Published:Updated:

`பார்த்துப் பார்த்து வளர்த்தோம்; என்ன செய்யுறதுன்னே தெரியல..!’- கலங்கும் தேனி வாழை விவசாயிகள்

வாழை மரங்கள்
வாழை மரங்கள்

நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழையால் பல்வேறு பகுதிகளில் வாழைமரங்கள் சாய்ந்து விளைச்சலுக்குக் கடும் பாதிப்பைக் கொடுத்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக, வேலைக்கு ஆட்கள் இன்றியும் வாழையைச் சந்தைக்குக் கொண்டு செல்ல வாகன வசதிகள் போதிய அளவு இல்லாததும், வாழை விவசாயத்தை முடக்கியுள்ளது என்றே கூறலாம்.

அப்பிபட்டியில் சாய்ந்துள்ள செவ்வாழை மரங்கள்
அப்பிபட்டியில் சாய்ந்துள்ள செவ்வாழை மரங்கள்

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழையால், பல்வேறு பகுதிகளில் வாழைமரங்கள் சாய்ந்து விளைச்சலுக்குக் கடும் பாதிப்பைக் கொடுத்துள்ளதால், தேனி வாழை விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தேனி, பெரியகுளம், சின்னமனூர், கம்பம், பாளையம், தேவதானபட்டி ஆகிய பகுதிகளில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்படும் வாழை, மாவட்ட விவசாயிகளில் பிரதானப் பயிராகவும் உள்ளது.

கொரோனா அச்சம் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கின் விளைவாக, வாழைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் என்றால், அறுவடைக்கு வாழைகள் தயாராக இருந்தபோதும், அதைச் சந்தைக்கு அனுப்பப் போதிய வாகன வசதிகளின்றி விவசாயிகள் சிரமத்தைச் சந்தித்துவந்தனர்.

சாய்ந்துள்ள வாழை மரங்கள்
சாய்ந்துள்ள வாழை மரங்கள்

இந்நிலையில், நேற்று மாலை சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், சின்னமனூர் அருகே அப்பிபட்டி, ஓடைப்பட்டி, எரசக்கநாயக்கனூர், வைகை அணை அருகே குள்ளப்புரம், முதக்கம்பட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக அப்பிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நம்மிடம் பேசும்போது, ``நான் இரண்டு ஏக்கரில் செவ்வாழை பயிர் செய்திருந்தேன். அறுவடை செய்ய ஒரு வாரம் இருந்த நிலையில், மொத்த மரங்களும் சாய்ந்துவிட்டன. பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்கள். இப்போ என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஊரடங்கு காரணமாகப் போதிய விலை இல்லாமல் இருந்தது. இதில், சூறைக்காற்றால், மொத்த விளைச்சலும் காணாமல் போய்விட்டது” என்றார் வேதனையோடு.

சாய்ந்துள்ள வாழை மரங்கள்
சாய்ந்துள்ள வாழை மரங்கள்

சரக்கு வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், கொரோனா மீதான பயம் காரணமாகப் பெரும்பாலான சரக்கு வாகனங்கள் முழுமையாக வெளியே வராமல் இருக்கும் சூழல்தான் தேனியில் நிலவுகிறது. இது தொடர்பாக, சரக்கு வாகன உரிமையாளர்களிடம் மாவட்ட நிர்வாகம் பேசி, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு