Published:Updated:

திருவள்ளூர்: 19 மணி நேர மின்வெட்டு; தண்ணீரின்றி கருகும் பயிர்கள்... போராடும் விவசாயிகள்!

மறியல்
மறியல்

திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில்  கடந்த ஒரு மாத காலமாக நாளுக்கு 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அருகில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டம் திருவள்ளூர். விவசாயமே இங்கு மக்களின் பிரதான தொழிலாக இருக்கிறது. மண்ணை நம்பி வயக்காட்டில் உழைக்கும் திருவள்ளூர் விவசாயிகளுக்குக் கோடைக்காலம் வந்துவிட்டாலே திண்டாட்டம்தான். கோடைக் காலங்களில் நிலவும் தொடர் மின்வெட்டுகளால் விவசாயிகளின் பயிர்கள் கருகி வீணாகும் அவலம் பல வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வருடமும் அதே நிலை தொடர்வதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விவசாயம்
விவசாயம்

திருவள்ளூரை அடுத்த கீழானுர், மெய்யூர், நசரத், தண்டலம், காவனூர், கரிகாலவாக்கம் மற்றும் விஷ்ணுவாக்கம் உள்ளிட்ட 25 கிராமங்களில் 20,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர், நிலக்கடலை மற்றும் காய்கறிகள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மின்சாரம் முதன்மை தேவையாக இருக்கிறது.

ஆனால், கோடைக் காலம் தொடங்கிய நாளிலிருந்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் ஒரு நாளுக்கு 3 மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 19 மணி நேர நெடுநீள மின் வெட்டால் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், வீடுகளில் மின்சாரம் இல்லாததால் கொளுத்தும் வெயிலில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மின் தடை
மின் தடை

தொடர் மின்வெட்டு தொடர்பாகப் பலமுறை கிராம பொதுமக்களும் விவசாயிகளும் மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கப் படாததால் நேற்று தாமரைப்பாக்கம் சாலையில் நூற்றுக்கும் அதிகமானோர் சீரான மின் விநியோகம் வேண்டி மின்வாரியத்தைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சாலையின் குறுக்கே முள்வேலிகளையும் கற்களையும் போட்டு மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வெங்கல் போலீஸார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், சமரசமாகாத விவசாயிகள் தொடர்ந்து மின்வாரியத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்
சாலை மறியல்

அதையடுத்து, அங்கு விரைந்த திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் சாரதி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், விவசாயிகள் மின் வெட்டு இனிமேல் நிகழாது என்று உத்தரவாதம் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவதாக கூறியதால் காவல் துணை கண்காணிப்பாளர் சாரதி மின்வாரிய அதிகாரிகளை நேரில் அழைத்துப் பேசினார்.

மின்வாரியத்தினர் 2 நாள்களில் மின் விநியோகத்தைச் சீர்படுத்துவதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் சாலையின் குறுக்கே போட்டு வைத்த வேலிகளை அகற்றி போக்குவரத்தைச் சீர்படுத்திவிட்டு அங்கிருந்து களைந்து சென்றனர். மின்மிகை மாநிலமான தமிழகத்தில் இந்த கோடைக்காவது தங்கு தடையற்ற மின் விநியோகம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு தற்போது மன வேதனை மட்டுமே மிஞ்சியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு