பிரீமியம் ஸ்டோரி
‘ஒட்டுரக நெல், மண்ணுக்கும் சூழலுக்கும் ஏற்றதாக இல்லை’ என்பதை உணர்ந்த விவசாயிகள், மீண்டும் மருத்துவ குணம் மிக்கப் பாரம்பர்ய நெல் சாகுபடிப் பக்கம் திரும்பிவருகின்றனர்.

இதைப்போல உணவிலும் பாரம்பர்ய அரிசியின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துவருகிறது. கருத்தகார் அரிசியை உணவில் தொடர்ந்து பயன்படுத்தி, அதே ரக நெல்லை சொந்தமாகச் சாகுபடி செய்து தன் தேவைக்குப் போகப் பிறருக்கு விற்பனை செய்துவருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரமோகன்ராய்.

கருத்தகார் நெல் வயல்
கருத்தகார் நெல் வயல்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள கண்டிகைப்பேரி கிராமத்தில் இருக்கிறது வீரமோகன்ராயின் நெல் வயல். அறுவடைப் பணிகளில் முனைப்பாக இருந்தவரைச் சந்தித்தோம். “கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பக்கத்துல இருக்குற வடக்கு தாமரைக்குளம்தான் எனக்குச் சொந்த ஊர். அடிப்படையில விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பள்ளி, சட்டக் கல்லூரியில படிச்சுக்கிட்டிருந்த போதே வரப்பு வெட்டுறது, களை எடுக்குறதுனு சின்னச் சின்ன வேலைகளைச் செய்வேன். நாகர்கோவிலிலிருந்து தினமும் வள்ளியூருக்கு வந்துட்டு போவேன். 2007-ம் வருஷத்துல இருந்து வள்ளியூரிலேயே ஆபீஸ் அமைச்சு, குடும்பத்தோட இங்கே வந்துட்டேன். 2012-ம் வருஷம் என் ஆபீஸுக்கு பணகுடியைச் சேர்ந்த சமுத்திரபாண்டி மகேஷ்வரன் வந்தார்.

‘நான் ஒரு இயற்கை விவசாயி. பாரம்பர்ய நெல் ரகங்களை இயற்கை முறையில சாகுபடி செஞ்சு அரிசியாகவும் அவலாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சுட்டுவர்றேன். நான் மட்டுமில்ல... என்னைப்போல பணகுடியைச் சுற்றிலும் 15 இயற்கை விவசாயிகள் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்யறாங்க. ஒரு தடவை இந்த நெல் ரகங்கள்ல ஏதாவது ஒண்ணைச் சமைச்சு சாப்பிட்டுப் பாருங்க’னு சொல்லி, பாரம்பர்ய நெல் ரகங்களின் மருத்துவ குணம் அடங்கிய ஒரு நோட்டீஸையும் கொடுத்தார்.

ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, கருத்தகார், காட்டுயானம் நெல் ரகங்கள் ஒவ்வொண்ணுலயும் ஒரு கிலோ வாங்கி, சமைச்சுப் பார்த்தேன்.

அதுல சாப்பாட்டுக்கும் பழைய சாதத்துக்கும் கருத்தகார் சிறப்பானதா தெரிஞ்சுது.

ஒரு வருஷம் வரைக்கும் தொடர்ந்து அவரிடமே வாங்க ஆரம்பிச்சேன். பிறகு, `நாமே விவசாயம் செஞ்சா என்ன...’னு ஒரு யோசனை தோணிச்சு. மகேஷ்வரனை வரச்சொல்லி, ‘நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். இந்த ஊர்லயே நிலம் வாங்கி, கருத்தகார் சாகுபடி செய்யலாம்னு ஒரு யோசனை இருக்கு’னு சொன்னேன்.

நெல் வயலில் வீரமோகன்ராய்
நெல் வயலில் வீரமோகன்ராய்

சந்தோஷப்பட்ட அவர் என்னை உற்சாகப்படுத்தினார். ரெண்டு மாசத்துல மூணு ஏக்கர் நிலத்தையும் வாங்கினேன்.

அவர் சொன்னபடியே பலதானிய விதைப்பு, அடியுரமா மட்கிய தொழுவுரம், மண்புழுவுரம் போட்டு மண்ணை வளப்படுத்தினேன். முதல் சாகுபடியிலேயே கணிசமான மகசூல் கிடைச்சுது.

ஆறு வருஷமா கருத்தகார் நெல்லை மட்டும்தான் சாகுபடி செஞ்சுட்டு வர்றேன்” என்றவர், நிறைவாக வருமானம் பற்றிப் பேசினார்.

‘‘இந்த முறை ஒரு ஏக்கருக்கு 1,812 கிலோ நெல் கிடைச்சிருக்கு. இதை அரிசியாக்கினால் 1,250 கிலோ கிடைக்கும். இதில் 200 கிலோ வீட்டுத் தேவைக்குப் போக மீதமுள்ள 1,050 கிலோ அரிசியை ரூ.80-க்கு விற்பனை செஞ்சுடுவேன்.

அந்த வகையில் 1,050 கிலோ அரிசி விற்பனை மூலம் ரூ,84,000 வருமானம் கிடைக்கும். இதில், உழவு, விதைப்பு, களை, இடுபொருள் தயாரிப்பு, தெளிப்புக்கூலி, அறுவடை, அரவைக்கூலி, போக்குவரத்துனு 30,000 ரூபாய் செலவு போக மீதமுள்ள 54,000 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.

அறுவடையில் கிடைச்ச வைக்கோலை 72 கட்டுகளாகக் கட்டிவெச்சிருக்கேன். ஒரு கட்டு 115 ரூபாய்க்கு விற்பனை செஞ்சா, அதன் மூலம் ரூ.8,280 உபரி வருமானமாகக் கிடைக்கும். அரிசியை வள்ளியூர் வட்டார மகேந்திரகிரி பாரம்பர்ய விவசாயிகள் சங்கம் மூலமா விற்பனை செய்யறதால விற்பனைக்குப் பிரச்னை இல்லை” என்றார் உற்சாகத்துடன்.

தொடர்புக்கு, வீரமோகன்ராய், செல்போன்: 94435 79615

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

ரு ஏக்கரில் கருத்தகார் நெல் நடவு செய்ய வீரமோகன்ராய் கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

வழக்கறிஞரை விவசாயியாக மாற்றிய கருத்தகார்!

கருத்தகார் நடவு செய்ய சம்பா (கார்த்திகை) மற்றும் கார் (வைகாசி) ஆகிய இரண்டு பட்டங்களும் ஏற்றவை. இதன் வயது 125 நாள்கள். எந்தப் பட்டத்தில் நடவு செய்கிறோமோ அந்தப் பட்டத்துக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்பே உழவுப் பணிகளைத் தொடங்கிவிட வேண்டும். 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். 2-வது உழவுக்கு முன் இரண்டு டிராக்டர் மட்கிய தொழுவுரத்தைக் கொட்டி, அதைப் பரப்பி உழவு செய்ய வேண்டும். பிறகு பலதானிய விதைப்பு விதைத்து, 45-வது நாளில் மடக்கி உழ வேண்டும். அப்போதே நாற்றங்கால் தயாரிப்பையும் தொடங்கிவிட வேண்டும். ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கான நாற்று உற்பத்தி செய்ய ஒன்றரை சென்ட் பரப்பளவில் நாற்றங்கால் தேவை. ஒரு ஏக்கருக்கு 10 கிலோ விதைநெல் தேவை.

ஒரு பெரிய பாத்திரத்தில் விதை நெல்லைப் போட்டுக் களைந்தால் மிதக்கும் பொக்கு போன்றவற்றை நீக்கிவிடலாம். பின்னர் ஒரு சணல் சாக்கில் விதைநெல்லைப் போட்டு நீர் நிரம்பிய பெரிய பாத்திரத்திலோ, தொட்டியிலோ சாக்கை மிதக்கவிட வேண்டும். 12 மணி நேரம் தண்ணீரில் வைத்து, பிறகு வெளியில் எடுத்து சாக்கின் மீது 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா தெளித்து, அடுத்த 12 மணி நேரம் தனி அறையில் வைத்து வைக்கோலால் மூடிவிட வேண்டும். வைக்கோல் சூட்டினால் நெல் விதைகள் முளைப்புவிடும். மறுநாள் நாற்றங்காலில் விதைநெல்லை விதைக்க வேண்டும். ஐந்து முதல் ஏழு நாள்களில் முளைப்பு தெரியும். 15 முதல் 20 நாள்களுக்குள் நாற்றுகளைப் பறித்து வயலில் நடவு செய்ய வேண்டும்.

நடவுக்கு முன்பாக பஞ்சகவ்யா கரைசலில் நாற்றுகளின் வேர்ப்பகுதியை மூழ்கச் செய்து எடுத்து (இதனால் வேர் தொடர்பான நோய்கள் தாக்காது) நாற்றுக்கு நாற்று அரையடி, வரிசைக்கு வரிசை ஓரடி இடைவெளியில் நட வேண்டும். 20 மற்றும் 40-ம் நாளில் களை எடுக்க வேண்டும். 20-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசன நீரில் கலந்துவிட வேண்டும். 25-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒரு முறை மூலிகைப் பூச்சிவிரட்டி, பஞ்சகவ்யாவைச் சுழற்சி முறையில் கைத்தெளிப்பானால் தெளித்துவர வேண்டும்.

பூச்சிவிரட்டி என்றால் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பூச்சிவிரட்டியுடன், 200 மி.லி நாட்டுமாட்டுச் சிறுநீர் கலந்தும், பஞ்சகவ்யா என்றால் 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யாவும் கலந்து தெளிக்க வேண்டும். பௌர்ணமி நாள்களில் பூச்சிகளின் வளர்ச்சி அதிகமாகும் என்பதால், பௌர்ணமிக்கு மூன்று நாள்களுக்கு முன்னரே பூச்சிவிரட்டி தெளித்தால் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். 65 முதல் 70-ம் நாளில் கதிர் பிடிக்கும். 75 முதல் 80-ம் நாளில் பால் பிடிக்கும். 95-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் தொடங்கும். 115 முதல் 125-ம் நாள்களுக்குள் அறுவடை செய்துவிடலாம்.

மலச்சிக்கலைத் தீர்க்கும் கருத்தகார்

ருத்தகார் அரிசியில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் நன்கு ஜீரணமாகும். மூலம், மலச்சிக்கல் தீரும். மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு ‘முளைக்கீரை-கருத்தகார் அரிசிக் கஞ்சி’ சிறந்த மருந்து. இந்தக் கஞ்சி தயாரிக்க ஒரு கட்டு முளைக்கீரை, 100 கிராம் கருத்தகார் அரிசி, 15 கிராம் எள், 50 கிராம் கொள்ளு ஆகியவை தேவை. முதலில் முளைக்கீரையை அலசி ஆய்ந்து நறுக்கி வைத்துக்கொள்ளவும். எள், கொள்ளுவை வாணலியில் வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கருத்தகார் அரிசியை ஒன்றிரண்டாக உடைத்துப் பாத்திரத்தில் போட்டு வேகவைக்க வேண்டும். அரிசி வெந்ததும் நறுக்கிய முளைக்கீரை, வறுத்த எள், கொள்ளு ஆகியவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, கஞ்சிப் பதம் வந்தவுடன் இறக்கிக் குடிக்க வேண்டும். இதனால் மலக்கட்டு உடைந்து மலம் எளிதாக வெளியேறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு