Published:Updated:

ஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி!
ஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி!

பசிப்பிணி போக்கும் பயிர் மருத்துவர்கள்!

பிரீமியம் ஸ்டோரி
சேவை
கொரோனா காலம். ஊரடங்கால் முடங்கிக்கிடக்கிறது உலகம். அனைத்துத் தொழில்களும் செயல்பாட்டை நிறுத்தியிருந்தாலும் விவசாயம் மட்டும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மருத்துவர்கள், கொரோனா தொற்றிலிருந்து மனிதர்களைக் காத்துவருகிறார்கள். விவசாயிகள் பசிப்பிணியிலிருந்து மக்களைக் காத்து வருகிறார்கள். இப்படி உயிர்காக்கும் பணியில் முன்வரிசை வீரர்களாக விவசாயிகளும் நிற்கிறார்கள்.

ஊரடங்கு, நோய்த்தொற்று பயம் காரணமாகப் பலரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. விவசாயப் பொருள்களை அறுவடை செய்ய ஆட்கள் இல்லை; சந்தைக்குக் கொண்டு செல்ல வாகனங்கள் இல்லை. ஆனாலும், அவற்றையெல்லாம் மீறி, உணவுப் பொருள்களை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பல விவசாயிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இக்கட்டான இந்த நேரத்திலும் சில முன்னேற்பாடுகள் மூலம் அவர்களின் விளைபொருளைச் சந்தைப்படுத்தி, நஷ்டத்தைக் குறைத்திருக்கிறார்கள்.

இயற்கை விவசாயி
இயற்கை விவசாயி

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இயற்கை விவசாயிகள் குழுக்களாக இணைந்திருக்கிறார்கள். இதற்கு முன்னோடியாக இருந்தது திண்டுக்கல் இயற்கை விவசாயிகள் நலச்சங்கம். வாரம் ஒரு நாள் தங்கள் விளைபொருள்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்துவருகிறார்கள் இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். கொரோனா நேரத்திலும் அவர்களுடைய விளைபொருள்களைத் தேங்கவிடாமல் விற்பனை செய்திருக்கிறார்கள். இது தொடர்பாக அந்த அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் தங்கவேலுவிடம் பேசினோம். “வழக்கமாக எங்கள் சங்கம் மூலமாக திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய இடங்களில் எங்கள் உறுப்பினர்களின் விளைபொருள்களை விற்பனை செய்வோம். ஆனால், ஊரடங்கு காலத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக, நாங்கள் விற்பனை செய்யவில்லை. அதே நேரம், எங்கள் உறுப்பினர்கள் விளைபொருள்களை அந்தந்தப் பகுதியிலிருக்கும் உள்ளூர்க் கடைகளில் விற்பனை செய்தோம். அதிகமாக இருந்தவற்றை சென்னை, மதுரைக்கு அனுப்பினோம். எங்களைப் பொறுத்தவரை விற்பனை பிரச்னை இல்லை. ஆனால், வழக்கமான விலையில் 40 சதவிகிதத்துக்கும் மேல் குறைவாகத்தான் விலை கிடைத்தது. அது இழப்புதான். ஆனாலும், விளைபொருள்களை வீணாக்காமல் விற்பனை செய்த மனநிறைவு கிடைத்தது’’ என்றார்.

திருச்செந்தூரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி சக்திகுமாரிடம் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இயற்கை விவசாயிகள்.
இயற்கை விவசாயிகள்.

‘‘ ‘அழுதுக்கிட்டிருந்தாலும் உழுதுக்கிட்டிரு’னு சொல்லுவாங்க. விவசாயம்கிறது நம்ம வாழ்க்கையில கலந்தது. காலம், நேரம் பார்த்து செய்யறது இல்லை. புயல், மழை, சூறாவளி வர்றது எப்படி எதிர்பாராத இடர்ப்பாடோ, அதே மாதிரி தற்போதைய கொரோனா வைரஸ் பரவலும் ஒரு எதிர்பார்க்காத இடர்ப்பாடுதான். நான் ரெண்டு ஏக்கரில் வாழையும், ரெண்டு ஏக்கரில் கொய்யாவும், ரெண்டு ஏக்கரில் ரெட்லேடி பப்பாளியும் சாகுபடி செய்யறேன். வழக்கமா உள்ளூர்த் தேவைக்குப் போக, வாரத்துல நாலு நாள் ரெண்டு டன் பப்பாளியை சென்னையில இருக்குற இயற்கை அங்காடிகளுக்கு அனுப்பிவைப்பேன். இப்போ பரவாயில்லை என்ற நிலைமையில தினமும் பறிச்சு, சுற்றியிருக்குற கிராமங்கள்ல வீதி வீதியாக எடுத்துட்டுப் போய் விற்பனை செய்யறேன். அங்கேயும் வழக்கமாக விற்பனை செய்யற விலையைவிடக் குறைவான விலைக்கே விற்பனை செய்யறேன். எனக்கு இது நஷ்டம்தான். ஆனாலும் நஞ்சில்லா இயற்கை விளைபொருளை மக்களுக்கு விற்பனை செய்யறோம்கிற திருப்தி மனசுக்கு மகிழ்ச்சியா இருக்கு’’ என்றார்.

பப்பாளி விற்பனைக்கு உதவிய முகநூல்

இந்த இக்கட்டான காலகட்டத்தில் முகநூல், வாட்ஸ்அப் மூலமாகவும் பல விவசாயிகள் தங்கள் விளைபொருள்களைச் சந்தைப்படுத்தியிருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம், முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணியன். அவர் ஒன்றரை ஏக்கரில் பப்பாளிச் சாகுபடி செய்கிறார். பப்பாளி பழுத்து அறுவடைக்குத் தயாராக இருந்த நேரம், முதல் கட்டமாக ஆயிரம் பழங்களைப் பறித்துவிட்டு வியாபாரிகளைத் தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால், கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டி எந்த வியாபாரியும் கொள்முதல் செய்ய வரவில்லை. பறித்த பழங்கள் ஓரிரு நாளில் அழுகிவிடும் என்று கவலைப் பட்ட சுப்பிரமணியன். அதே ஊரைச் சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி பரிமளாதேவியிடம் தகவலைச் சொல்லியிருக்கிறார்.

தங்கவேலு, சக்திகுமார்
தங்கவேலு, சக்திகுமார்

பரிமளாதேவி, இந்தத் தகவலை முகநூல் பக்கத்தில் பதிவு செய்தார். அந்தப் பதிவைப் படித்த திருப்பூர் `வெற்றி’ அமைப்பைச் சேர்ந்த குமார் துரைசாமி உதவி செய்ய, இன்று வரை அவர் சிக்கலில்லாமல் பப்பாளியை விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பாக குமார் துரைசாமியிடம் பேசினோம். ‘‘ முகநூலில், `பப்பாளி விற்பனை செய்ய முடியவில்லை. வாகனத்தில் கொண்டு போக பாஸ் கிடைக்கவில்லை. போலீஸ் பிரச்னை பெரிதாக இருக்கிறது’ என்று பதிவு செய்திருந்தார்கள். படித்தவுடன், அதை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். அவர் பாஸ் கிடைக்க ஏற்பாடு செய்தார். அதே நேரத்தில் `வெற்றி’ அமைப்பின் மூலம் வீடுகளுக்குக் காய்கறிகள் சப்ளை செய்துகொண்டிருந்த எங்கள் நண்பர்களையும், விவசாயியையும் இணைத்துவிட்டேன்.

அவர்கள் விவசாயியின் தோட்டத்துக்கே சென்று பப்பாளியைக் கொள்முதல் செய்துவருகிறார்கள்’’ என்றார்.
பப்பாளி விற்பனை
பப்பாளி விற்பனை

இது குறித்து விவசாயி சுப்பிரமணியனிடம் பேசினோம்... “வழக்கமாக என் தோட்டத்தில் பறிக்கும் பப்பாளிப் பழங்களை வேனில் ஏற்றி, ஈரோடு கொண்டு போய் விற்பனை செய்வேன். ஆனால், வழியிலிருக்கும் சிவகிரி காவல்துறையினர் அதற்கு அனுமதிக்கவில்லை. உள்ளூரில் விற்கவும் வழியில்லை. அதையடுத்து பரிமளாதேவி முகநூல் பதிவின் மூலம் விஷயம் வெளியுலகுக்குத் தெரிந்தது. அதன் விளைவு `வெற்றி’ அமைப்பினர் இதுவரை மூன்று முறை பண்ணைக்கு நேரில் வந்து பப்பாளியைக் கொள்முதல் செய்து சென்றிருக்கிறார்கள். இதுவரை 2,500 கிலோ பப்பாளி விற்பனை செய்திருக்கிறேன். தொடர்ந்து அவர்கள் வருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மேலும் கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை ஈரோடு எடுத்துச் சென்று விற்பனை செய்யத் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அனுமதிச் சீட்டு வழங்கியிருக்கிறார். இப்போது காவல்துறையினர் வேனைத் தடுப்பதில்லை. என்னுடைய பப்பாளி விற்பனைக்கு முகநூல் பெரிதும் உதவி செய்திருக்கிறது’’ என்றார்.

ஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி!

விற்பனைக்கு உதவிய வாட்ஸ்அப்!

கோயம்புத்தூரிலிருந்து சிறுவாணி போகும் வழியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகம் உள்ளன. ஊரடங்கு உத்தரவால் அந்தக் குடியிருப்புவாசிகளுக்குக் காய்கறிகள் கிடைப்பது சிரமமாக இருந்தது. இந்த நிலையில், சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கச் செயலாளர் பேரூர் கந்தசாமி மூலமாக, விவசாயிகள் அவர்கள் வீட்டுக்கே காய்கறிகளை விநியோகம் செய்துவருகிறார்கள். இது தொடர்பாக, கந்தசாமியிடம் பேசினோம். ‘‘நுகர்வோருக்குக் காய்கறிகளை உற்பத்தி செய்து கொடுப்பது விவசாயிகளின் கடமை. ஊரடங்கில் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் காய்கறிகள் கிடைக்காமல் சிரமப்படுவது தெரிந்ததும், எங்கள் சங்கத்தின் மூலம் அவர்களுக்கு உதவ முன்வந்தோம். ‘வாட்ஸ்அப்’ எங்களுக்கு உதவியாக இருந்தது. தங்களுக்குத் தேவையான காய்கறிகளின் பட்டியலையும், எவ்வளவு தேவை என்பதையும் குடியிருப்பு நலச் சங்க பொறுப்பாளர்கள் எங்களுக்கு ‘வாட்ஸ்அப்’ செய்துவிடுவார்கள். நாங்கள், அவர்கள் கேட்கும் காய்கறிகளை வேனில் ஏற்றிச் சென்று குடியிருப்பில் இறக்கிவிடுவோம். அன்றைய விலைப்பட்டியலையும் குறிப்பிட்டுவிடுவதால், தங்கள் தேவைக்கேற்ப மொத்த காய்கறிகளைப் பிரித்து எடுத்துச் சென்றுவிடுவார்கள் குடியிருப்புவாசிகள். காய்கறிக்கான தொகையை எங்கள் வங்கிக்கணக்கில் செலுத்திவிடுவார்கள். இப்போதைக்கு 200 வீடுகளுக்குக் காய்கறிகளை அனுப்பிவருகிறோம்.

`விவசாயப் பொருள்களை யாரும் தடுக்கக் கூடாது’ என்ற அரசாணை நடைமுறையில் இருப்பதால், எங்கள் காய்கறி வாகனத்தை யாரும் தடுப்பதில்லை.

நேரடி விற்பனையில், காய்கறிகள் அசல் விலைக்குக் கிடைப்பதால் குடியிருப்புவாசிகளிடம் எங்கள் சேவைக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. `ஊரடங்கு முடிந்த பிறகும் காய்கறிச் சேவையை விவசாயிகள் தொடர வேண்டும்’ என்பது குடியிருப்புவாசிகள் பலரின் அன்புக்கட்டளையாக இருக்கிறது’’ என்றார்.

குமார் துரைசாமி, கந்தசாமி, புலியூர் நாகராஜன்
குமார் துரைசாமி, கந்தசாமி, புலியூர் நாகராஜன்

`அரசு அதிகாரிகளால் எந்த உதவியும் கிடைக்கவில்லை’ எனப் பெரும்பாலான விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். ஆனால் சில பகுதிகளில் விதிவிலக்காக, நெகிழ்ச்சியான நிகழ்வுகளும் நடந்துள்ளன. இது குறித்துப் பேசிய தோட்டக்கலைப் பயிர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ‘புலியூர்’ நாகராஜன், ‘திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சுற்றியுள்ள போதாவூர், புலியூர், கோப்பு, தாயனூர், முதலிப்பட்டி, நெய்தலூர் உள்ளிட்ட பல ஊர்கள்ல பல நூறு ஏக்கர்ல மலர்ச் சாகுபடி நடந்துக்கிட்டு இருக்கு. மல்லிகை, ரோஜா, சம்பங்கி உள்ளிட்ட மலர்களைச் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பங்குனி, சித்திரை மாதங்கள்லதான் இதுக்கு அதிக விலை கிடைக்கும். ஊரடங்கால் மார்க்கெட் மூடிக் கிடக்குறதுனால, விவசாயிகளுக்குக் கடுமையான பாதிப்பு. இதுபற்றித் தமிழக வேளாண்மைத்துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவின் கவனத்துக்குக் கொண்டு போனோம். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மூலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலுள்ள ஒரு சென்ட் நிறுவனம், தினமும் ஆயிரம் டன் வீதம் மல்லிகைப் பூக்களைக் கொள்முதல் செஞ்சாங்க. கிலோவுக்கு 40 முதல் 60 ரூபாய் கொடுத்தாங்க. அதோடு தஞ்சாவூர், திருவாரூர், விருத்தாசலம் உள்ளிட்ட ஊர்கள்ல இருந்து வியாபாரிகள் இருசக்கர வாகனத்துல வந்து பூக்களைக் கொள்முதல் செஞ்சுட்டுப் போனாங்க” என்றார்.

இக்கட்டான நேரத்திலும் சூழலுக்கு ஏற்பத் தங்கள் விளைபொருள்களை நுகர்வோருக்குக் கிடைக்கச் செய்கிறார்கள் விவசாயிகள். தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டாலும் ஊரடங்கு நேரத்தில் உணவுப் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்பட்டுவரும் விவசாயிகளை நன்றியோடு வணங்குகிறது உலகம்.

மாநகராட்சி ஊழியர்களுக்கு தினமும் இரண்டு வாழைப்பழங்கள்!

ஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி!

வாழை விவசாயிகளின் நலன் காக்கும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியின் ஊழியர்களுக்கு வாழைப்பழங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கியிருக்கிறார் மாநகராட்சி ஆணையர் முனைவர் ஜெயசீலன். இது குறித்துப் பேசிய அவர், `` `ஊரடங்கால் வாழைத்தார்களுக்கான தேவையும் விலையும் இல்லாததால், விற்பனை செய்ய முடியாமல் திணறிவருகிறார்கள் விவசாயிகள்’ என்ற தகவலைக் கேள்விப்பட்டேன். சிறிய அளவிலாவது அந்த வாழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு தினமும் இரண்டு வாழைப்பழங்கள் வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

ஊரடங்கு காலத்திலும் உணவு உற்பத்தி!

மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் நான்கு மண்டலங்களிலுள்ள மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 2,000 பேருக்கு வாழைப்பழம் வழங்கப்படுகிறது. தினமும் காலை அலுவலகத்துக்குள் பணியாளர்கள் நுழையும்போது, இரண்டு பழங்களை எடுத்துக்கொள்ளலாம். நாடன், பச்சை வாழை, செவ்வாழை, கற்பூரவள்ளி, ஏத்தன்... என தினமும் ஏதாவது ஒரு ரகப் பழம் வழங்கப்படும். விவசாயிகளிடமிருந்து வாழைக்குலைகளைக் கொள்முதல் செய்வதற்காக நான்கு ஊழியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது, கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவரும் மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்களுக்குக் கூடுதல் சத்தாகவும், தற்போதைய கோடை வெயில் நேரத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். கொரோனா தடுப்புப் பணிகள் முழுமையாக முடியும் வரையிலும் இந்தத் திட்டம் செயல்பாட்டில் இருக்கும்” என்றார். தூத்துக்குடி மாநகராட்சியின் இந்த முயற்சி பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது.

துப்புரவுப் பணியாளர்களுக்கு மாப்பிள்ளைச் சம்பா!

சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் கொரோனா வைரஸின் காரணமாக தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மாப்பிள்ளைச் சம்பா அரிசி வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, கோட்டாட்சியர் எம்.துரை, மணிவண்ணன், வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.வெங்கடேசன், நகராட்சி ஆணையர் சேகர், வேளாண்மை அலுவலர் பொ.வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில்...
நிகழ்வில்...

இது குறித்துப் பேசிய வேளாண் அலுவலர் வேல்முருகன், “நோய் எதிர்ப்பு சக்திக்காக நாம் எதை எதையோ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நம் பாரம்பர்ய அரிசி வகைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருக்கிறது. அதுவும் மாப்பிள்ளைச் சம்பா அரிசி உடலுக்கு வலு கொடுப்பதில் முன்னணியில் இருக்கிறது. இதை துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுவரும் 300 பேருக்கு வழங்கியிருக்கிறோம்” என்றார்.

பசுமைக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு