Published:Updated:

கால்நடைகளின் 'காப்பான்!'

காப்பகத்தில் சாய் விக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
காப்பகத்தில் சாய் விக்னேஷ்

சேவை

கால்நடைகளின் 'காப்பான்!'

சேவை

Published:Updated:
காப்பகத்தில் சாய் விக்னேஷ்
பிரீமியம் ஸ்டோரி
காப்பகத்தில் சாய் விக்னேஷ்

சாலையில் அடிபட்டும், நோய்வாய்ப்பட்டும் கவனிக்க ஆளின்றித் தவிக்கும் பிராணி களைப் பலநேரம் கண்டும் காணாமலும் கடந்து செல்கிறோம். அவற்றுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தாலும்கூட, நம்முடைய வேலை மற்றும் குடும்பச் சூழல்கள் காரணமாக உதவி செய்ய முடிவதில்லை.

ஆனால், இப்படி ஆதரவற்ற உயிர்களுக்காகவே காப்பகம் நடத்தி யாராவது களத்தில் இறங்கினால்தானே மாற்றத்துக்கு வழி பிறக்கும். அந்த வகையில் ஆதரவற்ற பிராணிகளுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்பாந்தவனாக உதவும் சாய் விக்னேஷ், அவற்றை மீட்டு அடைக்கலமும் தருகிறார்.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி நீர்த்தேக்கம் அருகிலுள்ள சென்றாயன் பாளையத்தில் மறுவாழ்வு மையத்தை நடத்திவருகிறார். பசு, எருமை, காளை, நாய், ஆடு, கோழி, பூனை, முயல் உள்ளிட்ட ஏராளமான பிராணிகளைப் பராமரித்து வருகிறார். விடுமுறை தினம் ஒன்றில் காப்பக வேலையிலிருந்த சாய் விக்னேஷை சந்தித்தோம்.

“என்னோட சின்ன வயசுல எங்க வளர்ப்பு நாய் ஒண்ணு புற்றுநோய்ல இறந்துடுச்சு. அப்போதிருந்து நாய்கள் மேல ரொம்பப் பாசம் உண்டாகிடுச்சு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பேன். பிறகு, அதைப் பழக்கப் படுத்திகிட்டேன். இந்த நிலையில சென்னையில பெருவெள்ள பாதிப்புல, தெரு நாய்களோட நிலைமை ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்துச்சு. அதுல ரெண்டு நாய்களை மீட்டு, சிகிச்சை கொடுத்து எங்க வீட்டுல வளர்க்க ஆரம்பிச்சேன். அப்படி ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல எங்க வீட்டுல 20 நாய்களுக்கு மேல பெருகிடுச்சு. இதனால, அக்கம்பக்கத்து வீட்டுல நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சாங்க. வீடு மாறினாலும் அங்கயும் இந்தச் சிக்கல்தான். அதனால நிறைய வீடுகள் மாறினோம். ஒருகட்டத்துல நிரந்தரத் தீர்வுக்கு வழிதேடினப்போதான், குடும்ப நண்பர் சிவமணி இந்த இடத்தைக் கொடுத்து உதவினார்.

நாய்களுடன்
நாய்களுடன்

இது 8 ஏக்கர் நிலம். எங்க குடும்ப நிலத்தை வித்து, அதுல கிடைச்ச பணத்துல காப்பகத் துக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குனேன். ஆர்வமுள்ள சிலரும் உதவி செஞ்சாங்க. இந்தக் காப்பகத்துல சில நாய்களை மட்டுமே ஆரம்பத்துல வளர்த்தேன். கன்னுக்குட்டிகள், 10 வயசுக்கு உட்பட்ட மாடுகள், கருவுற்ற பசு மாடுகளை யெல்லாம் சட்டப்படி கொல்லக் கூடாது. ஆனா, சட்டத்துக்குப் புறம்பா இறைச்சிக்காக விற்பனை செய்றது அதிகம் நடக்குது.

அதே மாதிரி, பூனை, எருமை உள்ளிட்ட பிராணிகளும்கூட மனிதத் தொந்தரவு களுக்குள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுங்களுக்கு உரிமையாளர்கள் இருந்தா, அவங்க அனுமதியோடு என்னோட காப்பகத்துக்குக் கொண்டு வந்து வளர்ப்பேன்.

தவிர, பிராணிகளுக்கு எதிரான குற்றச் செயல்கள்ல ஈடுபடுறவங்க மேல காவல் துறையில புகார் கொடுப்பேன். மீட்கப்படுற விலங்குகள்ல சிலதைக் காப்பகத்துல வளர்க்க அனுமதிப்பாங்க. இப்ப காப்பகத்துல 90-க்கும் அதிகமான உருப்படிகள் இருக்கு” என்றவர் உணவு வைப்பதில் கவனமானார்.

பல்வேறு அச்சுறுத்தல்களையும் மீறி, பிராணிகள் நலனுக்கான பணிகளைச் செய்துவரும் சாய் விக்னேஷ், கல்லூரி மாணவர். பகுதி நேர வேலையில் கிடைக்கும் வருமானத்துடன், தந்தையின் வருமானத்தில் ஒரு பகுதி, பல தரப்பினரின் உதவி மூலமாக இந்தக் காப்பகத்தை நடத்தி வருகிறார்.

பிராணிகளைப் பராமரிக்கும் அறைகள்
பிராணிகளைப் பராமரிக்கும் அறைகள்

மீண்டும் பேசத் தொடங்கிய சாய் விக்னேஷ், “ரெண்டரை வருஷமா இந்தக் காப்பகத்தை நடத்துறேன். இந்த 8 ஏக்கர்ல ரெண்டரை ஏக்கர்லதான் விலங்குகள் இருக்குது. மற்ற இடங்கள்ல கால்நடை களுக்கான தீவனப் பயிர்களை வளர்க்கிறோம். 36 நாய்கள் இருக்கு. குணாதிசயங்களைப் பொறுத்து தனித்தனியாவும், ஒரே கூண்டுலயும் வளர்க்கிறோம். எல்லா நாய்களையும் சுழற்சி முறையில குறிப்பிட்ட நேரம் சுதந்திரமா உலவ விடுவோம்.

மாடுகள், எருமைகள்ல 44 உருப்படிகள் இருக்குது. அதுங்க ஒண்ணாவே மேய்ச்சலில் இருக்கும். பிறகு கொட்டகையில அடைச்சிடுவோம். 3 ஆடுகள், 2 கோழிகள், 2 முயல்கள், 6 பூனைகளும் இருக்கு. பராமரிப்பு இல்லாம திரியுற பிராணிகள், வளர்க்க முடியாத நிலையிலிருக்கும் வளர்ப்புப் பிராணிகளையும் வாங்கிக்கிறோம். அதுங்களைக் கொஞ்ச நாள் தனிமைப்படுத்தி வெச்சிருந்து, பிறகு காப்பகத்துல இருக்க அதோட இனத்தோட சேர்த்து விட்டுடுவோம். இதுல பல உருப்படிகளுக்குப் பல்வேறு நோய் பாதிப்புகள் வரும். உரிய சிகிச்சை கொடுத்து, இங்க வளர்ற எல்லா உயிரினங் களையும் மகிழ்ச்சியான சூழல்ல வளர்க்கிறோம்.

‘‘நியாயமான காரணத்தால தங்களோட பிராணிகளை வளர்க்க முடியாதவங்களும், ஆதரவற்ற பிராணிகளுக்கு உதவி செய்ய நினைக்கிறவங்க அதை மீட்டும் என்கிட்ட ஒப்படைக்கலாம்.’’

இங்கு இருக்க உயிரினங்கள்ல இருந்து விற்பனைக்காகவும், எங்களோட தேவைக் காகவும் பால் உட்பட எந்தப் பொருளையும் எடுத்துக்கிறதில்ல. இந்தச் சுற்றுவட்டாரத்துல கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடுற வேலையையும் செய்றேன்.

மாசம் ரெண்டு லட்சத்துக்கு மேல செலவாகுது. பொருளாதாரச் சுமை அதிகம் இருந்தாலும், இந்தச் சேவையை ஆர்வத்தோடு செய்றேன். வீட்டுலயும் ஆதரவற்ற 8 நாய்களை வளர்க்கிறோம். நியாயமான காரணத்தால தங்களோட பிராணிகளை வளர்க்க முடியாதவங்களும், ஆதரவற்ற பிராணிகளுக்கு உதவி செய்ய நினைக்கிறவங்களும் அதை மீட்டும் என்கிட்ட ஒப்படைக்கலாம்.

மேலும், பிராணிகளை வளர்க்கும் ஆர்வம் உள்ளவங்களுக்கு மட்டும் நாய், பூனைகளைக் கட்டணமின்றித் தத்துக் கொடுக்கிறேன். இந்த வகையில இதுவரை 400 உருப்படிகளைக் கொடுத்திருக்கேன்” என்று நாய்களைக் கொஞ்சியபடியே கூறும் சாய் விக்னேஷ், உண்மையான நேசத்துடன் மனித நேயத்துக்குச் சிறந்த உதாரணம்.

தொடர்புக்கு,

சாய் விக்னேஷ்,

செல்போன்: 89393 20846

சாய் விக்னேஷின் வீடியோ பேட்டியைக் காண பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

https://www.facebook.com/189745421100410/videos/526372892101719