Published:Updated:

சைக்கிளில் கலப்பையைப் பொருத்தி நூதன விவசாயம்; நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்திய பலே விவசாயி!

சைக்கிளில் ஏர்க்கலப்பை
சைக்கிளில் ஏர்க்கலப்பை

சைக்கிள் மூலமாக நூதன முறையில் விவசாயம் செய்து வரும் நாகராஜ், செலவையும் நேரத்தையும் ஒரு சேர மிச்சப்படுத்தி அசத்திக் கொண்டிருக்கிறார்.

திருத்தணியைச் சேர்ந்த விவசாயி நாகராஜ் வறுமை காரணமாகத் தனது 11 வயது மகனின் சைக்கிளில் ஏர்க்கலப்பையைப் பொருத்தி நூதன முறையில் விவசாயம் செய்து வருகிறார். அண்மையில் சைக்கிளில் தந்தையும் மகனும் விவசாயம் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது. அதனையடுத்து, தமிழக நிதியமைச்சர் பி.டி .ஆர் பழனிவேல் தியாகராஜன், உடனடியாக சிறுவனுக்கு உதவுமாறு திருத்தணி திமுக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, நேற்று திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் தலைமையில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி மற்றும் பகுதி நிர்வாகிகள் சிறுவனை நேரில் சந்தித்து புது சைக்கிள் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கியிருக்கின்றனர்.

சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள ஏர்க்கலப்பை
சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள ஏர்க்கலப்பை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியை அடுத்த அகூர் கிராமத்தில் சம்பங்கி மலர் சாகுபடி செய்து வரும் விவசாயி நாகராஜிடம் பேசினோம். ``திருத்தணிதான் எங்க பூர்வீகம். எங்க அப்பா, தாத்தா காலத்துல இருந்து விவசாயம்தான் எங்க பிரதான தொழில். குடும்ப சூழல் காரணமா இருந்த காணியெல்லாத்தையும் எங்க வீட்டு பெரியவங்க விற்பனை செஞ்சுட்டு பங்கு பிரிச்சு கொடுத்தாங்க. அதுல நானும் என்னோட தம்பி அலெக்ஸ்பாண்டியனும் சேர்ந்து இங்க திருத்தணி பக்கத்துல அகூர் கிராமத்துல 3 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி போட்டோம். இந்த நிலத்துலதான் நெல், வெண்டைக்காய், பூ'னு பல வருஷமா சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம். இப்ப சம்பங்கி மலர் சாகுபடியில் இறங்கியிருக்குறோம்.

இந்த கொரோனா வந்ததுல இருந்து ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்குறோம். அதே மாதிரி விவசாய கூலி வேலைகளுக்கும் இங்கெல்லாம் முன்ன மாதிரி ஆள்கள் கிடைக்குறதில்ல. பெரும்பாலும் எல்லாரும் 100 நாள் வேலைத் திட்டத்துக்குப் போயிடுறாங்க. அதனால, எங்களுக்கு இங்க விவசாய வேலைகளுக்கு ஆள் இல்லாம போயிடுச்சு. சம்பங்கி மலர் தோட்டத்துல களை எடுக்குறது ரொம்பப் பெரிய வேலை. ஒரு ஏக்கருக்கு 5 நாள் களை எடுக்க 30 பேருக்கு 7000 கூலி கொடுக்க வேண்டியிருக்கு. அதே மாதிரி, 8 தடவ களையெடுக்கணும். மொத்தத்துல 50,000 ரூபாய் வரைக்கும் இதுக்கே செலவாகும். ஆனா, அதுக்கு கூட ஆள் யாரும் அவ்வளவா வர்றதில்ல.

`ஆளுநரிடமிருந்து தேடி வந்த விருது' - அசத்தும் விவசாயி!

இப்படியிருக்கும் போதுதான் சமீபமா ஆந்திராவுக்கு சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருந்தேன். அங்க நிறைய மலர் தோட்டங்களில் சைக்கிளோட ஒரு பகுதியில ஏர்க்கலப்பையைப் பொருத்திட்டு நூதனமா களை எடுத்துட்டு இருந்தாங்க. அத பார்த்துட்டு, வீடு திரும்பியதும் நாங்களும் அதே மாதிரி செய்ய திட்டமிட்டோம். என்னோட திட்டத்துக்கு என்னோட பையன் அவனுக்குனு இருந்த ஒரே ஒரு சைக்கிளைக் கொடுத்தான். அதுல ஒரு பக்கத்துல இருந்த சக்கரத்தைக் கழட்டிட்டு ஏர்கலப்பையப் பொருத்தினேன். கொஞ்சம் செலவு செஞ்சு சைக்கிளை மாத்தினோம். பிறகு, கயிறு மூலம் இழுத்து களை எடுத்து பார்த்தோம். நல்லாவே களை எடுத்துச்சு. அதுல இருந்து, இப்ப தொடர்ச்சியா சைக்கிள் மூலமாகவே செஞ்சுட்டு இருக்கேன். எங்களுக்கு ஒரு சைக்கிளில் ஏர்க்கலப்பையைப் பொருத்த 3000 ரூபா செலவாச்சு. ஆனா, அதனால பல ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சமாகியிருக்கு. விவசாயத்துல செலவை ஓரளவுக்கு குறைத்தால்தான் கைக்கு லாபம் கிடைக்கும்.

ஏர்க்கலப்பையைப் சைக்கிளில் பொருத்தி களை எடுக்க ரெண்டு பேர் இருந்தாலே போதும். அதனால, கூலிக்கு ஆள் யாரையும் நாங்க கூப்பிடறதில்ல. எங்க குடும்ப ஆள்களை வெச்சேதான் செய்துட்டு இருக்கோம். ஓர் ஏக்கர் நிலத்துல 5 மணி நேரத்துல களை எடுத்துட்டு இருக்குறோம். எங்க பையன்தான் இதுல ரொம்ப ஆர்வமா ஈடுபட்டுட்டு இருக்கான். அவனுக்கு ஸ்கூல் இல்லாததால எங்களுக்கு உதவிட்டு இருக்குறான். நானும் எங்க பையனும் சைக்கிள் மூலமா நூதன முறையில விவசாயம் செய்யறதை நெறைய பேரு வீடியோ எடுத்துட்டு இருக்காங்க. அப்படிதான் எங்க வீடியோ வைரலாகி இருக்கு" என்று சிறு புன்னகை கலந்த பேச்சுடன் முடித்தார் நாகராஜ்.

சிறுவனுக்கு புது சைக்கிள் மற்றும் உணவுப் பொருள் வழங்கிய திமுகவினர்
சிறுவனுக்கு புது சைக்கிள் மற்றும் உணவுப் பொருள் வழங்கிய திமுகவினர்
350 ரூபாயில் களை எடுக்கும் கருவி! | Weeding Machine

சைக்கிள் மூலமாக நூதன முறையில் விவசாயம் செய்து வரும் நாகராஜ், செலவையும் நேரத்தையும் ஒரு சேர மிச்சப்படுத்தி அசத்திக் கொண்டிருக்கிறார். தந்தையின் உழவுக்கு உயிரூட்ட தன்னுடைய சைக்கிளை மனமுவந்து கொடுத்த சிறுவனுக்கு, வீடியோ இணையத்தில் வைரலாகவே தற்போது அதன் மூலமாக மீண்டும் ஒரு புது சைக்கிளும் கிடைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு