Published:Updated:

கீழ்பவானி வாய்க்கால் உடைந்ததால் வெளியேறும் தண்ணீர்... விவசாயிகள் சொல்வதென்ன?

கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பு

வாய்க்கால் உடைப்பை சரி செய்ய 1 வாரம் ஆகும். கீழ்பவானி பாசன பகுதிகளில் தற்போதுதான் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படும். தற்போதைய நிலையால் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கீழ்பவானி வாய்க்கால் உடைந்ததால் வெளியேறும் தண்ணீர்... விவசாயிகள் சொல்வதென்ன?

வாய்க்கால் உடைப்பை சரி செய்ய 1 வாரம் ஆகும். கீழ்பவானி பாசன பகுதிகளில் தற்போதுதான் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாகத் தண்ணீர் தேவைப்படும். தற்போதைய நிலையால் பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் விளைச்சல் பாதிக்கும் அபாயம் உள்ளது.

Published:Updated:
கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பு

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து செல்லும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங் களைச் சேர்ந்த 2,07,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. அணையிலிருந்து 200 கி.மீ தூரமுள்ள இந்த வாய்க்காலில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது.

மதகு உடைந்ததால் கிளைவாய்க்காலின் வழியே வெளியேறும் தண்ணீர்.
மதகு உடைந்ததால் கிளைவாய்க்காலின் வழியே வெளியேறும் தண்ணீர்.

மண் வாய்க்காலாக உள்ளதால் வாய்க்கால் உடைவதைத் தடுக்கவும், இந்த வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரில் 52 சதவிகிதம் கசிவு நீராக வெளியேறி விடுவதாலும் வாய்க்காலை பலப்படுத்த கீழ்பவானி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இக்கோரிக்கையை 2021-ல் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி சீரமைப்பு பணிகள் தொடங்கி 13 சதவிகிதம் பணிகள் செய்யப்பட்ட நிலையில் வாய்க்காலை சீரமைக்க ஆயக்கட்டு அல்லாத விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கீழ்பவானி பிரதான வாய்க்காலை பலப்படுத்தும் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

கீழ்பவானி கால்வாய்
கீழ்பவானி கால்வாய்

தற்போது பலமிழந்து காணப்படும் கீழ்பவானி வாய்க்காலில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. கடந்த 20 நாள்களுக்கு முன் நசியனூர் அருகே வாவிக்கடை பகுதியில் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் 5 லோடு கான்கிரீட்டை கொட்டி கரையைப் பலப்படுத்தினர். ஒரு சில நாள்களுக்குள் 1 பர்லாங் தள்ளி மீண்டும் வாய்க்கால் உடைந்து தண்ணீர் வெளியேறி விளைநிலங்களில் புகுந்தது. அங்கும் 2,000 மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடைப்பு சரி செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை கீழ்பவானி பிரதான வாய்க்காலின் 6-வது மைல் பகுதியான சத்தியமங்கலத்தை அடுத்த செண்பகபுதூர், சங்க நகரம் பகுதியில் இருந்து கிளை வாய்க்கால் பிரியும் பகுதியில் இடதுகரையின் மதகுகளும், கரையும் உடைந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறியது. இதனால் அக்கம்பக்கத்தில் உள்ள நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயலில் நீர் புகுந்தது. மேலும், சாலையின் மையப்பகுதியில் பெரிய துவாரமும் ஏற்பட்டு அந்த வழியே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் அதிக அளவில் தண்ணீர் வெளியேறி வீணாவதால் பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டது.

பெரியசாமி
பெரியசாமி

இதுகுறித்து கீழ்பவானி ஆயக்கட்டு பாசன நில உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பெரியசாமி கூறியதாவது,
``கீழ்பவானி பிரதான வாய்க்காலில் உடைப்பு ஏற்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. தற்போது 6வது மைல் பகுதியில் ஏற்பட்டுள்ள உடைப்பின் காரணமாக வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் நெல் நடவு செய்துள்ள வயல்களில் புகுந்து விட்டதால் தண்ணீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது.

இதனால் இப்பகுதியில் மட்டும் குறைந்தது 5,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படும். அதுமட்டுமன்றி, வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் 50,000 ஏக்கரில் நடவு செய்துள்ள நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் கருகும் அவலம் ஏற்படும். ஏனெனில், வாய்க்கால் உடைப்பை சரி செய்ய 1 வாரம் ஆகக்கூடும். கீழ்பவானி பாசன பகுதிகளில் தற்போதுதான் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் கட்டாயம் தண்ணீர் தேவைப்படும். தற்போதைய நிலையால் தண்ணீர் கிடைக்காமல் விளைச்சல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை தாமதமின்றியும், தடைகள் ஏதுமின்றி செய்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

கீழ்பவானி ஆயக்கட்டு பாசன விவசாயி பொன்னையன் கூறுகையில், ``கடந்த ஆண்டே கீழ்பவானி வாய்க்காலின் கரைகளைப் பலப்படுத்தி இருந்தால் கரை பலவீனமடைந்து உடைப்பு ஏற்பட்டிருக்காது. ஒரு சிலர் இதில் அரசியல் செய்ததாலும், நீதிமன்றத்தை அணுகியதாலும் இப்பணி பாதிக்கப்பட்டது. இருப்பினும், காவல் துறை உதவியுடன் வாய்க்கால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளதால் அதை ஏற்று, பாசன காலம் முடிந்ததும் வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

பொன்னையன்
பொன்னையன்

கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கீழ்பவானி வடிநில கோட்ட நீர்பாசன செயற்பொறியாளர் கண்ணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, ``கீழ்பவானி வாய்க்காலில் எந்த உடைப்பும் ஏற்படவில்லை. சாலையின் மையத்தில் மட்டுமே ஒரு பொத்தல் ஏற்பட்டுள்ளது. அவ்வளவுதான்" என்கிறார்.

கீழ்பவானி வாய்க்காலுக்கு விடிவு பிறக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு!