Published:Updated:

பத்து வருடத்திற்குப் பிறகு வந்திருக்கும் ஊசி ஈ.! - கவலையில் தேனி பட்டுப்புழு விவசாயிகள்

பல வருடங்களுக்குப் பிறகு ஊசி ஈ தாக்குதலால் பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பட்டுப்புழு
பட்டுப்புழு

விவசாயத்தை பிரதானமாகக் கொண்டிருக்கும் தேனி மாவட்டத்தில், சமீப காலமாக பட்டு வளர்ப்பில் விவசாயிகள் ஆர்வம் செலுத்திவருகிறார்கள். இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு ஊசி ஈ தாக்குதலால் பட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும், ஊசி ஈ-க்களைக் கட்டுப்படுத்தும் பணியில் பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டிவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Vikatan
பட்டுப் புழு
பட்டுப் புழு

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி ஒருவர், ``நான் இருபது வருடங்களாக பட்டுப்புழு வளர்க்கும் தொழிலில் இருக்கிறேன். பட்டுப்புழு வளர்ப்பு என்பது குழந்தையை வளர்ப்பதைப்போல, ஒவ்வொரு நிலையிலும் கவனமாக வளர்த்து, கூடு கட்டும் வரை பாதுகாக்க வேண்டும். சமீபத்தில், பட்டுப்புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குவது அதிகரித்துள்ளது.

அதுவும், கூடு கட்ட ஐந்து நாள்கள் இருக்கும் நிலையில், புழுக்களை ஊசி ஈக்கள் தாக்குகின்றன. அப்படி ஊசி ஈக்கள் தாக்கும் போது, புழுக்களின் உடலில் முட்டை இடும். அந்த முட்டைகள், பட்டுப்புழு கூடு கட்டும் நேரத்தில் பொறித்து ஆயிரக்கணக்கான ஊசி ஈக்கள் வெளியே வருகிறது. இதனால், பட்டுப்புழு கூடு கட்டாமலே இறந்துவிடும்.

Vikatan
தைமாஸ் ஒட்டுண்ணி ஈக்கள்
தைமாஸ் ஒட்டுண்ணி ஈக்கள்

ஊசி ஈக்களின் தொடர் தாக்குதலைச் சமாளிக்க, பட்டு வளர்ச்சித்துறையிலிருந்து `தைமாஸ்’ என்கிற ஒட்டுண்ணி கொடுக்கிறார்கள். அதனால் தற்போது ஊசி ஈக்களின் தாக்கம் குறைந்திருக்கிறது. பத்து வருடத்திற்கு முன்னர் ஊசி ஈக்களின் தாக்குதல் இருந்தது. அதன்பிறகு இப்போதுதான் ஊசி ஈக்கள் வந்திருக்கின்றன” என்றார்.

Vikatan

அதென்ன தைமாஸ்? பட்டுவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``தைமாஸ் என்பது ஒருவகையான ஒட்டுண்ணி ஈ. பட்டுப்புழுக்களை தாக்கும் ஊசி ஈக்கள், அதன் முட்டைகளை, பட்டுப்புழுவின் உடலில் செலுத்திவிடும். அப்படிச் செலுத்தப்பட்ட முட்டைகள் இரண்டு மூன்று நாள்களில் பொறித்து, புழுவின் உடலைக் கிழித்துக்கொண்டு வெளியே வரும். இந்தத் தாக்குதலைக் கட்டுப்படுத்த தைமாஸ் என்கிற ஒட்டுண்ணி ஈக்களை பட்டுப்புழு வளர்க்கும் இடங்களில் வைக்க வேண்டும். அவை, ஊசி ஈக்கள் முட்டையிட்ட புழுவைத் தேடிச் சென்று அவற்றின் முட்டைகளை அழிக்கும். இதனால், பட்டுப் புழு பாதிக்கப்படாது. சரியான நேரத்தில் கூடு கட்டும். விவசாயிகளும் பாதிக்கப்படமாட்டார்கள்.

தைமாஸ் ஒட்டுண்ணி ஈக்கள்
தைமாஸ் ஒட்டுண்ணி ஈக்கள்
பட்டுப்புழு வளர்ப்புக் கூடம்
பட்டுப்புழு வளர்ப்புக் கூடம்

தேனி மாவட்டம் முழுவதும் சுமார் 250 முதல் 300 பேர் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். போதிய அளவு தைமாஸ் கொண்டுவரப்பட்டு, அனைத்துப் பட்டுப்புழு வளர்ப்போருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஊசி ஈக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்.