Published:Updated:

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் பட்டு வளர்ப்பில் விருதுகளைக் குவிக்கும் தேனி விவசாயி; எப்படி தெரியுமா?

விவசாயி சின்னன்

மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரம் என்பதால் நல்ல சீதோஷ்ண நிலைக்கு மல்பெரி நன்றாக வளர்ந்தது. இதில் எவ்வித நோய்த் தாக்குதலும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதேபோல ஒரு முறை நாற்று நடவு செய்தால் சுமார் 20 ஆண்டுகள் வரைகூட இலை எடுக்கலாம்.

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் பட்டு வளர்ப்பில் விருதுகளைக் குவிக்கும் தேனி விவசாயி; எப்படி தெரியுமா?

மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரம் என்பதால் நல்ல சீதோஷ்ண நிலைக்கு மல்பெரி நன்றாக வளர்ந்தது. இதில் எவ்வித நோய்த் தாக்குதலும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதேபோல ஒரு முறை நாற்று நடவு செய்தால் சுமார் 20 ஆண்டுகள் வரைகூட இலை எடுக்கலாம்.

Published:Updated:
விவசாயி சின்னன்

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நிலவும் சீரான சீதோஷ்ண நிலை பட்டு விவசாயத்துக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. தேனி, போடி, சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ,000 ஏக்கர் பரப்பில் மல்பெரி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, பட்டு உற்பத்தியில் தேனி மாவட்டம் மாநில அளவில் 2 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பட்டு வளர்ப்பில் மாநில அளவில் தேனி மாவட்டம் போடி அருகே கூழையனூரைச் சேர்ந்த சின்னன் முன்னோடி விவசாயியாகத் திகழ்ந்து வருகிறார். இவர் தேனி மாவட்ட அளவில் தொடர்ந்து 3 முறையும், மாநில அளவில் 2 முறையும் பட்டு விவசாயத்தில் சிறந்த விவசாயி என்ற விருதைப் பெற்றுள்ளார்.

பட்டுப்புழு
பட்டுப்புழு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரின் பட்டு வளர்ப்பு முறையை அறிந்துகொள்வதற்காக கூழையனூர் அருகே அய்யநாதபுரத்தில் உள்ள அவருடைய தோட்டத்தில் சந்தித்தோம். ``தொடக்கத்தில் வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறிகளைப் பயிரிட்டு வந்தேன். அதில் பல ஏற்ற இறக்கங்கள் இருந்தன. பல நேரங்களில் பெரும் இழப்பையும் சந்தித்தேன். இந்நிலையில் 2016-ல் பட்டு வளர்ச்சி துறை அதிகாரிகள் எங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது என்னை அணுகி இந்தப் பகுதி பட்டு வளர்ப்புக்கு ஏற்றது. அதில் அரசு பல்வேறு மானியங்களை அளிப்பது மட்டுமல்லாமல் அரசே கொள்முதல் செய்கிறது. இதனால் இடைத்தரகர் பிரச்னையின்றி நல்ல லாபம் ஈட்ட முடியும் எனக் கூறினர்.

பட்டுப்புழுக்கள்
பட்டுப்புழுக்கள்

அதனடிப்படையில் பட்டுப்புழு உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கும் மல்பெரி இலைகளை 2 ஏக்கர் அளவில் சாகுபடி செய்யத் தொடங்கினேன். முதலில் நிலத்தைப் பண்படுத்தி எரு போட்டு உழுதேன். மல்பெரி குச்சி வி 1 ரகத்தை ஒன்று 2.50 ரூபாய் என்ற விலையில் வாங்கி 10,000 நாத்துகளை நட்டேன். இதற்குச் சொட்டுநீர் பாசனம் சிறந்ததாக இருப்பதாக அறிந்து அதையும் 50,000 ரூபாய் மதிப்பீட்டில் செய்தேன். இதற்கிடையே பழநியில் பட்டுப்புழு வளர்ப்பு நடக்கிறது. அங்கு பட்டுப்புழு முட்டைகளை வாங்கி பொரிக்க வைத்து ஒரு வாரம் வளர்த்தும் கொடுப்பார்கள். அவர்களை அணுகி தரமான முட்டைகளை ஆர்டர் செய்தேன். ஏக்கருக்கு 270 முட்டைகள் வைக்கும் அளவில் செட் அமைத்தேன்.

மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரம் என்பதால் நல்ல சீதோஷ்ண நிலைக்கு மல்பெரி நன்றாக வளர்ந்தது. இதில் எவ்வித நோய் தாக்குதலும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. அதேபோல ஒரு முறை நாற்று நடவு செய்தால் சுமார் 20 ஆண்டுகள் வரை கூட இலை எடுக்கலாம். பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கவோ, ரசாயன உரம் வைக்கவோ வேண்டியதில்லை. மாட்டு எரு, ஆட்டு எரு தேவைக்கேற்றவாறு வைத்தால் மட்டுமே போதுமானது.

பட்டுக்கூடு
பட்டுக்கூடு

புழுக்களை வளர்ப்பு மனைக்கு (செட்டுக்கு) கொண்டுவந்து சேர்த்த பிறகு, 22 நாட்களில் மார்க்கெட்டுக்குத் தரமான பட்டுக்கூடை எடுத்துச் செல்லலாம். அதற்குப் படிப்படியாக மல்பெரி இலையை புழுவுக்கு இரையாக கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். தொடக்கத்தில் 60 கிலோவில் ஆரம்பித்து கடைசியாக ஒரு டன் வரை இலையைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பட்டுக்கூடு தரமானதாக இருக்கும். நூல் இடைவெளியின்றி பிசிர் இல்லாமல் இருக்கும். சேதமும் அதிகம் வராது.

வலையில் பட்டுக்கூடு
வலையில் பட்டுக்கூடு

இந்தப் பட்டு வளர்ப்புக்கு ஆட்கள் அதிகம் தேவையில்லை. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே பார்த்துக் கொள்கிறோம். கண்ணும் கருத்துமாகப் பார்த்து வளர்ப்பதாலும் இயற்கையின் வரத்தாலும் பொருளை தரமானதாக எடுக்க முடிகிறது. இதுவே தொடர்ச்சியாக விருது பெற காரணமாக இருக்கிறது. அண்மையில் தமிழக முதல்வரின் கையால் விருது பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

வேளாண் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் பட்டு வளர்ப்பு குறித்து என்னிடம் போனிலும், நேரடியாக வந்தும் கேட்டறிகின்றனர். இது எனக்கு பெரும் நிறைவை கொடுத்துள்ளது. ஒரு ஏக்கர் பட்டு வளர்ப்பில் ஆண்டுக்கு 12 முறை பட்டுக்கூடு எடுக்க முடியும். ஒரு முறைக்கு ஒரு லட்சம் வரை வருவாய் ஈட்டலாம். செலவு போக 50 முதல் 70,000 வரை லாபம் பார்க்க முடியும்" என்றார்.

உதவி இயக்குநர் கணபதி
உதவி இயக்குநர் கணபதி

தேனி மாவட்ட பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் கணபதியிடம் பேசியபோது, ''பட்டு வளர்ச்சி துறை மூலம் விவசாயிகளுக்கு 4 வகையான மானியங்களை அளிக்கிறோம். மல்பெரி நடவுக்கு 25,000 ரூபாய், சொட்டுநீர் பாசனத்துக்கு சிறுவிவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், பெரு விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம், புழுவளர்ப்பு மனைக்கு மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் 100 சதவிகித மானியம், தளவாட சாமான்களுக்கு 52,500 ரூபாய் மானியம் வழங்குகிறோம்.

பட்டுப்புழு
பட்டுப்புழு

தேனி மாவட்டத்தில் போடி ஒன்றியத்தில் அதிகமான விவசாயிகள் பட்டு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டுமல்லாது சின்னமனூர், வருசநாடு, ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய பகுதிகளிலும்கூட பட்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். கூழையனூர் விவசாயி சின்னனை போன்ற பல விவசாயிகளை உருவாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறோம். பட்டு விவசாயித்தில் மட்டுமே விதையும் விற்பனையும் அரசுக் கட்டுபாட்டில் உள்ளது என்பதால் விவசாயிகள் மிகவும் நம்பகத் தன்மையுடன் பட்டு விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 10 டன் பட்டுக்கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்காரணமாக கோட்டூரில் 2 ஏக்கர் பரப்பில் 2.60 கோடி ரூபாயில் தானியங்கி பட்டு நூற்பாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரும் பலனடைவார்கள்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism