Published:Updated:

`வெடிவாழை நோய்க்கு ஹோமியோபதி மருந்து!' விவசாயிகளுக்கு தெம்பூட்டும் தேனி மருத்துவர்

வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை
வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை

வாழை சாகுபடி மிகுந்த தேனி மாவட்டத்தில், வாழைப் பயிர்களில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த, ஹோமியோபதி மருத்துவத்தைப் பயன்படுத்தி அதில் வெற்றிகண்டு வருகிறார் ஹோமியோபதி மருத்துவர் ராமர். கோட்டூரில் மருத்துவமனை வைத்துள்ள அவரை நேரில் சத்தித்துப் பேசினோம்.

``கடந்த 30 வருடங்களாக ஹோமியோபதி மருத்துவம் பிராக்டிஸ் செய்து வருகிறேன். நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை இயற்கை விவசாயி. குறிப்பாக, வாழை விவசாயி. அதனால், விவசாயம் சார்ந்து இயங்க வேண்டும் என ஆசை இருந்தது. 2010-ம் ஆண்டு, ஹோமியோபதி மருத்துவமுறையைக் கண்டறிந்த சாமுவேல் ஹனிமன் பிறந்த ஜெர்மனியில், `அக்ரோ ஹோமியோபதி’ எனும் மருத்துவ முறையில், ஹோமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தி, நோய்த் தாக்குதலுக்கு உள்ளான பயிர்களைக் குணப்படுத்தி வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். லண்டனில் இருக்கும் என் நண்பர் உதவியுடன், அக்ரோ ஹோமியோபதி புத்தகங்களை வரவழைத்து, படிக்க ஆரம்பித்தேன்.

அக்ரோ ஹோமியோபதி மருந்தால், வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை மரங்கள்
அக்ரோ ஹோமியோபதி மருந்தால், வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை மரங்கள்

தாவரங்கள், மரங்களில் இருந்து கிடைக்கும் பொருள்களால்தான் ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து எடுக்கப்படும் மனிதர்களுக்கான மருந்தை, மீண்டும் தாவரங்களுக்கே கொடுத்து, அதில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதுதான் அக்ரோ ஹோமியோபதியின் அடிப்படை சித்தாந்தம். ஜெர்மன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள பயிர்களுக்கும், தமிழகத்தின் தேனியில் உள்ள பயிர்களுக்கும் வேறுபாடு உண்டு. அதனால், புத்தக அறிவை, செயல்படுத்திப் பார்க்க வழியே இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், எங்கள் பகுதி விவசாயிகள், வாழையில் ஏற்படும் வெடிவாழை எனும் நோய் பற்றிக் கூறினார்.

இதற்கு மருந்துகள் இல்லை என்றும், நோய் தாக்கிய வாழை மரத்தை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறினர். மேலும் சில விவசாயிகள், வாழை மரத்தை வெட்டி அதற்கு தீ வைத்தனர். காரணம் கேட்டால், வெடிவாழை கிருமிகள் மண்ணில் இருக்கும் என்றும், அடுத்தமுறை வாழைக்கன்று வைத்தால் அதைத் தாக்கும் என்றும் கூறினர். இதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அக்ரோ ஹோமியோபதி மருந்தால், வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை.
அக்ரோ ஹோமியோபதி மருந்தால், வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை.

எங்கள் ஊர் விவசாயி ஒருவரின் உதவியுடன், அக்ரோ ஹோமியோபதி மருந்துகளை வெடிவாழை தாக்கிய வாழை மரத்துக்குக் கொடுத்தேன். நல்ல பலன் கிடைத்தாலும், நோய்த் தாக்குதல் குறையவில்லை. வெடிவாழை பற்றிய தகவல்களைத் திரட்டி படித்தேன். பின்னர், மருந்துகளின் கலவையை மாற்றி கொடுத்து முயற்சி செய்தேன்.

இப்படி, கடந்த சில வருடங்களாக, வெடிவாழை நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு, கடைசியில், அதற்கான மருந்தைக் கண்டுபிடித்துவிட்டேன். தற்போது என்னிடம் 100 விவசாயிகளுக்கு மேல், வெடிவாழைக்கு மருந்து வாங்கி, பலன் அடைந்துள்ளனர். பொதுவாக, வெடிவாழை தாக்கிய மரம் தார் போடாது என்பார்கள். ஆனால், அக்ரோ ஹோமியோபதி மருந்தால், வாழைமரம் தார் போடும். விளைச்சலும் நன்றாக இருக்கும்” என்றார்.

அக்ரோ ஹோமியோபதி மருந்தால், வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை மரங்கள்
அக்ரோ ஹோமியோபதி மருந்தால், வெடிவாழையில் இருந்து மீண்ட வாழை மரங்கள்

தேனி சீலையம்பட்டியைச் சேர்ந்த விவசாயி சண்முகநாதனை சந்தித்துப் பேசினோம். ``1978-ம் ஆண்டிலிருந்து வாழைக்காய் வியாபாரம்தான் பிரதான தொழில். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தில் பணம் சேர்த்து, இடம் வாங்கி வாழை விவசாயமும் செய்து வருகிறேன். 1992-ல், தேனி மாவட்டத்துக்கு ஜி9 வாழையை, அதாவது, திசு வாழையைக் கொண்டு வந்து அறிமுகம் செய்தது நான்தான்.

ஜி9 வாழையைப் பொறுத்தவரை வெளி நாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகும். நல்ல லாபம் கிடைக்கும். அதனால், தேனியில் அதிகமாக ஜி9 தான் பயிர் செய்வார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகவே ஜி9 வாழை பயிர் செய்பவர்கள் குறைந்துவிட்டார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் வெடிவாழை எனும் நோய்.

விவசாயி சண்முகநாதன்
விவசாயி சண்முகநாதன்

பயிரை வளர்த்து தார் போடும் நேரம் வெடிவாழை தாக்கி அனைத்தையும் நாசம் செய்துவிடும். மருந்துக் கடையில் ரூ. 15,000-த்திலிருந்து ரூ.25,000 வரை ரசாயன மருந்து கொடுப்பார்கள். `இந்த மருந்தை அடித்தால், நோய் கட்டுப்படலாம், கட்டுப்படாமலும் போகலாம்’ எனக் கொடுக்கும்போதே சொல்லிதான் கொடுப்பார்கள். முடிவில், நோய்க் கட்டுப்படாது. எனக்கும் பெரிய நஷ்டத்தை வெடிவாழை கொடுத்தது. இந்த முறை வெடிவாழை வரக் கூடாது எனக் கடவுளை வேண்டிக்கொண்டு 4 ஏக்கரில் ஜி9 வாழை பயிர் செய்தேன். ஒரு மரத்தில் லேசாக வெடிவாழை ஆரம்பித்தது. ஒரு வாரத்தில் 4 ஏக்கரில் இருந்த 5,000 வாழையையும் தாக்கியது. வெட்டி வீசலாம் என நினைத்திருந்தபோதுதான் டாக்டர் ராமர் பற்றிக் கூறினார்கள். பக்கத்து ஊர்தான் கோட்டூர். நேராகச் சென்று பார்த்தேன்.

ரூ.150 மட்டும் வாங்கிக்கொண்டு ஒரு சின்ன டப்பா ஹோமியோபதி மாத்திரையும், 200 மி.லி டிஸ்டில்டு வாட்டர் பாட்டிலும் கொடுத்தார். அவ்வளவுதான் மருந்தா எனக் கேட்டேன். `ஆமா, இதைத் தண்ணீரில் கலந்து நோய் ஏற்பட்ட வாழைக்கு கொடுங்க… சரியாகிடும்னு சொன்னார்’ எனக்கு சிரிப்பா இருந்துச்சு. சரின்னு அவர் சொன்னபடி செஞ்சேன். ஐந்தாவது நாள், வாழையில் ஏற்பட்ட வெடி அப்படியே நின்றுவிட்டது. டாக்டர் ராமர் நேரடியா தோட்டத்துக்கு வந்து பார்த்தார். 10-வது நாள் இன்னொரு முறை மருந்து கொடுக்கச் சொன்னார். 20-வது நாள் இன்னொரு முறை. மூன்றே முறைதான் மருந்து கொடுத்தேன். வாழைத்தார் போட்டு அதை வெட்டி விற்பனை செய்துவிட்டேன். நல்ல லாபம். நான் மட்டுமல்ல, என்னைப் போல தேனியில் பல விவசாயிகளும் மருத்துவர் ராமரால் பலனடைந்துள்ளனர்” என்றார்.

அக்ரோ ஹோமியோபதி மருந்துடன் மருத்துவர் ராமர்.
அக்ரோ ஹோமியோபதி மருந்துடன் மருத்துவர் ராமர்.

``1 டோஸ் மருந்தானது 200 மி.லி டிஸ்டில் வாட்டரில் கலந்திருக்கும். மாத்திரையானது வினை ஊக்கியாகச் செயல்படும். 2 லிட்டர் வாட்டர் பாட்டிலில் 1 1/2 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில், டிஸ்டில் வாட்டரும் மாத்திரையும் போட்டு நன்கு குலுக்க வேண்டும். மாத்திரை கரைந்தவுடன், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, வாழைக்குக் கொடுக்க வேண்டும்.

சின்ன வாழையாக இருந்தால், அரை லிட்டர், பெரிய வாழையாக இருந்தால் 1 லிட்டர் கொடுத்தால் போதும். 1 ஏக்கரில் 1,000 வாழை என்றால், அதிகபட்சம் ரூ.750 மட்டும்தான் செலவு.

நோய் தாக்குதலைப் பொறுத்து 10 நாளுக்கு ஒருமுறையோ, 15 நாளுக்கு ஒருமுறையோ மருந்து கொடுத்தால் போதும். வெடிவாழை மட்டுமல்லாமல், வாழையில் ஏற்படும் இலைவாடல் நோய் மற்றும் தண்டுதுளைப்பான் நோய்களுக்கும் மருந்து கொடுக்கிறேன். நல்ல ரிசல்ட் கிடைக்கிறது. தொடர்ந்து என்னுடைய ஆய்வுப் பணிகளும் நடந்துவருகிறது. விலையை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளேன்” என்கிறார் மருத்துவர் ராமர்.

அடுத்த கட்டுரைக்கு