Published:Updated:

வெற்றிலை சாகுபடிக்கு வந்த சிக்கல்; விகடனில் வெளியான செய்தி; நடவடிக்கையில் இறங்கிய எம்.எல்.ஏ!

வெற்றிலை சாகுபடி
வெற்றிலை சாகுபடி

அகத்தி, செம்பை விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் வெற்றிலை விவசாயிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில் இதுகுறித்து விகடனில் செய்தி வெளியானது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வெற்றிலை சாகுபடி நடைபெற்று வருகிறது. வெற்றிலைக் கொடிகளை ஏற்றி படர விடுவதற்கு, கொடிக்கால்களாக, அகத்தி, செம்பை விதைகளை விதைப்பு செய்வது இப்பகுதி விவசாயிகளின் வழக்கம். தற்போது இந்த விதைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளார்கள். இதுகுறித்து விகடன் இணைய தளத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அது பல தாப்பினரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில்தான் இப்பிரச்னையைத் தீர்க்க, திருவையாறு தொகுதி திமுக எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் விரைவான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.

துரை. சந்திரசேகரன்
துரை. சந்திரசேகரன்

காவிரியின் ஐந்து கிளை ஆறுகள் ஓடக்கூடிய திருவையாறு மற்றும் கீழத்திருப்பந்துருத்தி, மேலத்திருப்பந்துருத்தி, கண்டியூர், திருவளாம்பொழில், நடுக்காவேரி, கருப்பூர், மணத்திடல், ஆச்சனூர், பொன்னாவரை, மைக்கேல்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் அதிக அளவில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலை இந்திய அளவில் புகழ்மிக்கது. மாதத்துக்கு 2 - 3 கோடி ரூபாய் அளவுக்கு இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு வெற்றிலை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகள் வெற்றிலைக் கொடியை ஏற்றி படர விடுவதற்கு, கொடிக்கால்களாக, அகத்தி மற்றும் செம்பை விதைகளை விதைப்பு செய்து குறு மரங்களாக வளர்த்தெடுத்து பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில்தான் தற்போது இந்த விதைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்திருந்தார்கள்.

இப்பிரச்னையை நம் கவனத்துக்குக் கொண்டு வந்த வெற்றிலை விவசாயி சுகுமாறன், ``வெற்றிலை சாகுபடியைப் பொறுத்தவரைக்கும், அகத்தியும் செம்பையும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தப் பகுதி விவசாயிகள் ஒவ்வொருத்தரும் 20-25 சென்ட் பரப்புல வெற்றிலை சாகுபடி செய்றது வழக்கம். மழைக்காலம் ஆரம்பிக்கறதுனால, இப்ப அகத்தி, செம்பை விதைகளை விதைப்பு செஞ்சு, 60 - 65 நாள்கள்ல, சுமார் மூணு அடி உயரத்துல அகத்தியும் செம்பையும் வளர்ந்த பிறகு, வெற்றிலைக் கொடியை ஊன்றுவோம். அது வளர்த்து, அகத்தி, செம்பை மரங்கள்ல படர்ந்து வளரும்.

வெற்றிலைக் கொடிகளுக்கு நிரந்தரமான வெயிலும் இருக்கக் கூடாது; நிரந்தரமான நிழலும் இருக்கக் கூடாது. இதுக்கு கொடிக் கால்களாக இருக்கக்கூடிய, அகத்தியும் செம்பையும் காற்றில் அசைந்தாடி, வெற்றிலைக்கு ஏற்ற நிழலையும் வெயிலையும் மாற்றி மாற்றிக் கொடுத்துக்கிட்டே இருக்கும். முருங்கையையும் கூட கொடிக்கால்களாக வளர்க்குறது உண்டு. ஆனால், அது பெரிய மரங்களாக வளர்றதுனால, வெற்றிலையோட வளர்ச்சியை அது பாதிக்கும். காற்று வேகமாக அடிச்சா, முருங்கை கீழ சாஞ்சிடும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், அகத்தியும் செம்பையும் அப்படியல்ல. அவ்வளவு சீக்கிரத்துல கீழே சாஞ்சிடாது. இதுமாதிரியான காரணங்களால் தான், வெற்றிலைக் கொடிக்காலுக்கு அகத்தியையும் செம்பையையும் பயன்படுத்துறோம். எங்க பகுதி விவசாயிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மற்ற பகுதிகள்ல வெற்றிலை சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளும் இதைத்தான் விதைப்பு செய்றாங்க. 20 சென்ட்ல வெற்றிலை சாகுபடிக்கு, கொடிக்கால்கள் அமைக்க, மூணு கிலோ அகத்தி விதையையும் மூணு கிலோ செம்பை விதையையும் கலந்து விதைப்பு செய்வோம்.

சுகுமாறன்
சுகுமாறன்

இந்த விதைகளை, ஒரு கிலோ 300 ரூபாய்ங்கற விலையில வாங்குறதான் வழக்கம். ஆனால், இப்ப ஒரு கிலோ 1,500 ரூபாய்னு விற்பனை செய்யப்படுது. இது ரொம்பவே அநியாய விலையாகவே இருந்தாலும்கூட, வேறு வழி இல்லாததால, இதை வாங்க விவசாயிகள் தயாராகத்தான் இருக்கோம். ஆனாலும், அவ்வளவு எளிதா கிடைக்க மாட்டேங்குது. கடுமையான தட்டுப்பாடு நிலவுது’’ எனத் தெரிவித்திருந்தார்.

வெற்றிலை விவசாயிகளின் ஆதங்கத்தைத் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு பசுமை விகடன் கொண்டு சென்றதோடு, விகடன் இணையத்தில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அது பல தரப்பிலும் கவனத்தை ஈர்த்தது. அந்தச் செய்தி, திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திசேகரின் கவனத்துக்குச் சென்றவுடனே, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ``வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கலந்தாலோசித்து, செம்பை, அகத்தி விதைகள் தட்டுப்பாடு இன்றிக் கிடைக்க, நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளேன். விரைவில் தட்டுப்பாடு சரி செய்யப்படும். இதைக் கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்கு பசுமை விகடனுக்கு நன்றி’’ எனத் தெரிவித்திருந்தார்.

துரை. சந்திரசேகரன் எழுதிய கடிதம்
துரை. சந்திரசேகரன் எழுதிய கடிதம்

இவர், அமைச்சருக்கு எழுதிய கடிதத்தையும் வெளியிட்டிருந்தார். துரை.சந்திரசேகரன் சார்பில் நம்மிடம் பேசியவர்கள், ``வெளிமாநிலங்களில் இருந்து அகத்தி, செம்பை விதைகள் கொள்முதல் செய்து வெற்றிலை விவசாயிகளுக்கு விநியோகிக்க, விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இப்பிரச்னை தீர்க்கப்படும்’’ எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாகப் பேசும் இப்பகுதி வெற்றிலை விவசாயிகள், ``எங்க மேல அக்கறைப்பட்டு, விரைவான நடவடிக்கைகளில் இறங்கின எங்க தொகுதி எம்.எல்.ஏ-வுக்கும், செய்தி வெளியிட்ட பசுமை விகடனுக்கும் நன்றி தெரிவிச்சிக்குறோம். எம்.எல்.ஏ-வோட நடவடிக்கைக்கு கண்டிப்பாகப் பலன் இருக்கும்னு நம்புறோம்’’ எனத் தெரிவித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு