ஆசிரியர் பக்கம்
நாட்டு நடப்பு
Published:Updated:

வேண்டாம் வெளிமாநில விதைகள்! எச்சரிக்கும் திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம்!

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
பிரீமியம் ஸ்டோரி
News
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

சேவை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் இயங்கி வரும் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளுக்குப் பல்வேறு வகைகளில் சேவையாற்றி வருகிறது. இதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்துகொள்ள ஒரு பகல்பொழுதில் இங்கு சென்றோம். திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமையான சூழலில் இந்நிலையம் அமைந்துள்ளது.

நம்மிடம் பேசிய இந்நிலையத்தின் கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீதர். “1929-ம் ஆண்டு இங்கு வேளாண் ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. மிகவும் பழைமையான இந்நிலையம், இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு தமிழக வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. 1982-ம் ஆண்டுத் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையமாகச் செயல்பட ஆரம்பித்தது. 150 ஏக்கர் பரப்பளவில் இந்த நிலையம் செயல்பட்டு வந்த நிலையில்... 2004-ம் ஆண்டு, வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே) இதே வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டதால் அதற்காக 50 ஏக்கர் கொடுக்கப்பட்டது. மீதமுள்ள 100 ஏக்கர் பரப்பளவில் எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது.

ஶ்ரீதர்
ஶ்ரீதர்

இந்த நிலையத்தின் மூலமாக இதுவரையில் 14 நிலக்கடலை ரகங்கள், 7 எள் ரகங்கள், 7 ஆமணக்கு ரகங்கள், ஒரு பனிப்பயறு (சின்னக் காராமணி) ரகம், ஓர் உளுந்து ரகம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி நிலையத்தில், கருவிதை, வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்து, அவற்றைத் தமிழ்நாடு வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய மாவட்ட அளவிலான விதைப்பண்ணைகளுக்கு அனுப்பி வைப்போம். அந்த விதைகளைக் கொண்டு பயிர் பெருக்கம் செய்து ஆதார விதை மற்றும் உண்மைநிலை விதைகளாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற நிலக்கடலை ரகங்கள்

எங்கள் நிலையத்தால் அறிமுகம் செய்யப்படும் ரகங்கள் டி.எம்.வி (திண்டிவனம்) என அழைக்கப்படுகிறது. நிலக்கடலையைப் பொறுத்தவரை, இன்றளவும் விவசாயிகளிடையே அதிக வரவேற்பை பெற்றிருப்பது டி.எம்.வி-2, 7 ரகங்கள். டி.எம்.வி-7 ரகம் மானாவாரி விவசாயத்திற்கு மிகவும் ஏற்றது. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மானாவாரி பகுதிகளில் இந்த ரகம்தான் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. டி.எம்.வி- 2 ரகத்தின் பருப்புகள் சிறிய அளவில் இருக்கும் என்பதால், வெளிநாடுகளில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகவும் கொடுக்கப்படுகிறது. இதனால் இந்த ரக நிலக்கடலை அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் டி.எம்.வி-13 என்ற ரகம் சிவப்பு நிறம் உடையது. சுமார் 50 சதவிகித எண்ணெய் சத்துக் கொண்டது. அதை விடவும் டி.எம்.வி-10 ரகம் அதிக எண்ணெய் சத்துக் கொண்டது. அந்த ரகத்தில் 55 சதவிகித அளவுக்கு எண்ணெய் கிடைக்கும். ஏறக்குறைய 150 நாள்களில் வளரும் திறன் கொண்ட இந்த ரகத்தைப் பல்வேறு பகுதிகளில் நீண்டகாலப் பயிராகச் சாகுபடி செய்கிறார்கள்.

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

இந்நிலையத்தால் கடைசியாக வெளியிட்ட டி.எம்.வி-14 ரகம் மானாவாரி விவசாயத்திற்கு மிகவும் ஏற்ற ரகம். தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் பெரும்பாலும் டி.எம்.வி-14 ரகத்தைத்தான் அதிகளவில் சாகுபடி செய்கிறார்கள்.

டி.எம்.வி.14 ரக நிலக்கடலையின் சிறப்பம்சம் என்னவென்றால், இது 95 - 105 நாட்களிலேயே அறுவடைக்கு வந்துவிடும். இந்த ரகத்தை இறவைப் பாசனத்தில் கார்த்திகைப் பட்டத்தில் பயிர் செய்தால் ஏக்கருக்கு அதிகபட்சமாக 1,250 கிலோ வரையிலும் மகசூல் எடுக்கலாம். மானாவாரி பகுதியாக இருந்தால் ஏக்கருக்கு 900 கிலோ வரையிலும் மகசூல் எடுக்கலாம்.

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

6 முறை தான் மறு உற்பத்தி

உரிய காலத்தில் விதைத்து, பூச்சி, களை நிர்வாகம் உள்ளிட்டவற்றைச் சரியாக மேற்கொண்டால் இந்த மகசூல் நிச்சயமாகக் கிடைக்கும். நிலக்கடலை விதைகள் வாங்கக்கூடிய விவசாயிகள், அதனைத் தங்களுடைய நிலத்தில் அதிகபட்சமாக 6 முறை மறு உற்பத்தி செய்யலாம். அதற்கு மேலும் விதையாகப் பயன்படுத்தினால், முளைப்புறன் குறையும். அவற்றின் குணாதிசயங்களும் மாறத் தொடங்கும்.

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

பயிர் சுழற்சி அவசியம்

விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தொடர்ச்சியாக நிலக்கடலையை மட்டுமே சாகுபடி செய்யக்கூடாது. பயிர் சுழற்சி முறை மிகவும் அவசியம். இது குறித்து இப்பகுதி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், சுழற்சி முறையில் பயிர் செய்வதற்கு மிகவும் ஏற்ற, டி.எம்.வி-1 என்ற பனிபயறு ரகம் (இது ‘நரிப்பயறு’ எனவும் ‘சின்னக் காராமணி’ எனவும் அழைக்கப்படுகிறது) இந்நிலையத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைக் கார்த்திகை-மார்கழி பட்டத்தில் விவசாயிகள் பயிரிடுகிறார்கள். இந்த ரகத்தைப் பயிர் செய்து வெற்றிகரமாக விளைச்சல் எடுக்கக் குறைவான தண்ணீர் மற்றும் பராமரிப்பே போதுமானது.

டி.எம்.வி-1 என்ற உளுந்து ரகத்தையும் வெளியிட்டிருக்கிறோம். கடந்த ஆண்டு 50 டன் விதை உளுந்து உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விற்பனை செய்துள்ளோம். இதுபோன்ற விதை உற்பத்திக்கு உழவர் உற்பத்தியாளர் குழுவினரும் மிகவும் உதவிகரமாக இருக்கிறார்கள்.

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

உழவியல் துறை மூலமாக... களை கட்டுப்பாடு முறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து முறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறோம். குறிப்பாக மண்ணுக்கு அங்கக சத்துகளைத் தரக்கூடிய பசுந்தாள் உரத்தை ஒரு போகத்தில் விதைத்து, அதை மடக்கி உழுது அடுத்த போகத்தில் நிலக்கடலை பயிரிடும்போது கூடுதலான மகசூல் கிடைப்பதை ஆய்வுப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளோம். இதுகுறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில், நிலக்கடலையின் சராசரி மகசூல் ஏக்கருக்கு 1 டன்(1,000 கிலோ) தான். ரசாயன உரங்கள் அதிகம் போடப்போட, மகசூல் இன்னும் குறைந்து கொண்டே இருக்கும். பசுந்தாள் உரப்பயிர்களை வளர்த்து அதை மடக்கி உழுத பிறகு நிலக்கடலை சாகுபடி செய்தால், வழக்கத்தை விட ஏக்கருக்கு 20 - 30 சதவிகிதல் கூடுதல் மகசூல் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

வெளிமாநில ரகங்களில் தண்டழுகல் நோய்

நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடக்கூடிய விவசாயிகளில் பெரும்பாலானோர், குஜராத் உள்ளிட்ட வெளி மாநில ரகங்களைப் பயிரிடுவதில்தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களே.. இதற்கு என்ன காரணம் எனக் கேட்டோம். “நம்முடைய மாநில அரசாங்கத்தால் 20 - 30 சதவிகிதம் தான் விதையை உற்பத்தி செய்து விவசாயிகளுக்குத் தரமுடியும். விவசாயிகள் விதைக்கடலை உற்பத்தியிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், நம்முடைய விவசாயிகள் உரிய முறையில் பதிவு செய்து விதை உற்பத்தி செய்ய முன்வருவதில்லை. ஆட்கள் பற்றாக்குறை, உடனடி பணத்தேவை மற்றும் விற்பனை, சேமித்தலில் உள்ள பல நடைமுறை சிக்கல்கள்... ஆகிய காரணங்களால் விவசாயிகள் விதை உற்பத்தி செய்யத் தயங்குகிறார்கள். தமிழ்நாட்டில் விதை உற்பத்தி போதிய அளவில் இல்லாததால், இங்கு பற்றாக்குறை நிலவுகிறது.

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில்

இதனால் குஜராத் போன்ற வெளிமாநிலங்களிலிருந்து வரும் விதைகளை, விவசாயிகள் வாங்கி சாகுபடி செய்கிறார்கள். குஜராத்தில் தென்மேற்குப் பருவகாற்று வீசும் சமயத்தில் அங்கு சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை நன்றாக விளைச்சல் கொடுக்கும். ஆனால் அந்த ரகங்களைத் தமிழ்நாட்டு விவசாயிகள் கார்த்திகை பட்டத்தில் இங்குப் பயிரிடும்போது அதிக மகசூல் கிடைத்தாலும் கூட அவற்றில் தண்டழுகல் நோய் உள்ளிட்ட பல பிரச்னைகளை நம்முடைய விவசாயிகள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக செலவு செய்கிறார்கள்.

குஜராத் ரகக் கடலையை இங்கு பயிரிடும் விவசாயிகள் அதிக மகசூலுக்காக, ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இங்குள்ள மானாவாரி நிலங்களுக்கு அது சரி வராது.

ஆந்திராவிலிருந்து வெளியிடப்பட்ட கதிரி-1812 (ரப்பாச்சி) ரகம், கைபேசி வாயிலாக வெளியான காணொளிகள் மூலம் விவசாயிகளிடையே அதீத கவர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் விவசாயிகளும் அந்த ரகத்தை ஆர்வமாக விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். ஆனால், இப்போது அதில் தண்டழுகல் நோய் மற்றும் 60 நாட்களில் செடி காய்ந்து விடுவது, காய்கள் திரட்சியற்றுச் சிறிதாக இருப்பது, முன்னதாக வந்த காய்கள் விரைவில் முளைத்து விடுவது, மறுசுழற்சியின் போது முளைப்புத்திறன் குறைவாக இருப்பது, எண்ணெய் கசப்புத்தன்மையாக இருப்பது போன்ற பல பிரச்னைகள் வருகின்றன. அதனால் விவசாயிகளுக்கு விலையும் குறைவாகவே கிடைக்கிறது. மேலும் இடுபொருள், பராமரிப்பு செலவும் அதிகம். ஆனால் நம்முடைய பாரம்பரிய ரகங்கள் மற்றும் இங்குள்ள ஆராய்ச்சி நிலையங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ரகங்களைப் பயிர் செய்தால், இதுபோன்ற பிரச்னைகள் இவற்றில் ஏற்படுவதில்லை. அதேசமயம் போதுமான மகசூலும் கிடைத்துவிடும். விதை உற்பத்தி குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடையே ஏற்படுத்த வேண்டும்” என்று சொல்லி முடித்தார்.

தொடர்புக்கு:

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம்.

தொலைபேசி: 04147 250293

வேளாண் அறிவியல் நிலையம்,

தொலைபேசி: 04147 250001

திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம்
திண்டிவனம் எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம்

இயற்கை இடுபொருள் தயார் செய்யப் பயிற்சி

வேளாண் அறிவியல் நிலையத்தின் (கே.வி.கே) செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய உதவிப் பேராசிரியர் பரமேஸ்வரி, ‘‘விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை வேளாண்மை சார்ந்த தொழில் முனைவோராக மாற்றுவதிலும் முனைப்பு காட்டி வருகிறோம். பரண்மேல் ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பண்ணை குட்டை அமைத்தல், நர்சரி அமைத்தல் போன்ற செயல்விளக்க திடல்களை இந்நிலையத்தின் வளாகத்திலேயே அமைத்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக... பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி உள்ளிட்ட இயற்கை இடுபொருள்கள் தயார் செய்யப் பயிற்சி கொடுக்கிறோம். தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு, கால்நடைகள் வளர்ப்பு ஆகியவற்றுக்கும் பயிற்சி அளிக்கிறோம்’’ என்றார்.

வாடல் நோயைத் தாங்கி வளரும் எள் ரகம்

‘‘எள் ரகங்களைப் பொறுத்தவரை... டி.எம்.வி 4, 6 ஆகிய பழுப்பு ரகங்களுக்கும், டி.எம்.வி-3 என்ற கறுப்பு ரகத்திற்கும் இன்றளவும் நல்ல தேவை இருக்கிறது. இது தவிர டி.எம்.வி-7 என்ற கறுப்பு நிற எள் ரகமும் உள்ளது. இது வாடல் நோயை எதிர்கொண்டு விளையக்கூடியது. இதன் வயது 80 நாள்கள். மாசி பட்டத்தில் இறவைப் பாசனத்தில் இதைச் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 1,780 கிலோ வரை மகசூல் கிடைக்கும். மானாவாரியாக இருந்தால் 750 கிலோ வரையிலும் மகசூல் கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார் ஶ்ரீதர்.

பரமேஸ்வரி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன்
பரமேஸ்வரி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன்

நல்ல மகசூல் கிடைச்சுது

விழுப்புரம் மாவட்டம், பொன்னங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன், “கடந்த 20 வருஷமா, எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தோடு தொடர்புல இருக்கேன். நிலக்கடலை, எள் சாகுபடியில எனக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளுக்கு இங்கதான் ஆலோசனைகள் கேட்டுக்குவேன். எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடியில கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத் தொழில்நுட்பங்கள் பத்தி விவசாயிகளுக்குப் பயிற்சிகளும் கொடுக்குறாங்க. அந்தப் பயிற்சிகள்ல எங்க பகுதி விவசாயிங்க நிறைய பேர் கலந்துருக்கோம். டி.எம்.வி -13 ரக நிலக்கடலையை இவங்க அறிமுகப்படுத்தினப்ப, சோதனை முயற்சியா அதைப் பயிரிட்டேன். நல்ல மகசூல் கிடைச்சுது. எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடிக்கு மட்டுமில்ல.. நெல், உளுந்து, பச்சைப்பயறு உள்பட எல்லாவிதமான பயிர்களுக்கும் இங்க ஆலோசனை கேட்டுக்குவேன்’’ எனத் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், நல்லாளம் பகுதியை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன், “எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தோட வளாகத்துலயே கே.வி.கே-வும் செயல்படுறது விவசாயிகளுக்குப் பல வகைகள்லயும் ரொம்ப உதவியா இருக்கு. பயிர்கள்ல எந்த ஒரு சின்னப் பாதிப்புனாலும் கூட, இங்கவுள்ள விஞ்ஞானிகள்கிட்ட ஆலோசனைகள் கேட்டு, அவங்க சொல்ற மருந்துகளைத்தான் பயன்படுத்துறோம். இந்த வாய்ப்பு இல்லைனா, உரக்கடைக்காரங்க சொல்ற பலவிதமான மருந்துகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயிகள் ஏமாறக்கூடிய நிலைமைதான் ஏற்படும். இங்க முதல்நிலை செயல் விளக்க திடல்கள் இருக்கு. இங்கவுள்ள விஞ்ஞானிகள்... தேர்ச்சி பெற்ற விவசாயிகளோட இணைஞ்சி பயிற்சி நடத்துறதுனால, எளிதா புரிஞ்சிக்க முடியுது’’ எனத் தெரிவித்தார்.