுகிறார்கள். ஆனால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டால் சில இடங்களில் சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகூட ஏற்பட வாய்ப்பிருப்பதை ஓ.பி.எஸ் அறிவார். அதனால்தான் மேம்போக்காக, நீர்நிலைகளைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்துவதுடன் நிறுத்திக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்.
எது எப்படியோ, மழைபெய்தால் நீர்நிலைகளில் தண்ணீர் சேகரிக்க முடியும். அதுவரை மகிழ்ச்சியே!
