Published:Updated:

`அமோக விளைச்சல்.. விலைதான் கிடைக்கலை!’ - சாமந்திப்பூ சாகுபடியில் சாதனை விவசாயியின் வேதனை

ரவிசங்கரின் மகசூலைக்கண்டு, அருகில் உள்ள வேட்டங்குடி, நாணல்படுகை, கீரங்குடி, மாதிரவேளூர், தாண்டவன் குளம் போன்ற கிராமங்களில் இருந்து பல விவசாயிகள் சாமந்திப்பூ சாகுபடி செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

சாமந்திப்பூ சாகுபடியில் ஏக்கர் ஒன்றுக்கு 4 டன் அறுவடை செய்து தோட்டக்கலைத் துறையின் பாராட்டைப் பெற்றிருக்கும் விவசாயி, கொரோனா ஊரடங்கால் பூக்களின் விற்பனைச் சரிந்து லாபத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.

ரவிசங்கர்
ரவிசங்கர்

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் பொன்னி, ``கடந்த மாசி பட்டத்திற்கு அதிக லாபம் ஈட்டித்தரும் 90 நாள் பயிரான செண்டுமல்லி எனப்படும் சாமந்திப்பூ சாகுபடியை செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு, இலவசமாக விதைகளும் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும் என்றும், பயிரிட்ட 50 நாளிலிருந்தே அறுவடை செய்யலாம் என்றும், குறைந்த நாளில் நல்ல வருமானம் பெறலாம் என விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று கொள்ளிடம் அருகேயுள்ள தண்டேசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவர் தனக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் சாமந்திப்பூ சாகுபடி செய்தார். அதிகபட்சமாக 2 டன் அளவே அறுவடை செய்ய முடியும் என்பதை மாற்றி 4 டன்னுக்கும் மேலாக அறுவடை செய்து சாதனை படைத்திருக்கிறார்.

ரவிசங்கரிடம் பேசினோம்.. ``எனக்குத் தோட்டக்கலை துறையிடமிருந்து சுப்பீரியர் எல்லோ என்ற சாமந்திப்பூ விதைகளைக் கொடுத்தார்கள். அதைக் குழித்தட்டு நர்சரி மூலம் செடியாக்கி நடவு செய்தேன். இந்த வகையில் எனக்குச் செலவு வெறும் ரூ.5,000 தான். ஆனால், நான் வெளியில் கன்றுகள் வாங்கி நடவு செய்திருந்தால் ரூ.25,000 செலவாகியிருக்கும். கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நடவு செய்தேன். ஏப்ரல் 10-ம் தேதி முதல் பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. நல்ல மகசூல். எனது பொல்லாத காலம். கொரோனா ஊரடங்கு நேரமாகிப்போனது. கடைகள் இல்லை. போக்குவரத்து இல்லை என்றாலும் மனம் தளராமல் நானே அருகிலுள்ள சீர்காழி, மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சிதம்பரம், புவனகிரி என எல்லா ஊர்களுக்கும் சென்று விற்பனை செய்தேன்.

சாமந்திப்பூ
சாமந்திப்பூ

ஒரு கிலோ ரூ.50-க்கு விற்க வேண்டிய பூவை வெறும் ரூ.10-க்கு விற்க வேண்டியதாயிற்று. என்னால் தினமும் 10 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடிந்தது. தற்போது விலை ஏறியிருக்கிறது. சுமார் ரூ.70,000 செலவு செய்த எனக்கு இருமடங்கு லாபம் கிடைத்திருக்கும். அதில் கொஞ்சம் குறைந்திருக்கிறது. பரவாயில்லை. என்னைப் பார்த்து அருகிலுள்ள விவசாயிகள் பலரும் சாமந்திப்பூ சாகுபடியில் ஈடுபட இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் பொன்னியிடம் பேசினோம். ``விவசாயி ரவிசங்கருக்கு அரசின் இலவச விதைகளைத் தந்து, போதுமான தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கினோம். அவரும் ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்து அறுவடையில் அதிக மகசூல் எடுத்து சாதனை படைத்திருக்கிறார். கொரோனா ஊரடங்கால் பூக்களை வெளியில் எடுத்துச் சென்று விற்க முடியாமல் தவித்த, அவருக்கு இ-பாஸ் வழங்கினோம்.

தோட்டக்கலை உதவி இயக்குநர் பொன்னி
தோட்டக்கலை உதவி இயக்குநர் பொன்னி

தற்போது விலை ஏறியிருக்கிறது. இன்னும் ஒரு டன் மகசூல் பெறுவேன் என்று கூறியிருக்கிறார். ரவிசங்கரின் மகசூலைக்கண்டு, அருகில் உள்ள வேட்டங்குடி, நாணல்படுகை, கீரங்குடி, மாதிரவேளூர், தாண்டவன் குளம் போன்ற கிராமங்களில் இருந்து பல விவசாயிகள் சாமந்திப்பூ சாகுபடி செய்ய முன்வந்திருக்கிறார்கள். முன்மாதிரி விவசாயியாக உள்ள ரவிசங்கருக்கு அரசின் விருது கிடைக்க பரிந்துரை செய்ய உள்ளேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு