Published:Updated:

நாட்டுக் கடுகுச் சாகுபடியில் அசத்தும் தேனி இளைஞர்கள்!

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி
தேனி மாவட்டம் முழுவதும் 17 நீர்நிலைகளின் கரைகளில், 40 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தேனி இளைஞர்கள், தொடர்ந்து ‘ஆணி பிடுங்கும் திருவிழா’ என்ற பெயரில், சாலை ஓர மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளைப் பிடுங்கி, தமிழக அளவில் பிரபலமானார்கள்.

இவர்களைப் பார்த்துப் பல மாவட்டங்களில் ஆணி பிடுங்கும் திருவிழா ஆரம்பிக்கப்பட்டது. இவர்களின் பங்களிப்பால் சாலை ஓர மரங்களில் ஆணிகளே இல்லாத நகராட்சியாக, தேனி-அல்லிநகரம் நகராட்சி தற்போது மாறியிருக்கிறது. அதோடு, இயற்கைவழி வேளாண்மையின் மீதிருக்கும் ஆர்வத்தில், இயற்கை முறையில் நாட்டுக் கடுகைப் பயிர் செய்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

பெரோஸ்கான்
பெரோஸ்கான்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இருக்கிறது காக்கிச்சிக்கையன் பட்டி என்ற கிராமம். அங்கே அமைந்திருக்கும் ‘மணிச்சிகை இயற்கைவழி வேளாண் நடுவம்’ பண்ணையில் நாட்டுக் கடுகைப் பயிர் செய்து அறுவடை செய்திருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்கப் பண்ணைக்குச் சென்றோம். கடுகு அறுவடைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள், நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசத் தொடங்கினார்கள்.

தன்னார்வலர்கள்
தன்னார்வலர்கள்

முதலில் பேசிய பெரோஸ்கான், “இது என்னுடைய இடம்தான். மொத்தம் ஏழு ஏக்கர். இங்கே வழக்கமாக, தென்னை, காய்கறிகளைப் பயிர் செய்வோம். இந்த தடவை நாட்டுக் கடுகு விதைச்சுப் பார்க்கலாம்னு முடிவு பண்ணி, 25 சென்ட் இடத்துல விதைச்சோம். டிசம்பர் முதல் வாரத்துல வேலைகளை ஆரம்பிச்சோம். மேட்டுப்பாத்தி முறையில கடுகு நடவு செய்யறதுதான் எங்க திட்டம். இயற்கைவழி விவசாயத்துக்கு மேட்டுப்பாத்திதான் சரியானதாக இருக்கும். நிலத்தைத் தோண்டி, கீழ் மண்ணை எடுத்து மேலாகப் போட்டு, பாத்தி அமைச்சோம். மூன்றரை அடி அகலத்துல பாத்தி நடக்குறதுக்கு ஒரு அடி இடைவெளி. பிறகு அடுத்த பாத்தின்னு அமைச்சோம். பாத்தியில ஒன்றரை அடி ஆழம் வரைக்கும் மண் இளக்கமாக இருக்கும். தெளிப்பு முறை பாசனத்தைத்தான் பயன்படுத்தினோம். மேட்டுப்பாத்தி தயார் செஞ்சதும் பயறு, எண்ணெய் வித்துகள் உட்படப் பலதானிய விதைகளை நட்டு வெச்சோம். மூணு நாளுக்கு ஒரு தடவை மட்டும் தண்ணி தெளிச்சுக்கிட்டே இருந்தோம். மூணு வாரம் போனதும் வளர்ந்திருந்த பலதானியச் செடிகளைக் கையால பிடுங்கி, அந்த இடத்துலேயே போட்டுட்டோம். அடுத்த ஒரு வாரத்துல அதுக மட்கி, மண்ணோடு மண்ணாகிடுச்சு.

பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் கலப்புப் பயிர்

ஜனவரி முதல் வாரத்துல நாட்டுக் கடுகை விதைக்க ஆரம்பிச்சோம். ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ கடுகு விதை இருந்தால் போதும். அதனால நாங்க 25 சென்ட் இடத்துக்கு, கால் கிலோ கடுகு விதைதான் வாங்கினோம். சிவகாசி, தேன்கனி வாழ்வியல் நடுவத்துலதான் விதைகளை வாங்கினோம். கலப்புப் பயிர் முறையில நாட்டுக் கடுகு விதைகளோடு பலதானிய விதைப்புக்கு வாங்கினதுல மிச்சமான சூரியகாந்தி, முள்ளங்கி விதைகளையும் நடவு செஞ்சோம்.

அறுவடை செய்யப்பட்ட நாட்டுக் கடுகு
அறுவடை செய்யப்பட்ட நாட்டுக் கடுகு

கடுகு விதைகளை கை விதைப்பு முறையில், ஓரடி இடைவெளியில அஞ்சு விதைகள் என்ற முறையில் விதைச்சோம். இடைப்பகுதியில சூரியகாந்தி, முள்ளங்கி விதைகளை விதைச்சோம். பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துறதுக்காகத்தான் கலப்புப் பயிர் செஞ்சோம்.

கடுகுச் செடியில மஞ்சள் நிறப் பூக்கள் இருக்கும். சூரியகாந்தியிலும் மஞ்சள் நிறப் பூக்கள் இருக்குறதால நன்மை செய்யும் பூச்சிகள் அதிகம் வயலுக்கு வரும்.

இது விளைச்சலைப் பெருக்கும்” என்றவர், பராமரிப்புக் குறித்துப் பேசத் தொடங்கினார்.

பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்

கால் கிலோ விதையில் 120 கிலோ மகசூல்

“நாங்க கடுகுக்குன்னு தனியா உரம் எதுவும் கொடுக்கலை. 15 நாளைக்கு ஒரு தடவை 160 லிட்டர் அமுதக் கரைசலை தெளிப்புநீர்ப் பாசனம் வழியே தெளிச்சோம். மூணு நாளைக்கு ஒரு தடவை பாசனம் செஞ்சோம். களைகளை அப்பப்போ நாங்களே கையால பிடுங்கிடுவோம். கடுகுச் செடி ஆறடி உயரம் வரைக்கும் வளரும். 90 நாள்கள்ல அறுவடை செய்யலாம்.

35-ம் நாளுக்கு மேல பூக்கத் தொடங்கும். 50-ம் நாள் காய்பிடிக்க ஆரம்பிக்கும். மஞ்சள் நிறக் காய் 90-ம் நாள் பழுப்பு நிறமானதும் அறுவடை செய்ய வேண்டியதுதான். காய் பார்த்து சரியாக அறுவடை செய்யணும். மூணு நாள் பொறுத்து அறுவடை செய்யலாம்னு விட்டுட்டா காய் வெடிச்சு, கடுகு பறந்துடும்.

இதுல பெருசா செலவு இல்லை. நாட்டு மாடு இருக்கறதால அமுதக்கரைசல் தயார் செய்யத் தேவையான சாணம், கோமியம் கிடைச்சிடுது. நாட்டுச்சர்க்கரை மட்டும் விலைக்கு வாங்கினோம். விதை, விதைப்புக்கூலி, அறுவடைனு 3,840 ரூபாய் செலவாச்சு. கால் கிலோ விதை போட்ட இடத்துல 120 கிலோ கடுகு மகசூலாகக் கிடைச்சுது” என்றார் புன்னகையோடு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசிய பாலசுப்பிரமணியன், “பனை நடவு, ஆணி பிடுங்கும் திருவிழாவுல எங்ககூட இருந்த தன்னார்வலர்கள் கையால கொஞ்சம் கடுகுச் செடிகளை அறுவடை செய்ய வெச்சோம். அவங்க சந்தோஷமா அறுவடை செஞ்சாங்க. அவங்களுக்கும் நாட்டுக் கடுகு விதைகளைக் கொடுத்தோம். நாட்டுக் கடுகைப் பரவலாக்குறதுதான் எங்க நோக்கம். இப்போ 25 சென்ட் நிலத்துல மட்டும்தான் இயற்கைவழி நாட்டுக் கடுகு பயிர் பண்ணியிருக்கோம். அடுத்து, ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ‘மணிச்சிகை இயற்கைவழி வேளாண் நடுவம்’ முழுவதும் இயற்கை விவசாயம் மூலம் ஒரு தற்சார்பு பண்ணையை உருவாக்குவோம்.

நாட்டுக் கடுகுச் சாகுபடியில் அசத்தும் தேனி இளைஞர்கள்!

அதுதான் எங்க லட்சியம். எங்களுக்குக் கிடைச்ச நாட்டுக் கடுகை யார் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். நாட்டுக் கடுகு விதைக்க ஆர்வம் உள்ளவங்க எங்ககிட்ட வாங்கிக்கலாம்.

ஏக்கருக்கு ஒரு கிலோ விதை இருந்தால் போதும், நாங்க ஒரு கிலோ விதைக் கடுகு 180 ரூபாய்க்கு வாங்கினோம். அதே விலைக்குக் கொடுக்கிறோம்” என்றார்.

தொடர்புக்கு, பாலசுப்பிரமணியன், செல்போன்: 80561 41256 பெரோஸ்கான், செல்போன்: 97896 52303

புரட்டாசி, மார்கழிப் பட்டங்கள் ஏற்றவை!

டுகு விதை கொடுத்த தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பை நடத்தும் கருப்பசாமியிடம் பேசினோம். “கடுகில் சிறியதும் பெரியதுமாக நிறைய ரகங்கள் உள்ளன. மூணாறு, மறையூர் போன்ற மலைப்பகுதிகளில் விளைவிக்கப்படும் கடுகு சிறியதாக இருக்கும். தேனியில் பயிர் செய்யப்பட்டிருப்பது சிறிய ரகம். கடுகுப் பயிர் செய்யும் பட்டங்கள் புரட்டாசி முதல் மார்கழி வரையிலானவை. நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்துகள் பயிர் செய்யக்கூடிய பட்டங்கள்தான்.

இதில் ஊடுபயிர் இருந்தால், நன்மை செய்யும் பூச்சிகளை அதிகமாக ஈர்த்து விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். ஊடுபயிர் இல்லாமலும் விதைக்கின்றனர். அதனால் பிரச்னை ஏதும் இல்லை. `மரபணு மாற்றப்பட்ட கடுகு சந்தைக்கு வரவிருக்கிறது’ என்ற செய்தி பரவியதும், நாட்டுக் கடுகு மீதான ஆர்வம் மக்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. இது நல்ல விஷயம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு