Published:Updated:

``தென்மேற்குப் பருவமழை இல்லை; வடகிழக்குப் பருவமழை ஏமாற்றிவிடுமோ?'- அச்சத்தில் தேனி விவசாயிகள்

பல முறை பருவமழை தேனி மாவட்ட விவசாயிகளை ஏமாற்றிவருவதாகும், பருவமழை குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்படுகிறது.

Rice Corp
Rice Corp

அதிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான தேனியில் நேற்றும் இன்றும் ஒரு சொட்டு மழை இல்லை என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், பலமுறை பருவமழை தேனி மாவட்ட விவசாயிகளை ஏமாற்றிவருவதாகும் பருவமழை குறித்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Rain
Rain

வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவமழை என இரண்டு பருவமழைகளிலும் மழை பெறக்கூடிய மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய மலைசூழ் மாவட்டமான தேனியின் ஆண்டு சராசரி மழை அளவு, (இரண்டு பருவமழைகளையும் சேர்த்து) 791.2 மில்லி மீட்டர்.

Mulla Periyar Lake
Mulla Periyar Lake

கடந்த 1970 முதல் 2000-ம் ஆண்டுவரையிலான சராசரி மழை அளவு என எடுத்துக்கொண்டால் ஆண்டுக்கு 833 மில்லி மீட்டராக இருந்திருக்கிறது.

தமிழகத்துக்கு `ஆரஞ்ச்  அலர்ட்’ - மூன்று தினங்களுக்கு மழை நீடிக்கும்!

கடந்த பத்தாண்டுகளில் தேனி மாவட்டத்தில் பெய்யக்கூடிய பருவமழையின் அளவு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாகவும், இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அப்போதைய தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி, தேனி மாவட்டத்தில் பருவமழை குறைவுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தார்.

Thiruppathi Vasagan
Thiruppathi Vasagan

மாவட்ட கலெக்டரைத் தலைவராகக் கொண்ட அக்குழுவில், மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், மாவட்ட வன அலுவலர் மற்றும் வனத்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மின்சாரத்துறையின் செயற்பொறியாளர், மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை (பெரியார், வைகை, மஞ்சாளாறு) செயற்பொறியாளர்கள், 18-ம் கால்வாய் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஆய்வுக் குழுவின் பணிகளும் வரையறை செய்யப்பட்டது. மாவட்டத்தில் பருவமழை குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்தல், சீமைக்கருவேலம் மற்றும் சாலி மரங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தல், வேகமாக வளரக்கூடிய நாட்டு மரங்கள் மற்றும் மழை ஈர்ப்பு மரங்களை வளர்ப்பது தொடர்பான செயல்திட்டத்தை தயார் செய்தல் என அக்குழுவின் பணிகள் அனைத்தும் ஆக்கபூர்வமாக அமைந்தது.

Theni Collector
Theni Collector

ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கும் முன்னர், கலெக்டர் வெங்கடாசலம் பணி உயர்வு பெற்று சென்றுவிட்டார்.

``ஒவ்வோர் ஆண்டும், மழை இல்லை.. மழை இல்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பதைவிட, ஏன் மழை இல்லை என முதல் முறையாகக் கேள்வி கேட்டோம். விவசாயிகளுக்கு நன்மை செய்கிறோம் என்று சொல்லும் மாவட்ட நிர்வாகம், பருவமழை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். கலெக்டர் வெங்கடாசலம் ஆர்வமாக ஆய்வுப்பணியில் இறங்கினார். அதற்குள் மாவட்டத்தை விட்டு பணி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார். புதிய கலெக்டர் வந்து இரண்டு வருடத்துக்கு மேல் ஆகிறது.

சாலி மரம்
சாலி மரம்

ஒவ்வொரு மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்திலும், விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்திலும் கோரிக்கை மனு கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறோம். இப்போதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இல்லாததால், முதல்போக சாகுபடி செய்யமுடியவில்லை. தற்போது வடகிழக்குப் பருவமழையும் ஏமாற்றிவிடுமோ என அச்சப்படுகிறோம்.

`60 ஆண்டுகளில் இல்லாத மழை; ரயில், விமான சேவை முடக்கம்!’ - ஜப்பானை மிரட்டிய ஹகிபிஸ்  புயல்

மாவட்டத்தில் உள்ள காடுகளில் எல்லாம் சீமைக்கருவேல மரங்களும், சாலி மரங்களுமாக இருக்கிறது. காடு வளர்ப்புத் திட்டத்தில் போடப்பட்ட மரங்கள் எனக் கூறுகிறார்கள். நாட்டு மரங்களை நடுவதை விட்டுவிட்டு, இலை உதிராத, விலங்குகள், பறவைகளுக்குப் பயன்படாத இம்மரங்களை ஏன் விதைத்தார்கள்? பத்துவருடத்துக்கு முன்பாக தேனியில் மழை பெய்தால் நாள் முழுவதும் பெய்யும். பருவமழை காலங்களில் முப்போகம் விளையும். இப்போது, ஒரு போகத்துக்கே திண்டாடவேண்டி நிலையில் இருக்கிறோம். பருவமழை ஏமாற்றும் மாவட்டமாக தேனி உருவாகிவருகிறது. விரைவில், பருவமழை ஆய்வுக் குழுவுக்கு உயிர் கொடுத்து ஆய்வுப் பணியை தொடங்க வேண்டும்” என்றார் 18-ம் கால்வாய் விவசாய சங்க நிர்வாகி திருப்பதி வாசகன்.

சீமைக் கருவேல மரம்
சீமைக் கருவேல மரம்

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் பேசினோம், ``அப்படி ஒரு குழு அமைக்கப்பட்டது எனக்குத் தெரியாது. பருவமழை தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது அவசியமான ஒன்றுதான். இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.