Published:Updated:

‘ஏண்டா நாம விவசாயத்துக்கு வந்தோம்’னு, ஒரு நாளும் நினைச்சதே இல்ல! ‘பூண்டி’ கலைவாணன் எம்.எல்.ஏ

‘பூண்டி’ கலைவாணன் எம்.எல்.ஏ
பிரீமியம் ஸ்டோரி
‘பூண்டி’ கலைவாணன் எம்.எல்.ஏ

முயற்சி

‘ஏண்டா நாம விவசாயத்துக்கு வந்தோம்’னு, ஒரு நாளும் நினைச்சதே இல்ல! ‘பூண்டி’ கலைவாணன் எம்.எல்.ஏ

முயற்சி

Published:Updated:
‘பூண்டி’ கலைவாணன் எம்.எல்.ஏ
பிரீமியம் ஸ்டோரி
‘பூண்டி’ கலைவாணன் எம்.எல்.ஏ

‘‘நானும் ஒரு விவசாயினு சொல்றதைவிட, இதுதான் என்னோட முதல் அடையாளம், முழுமையான அடையாளம்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். இப்பவும் எங்க குடும்பத்தோட ஜீவாதாரம், விவசாயம்தான். இதுதான் எங்க வாழ்க்கை. இதுதான் எனக்கு நிரந்தரம். அரசியல்வாதிங்கறது இடைச் செருகல்தான்’’ என்ற திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க-வின் திருவாரூர் மாவட்டச் செயலாளருமான ‘பூண்டி’ கலைவாணனின் பேச்சில் ஆத்மார்த்த மான வார்த்தைகள் நிறைந்திருக்கின்றன.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே உள்ள நாலில்ஒன்று மற்றும் பழவனக்குடி ஆகிய இடங்களில் அமைந் துள்ளது, இவருடைய இயற்கை விவசாயப் பண்ணை. நானும் விவசாயிதான் பகுதிக் காக, அவரைச் சந்திக்கச் சென்றோம்.

குதிரைகளுடன்
குதிரைகளுடன்

குதிரைகளுக்குக் கடலை மிட்டாய் கொடுத்துக்கொண்டிருந்த கலைவாணன் மிகுந்த மகிழ்ச்சியோடு நம்மை வரவேற்றார். ‘‘நாலு நாட்டுக் குதிரைகளை வளர்க்குறேன். என்னைப் பார்த்துட்டா, பாசத்தோட ஓடி வரும். என் கையால, கடலை மிட்டாய் ஊட்டிவிடுறது, இதுங்களுக்கு விருந்து மாதிரி. ரொம்பவே விரும்பிச் சாப்பிடும். எங்களோட மாடுகளுக்கும் கடலை மிட்டாய் ரொம்பப் பிடிக்கும். உம்பளச் சேரி, கிர், சாஹிவால், காங்கிரேஜ், புங்கனூர் குட்டை உட்பட 40 நாட்டு மாடுகள் வளர்க்குறேன். இப்பெல்லாம் நம்ம விவசாயிகள் எருமை மாடுகள் வளர்க்குறதை குறைச்சிட்டாங்க. அதைக் கெளரவக் குறைச்சலாகவும் நினைக் கிறாங்க. ஆனா, நான் 15 எருமைகள வளர்க்குறேன். அதோட பால் ரொம்பவே சுவையா இருக்கும். அதுல மருத்துவக் குணங்களும் அதிகம்’’ என்றவர், பேசிக் கொண்டே பண்ணைக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

நெல் வயலில் பூண்டி கலைவாணன்
நெல் வயலில் பூண்டி கலைவாணன்

‘‘எங்களோடது கூட்டுக் குடும்பம். தினமும் நிறைய பால் தேவைப்படும். கட்சி அலுவலகத்துக்கும் பால் தேவைப்படும். எங்க தேவை போக மீதியுள்ளதை ‘டிப்போ’வுல வித்துடுவோம். நகர்புறமா இருந்தா, நாட்டு மாட்டு பாலுக்கு அதிகமா விலை கிடைக்கும். ஆனா, இங்க லிட்டருக்கு 29 ரூபாய்தான் கிடைக்குது. பால் வருமானத்தை நாங்க பெருசா எதிர்பார்க்குறதில்ல. நாட்டு மாடுகளோட கழிவுகளாலதான், எங்களோட பண்ணை யில் இயற்கை விவசாயம் செழிப்பா நடந்துகிட்டு இருக்கு. நான் இயற்கை விவசாயத்துக்கு மாறி, 10 வருஷத்துக்கு மேலாகுது. ஒரு துளிகூட ரசாயனத்தை அனுமதிக்குறதில்ல. இயற்கை விவசாயத்தால ஆரோக்கியமான உணவு கிடைக்குறதோட, 50 சதவிகிதத்துக்கும் மேல உற்பத்தி செலவு குறையுது. இயற்கை விவசாயம் செஞ்சா, வழக்கத்தைவிடக் கூடுதலா லாபம் பார்க்க முடியும்ங்கறதுதான் என்னோட அனுபவம். ஆனா, ஆரம்பக்கட்டத்துல விளைச்சல்ல ஏற்ற இறக்கம் வரும். அதைப்பத்தியெல்லாம் கவலைப்படாம இயற்கை விவசாயம் செஞ்சிட்டா, காலம் முழுக்கக் கவலையே இல்லை. மண்ணு வளமாகிட்டா, இடுபொருளுக்குனு தனியா எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை. செழிப்பான விளைச்சல் கிடைக்கும்’’ என்றவர், தன்னுடைய விவசாயத்தைப் பற்றிப் பேசினார்.

டிராக்டர்
டிராக்டர்

‘‘60 ஏக்கர்ல... சம்பா, குறுவை இருபோகம் பாரம்பர்ய நெல் சாகுபடி செய்றோம். அடியுரமா ஆட்டு எரு, மாட்டு எரு, குதிரை எரு கொடுக்குறோம். மேலுரமா, பஞ்சகவ்யா, மீன் அமிலம், தேமோர் கரைசல் கொடுப்போம். பூச்சித்தாக்குதல் இருந்தா மூலிகைப் பூச்சிவிரட்டிக் கொடுப்போம். சராசரியா ஏக்கருக்கு 24 மூட்டை மகசூல் கிடைக்குது. கறுப்புக் கவுனி, காட்டுயானம், சீரகச் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, தூயமல்லி, ஆத்தூர் கிச்சலிச் சம்பா, பூங்கார், குள்ளக்கார், கருங்குறுவை, அறுபதாம் குறுவை உட்பட இன்னும் பல ரகங்கள் சாகுபடி செய்றோம். எங்களோட வீட்டுத் தேவைக்கு மூணு வேளையும் பாரம்பர்ய அரிசிதான் பயன்படுத்திக்கிட்டு இருக்கோம். எங்க வீட்டு குழந்தைகளும்கூட இதை விரும்பிச் சாப்பிடுறாங்க. இட்லிக்குக் காட்டுயானம் அருமையா இருக்கும். சாப்பாட்டுக்கு ஆத்தூர் கிச்சலிச் சம்பாவும், தூயமல்லியும் சிறப்பா இருக்கு. நான் காலையில இட்லி, தோசை யெல்லாம் சாப்பிட மாட்டேன். மாப்பிள்ளைச் சம்பா அரிசியில சமைச்சு, முதல் நாள் ராத்திரியே தண்ணி ஊத்தி வெச்ச பழைய சோறு சாப்பிடுறதுதான் வழக்கம்.

வண்டியோட்டும் மாடுகளுடன்
வண்டியோட்டும் மாடுகளுடன்

நாங்க உற்பத்தி செய்யக்கூடிய பாரம்பர்ய நெல்லை, பெரும்பாலும் அரிசியா மதிப்புக் கூட்டித்தான் விற்பனை செய்வோம். மரபு அமுது அங்காடிங்கற பேர்ல அரிசி கடை நடத்திக்கிட்டு இருக்கோம். சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி சில சமயங்கள்ல நெல்லாகவும் விற்பனை செய்வோம்’’ என்றவர், தென்னை சாகுபடி பற்றிப் பேசினார்.

‘‘20 ஏக்கர் தென்னந்தோப்பு இருக்கு. அதுலயும் துளிகூட ரசாயனம் கிடையாது. நிறைவான வருமானம் கிடைச்சுக்கிட்டு இருக்கு. அதுல 7 ஏக்கர் தென்னையில சோதனை முயற்சியா, மிளகு, பாக்கு போட்டுருக்கோம். இனிமேல்தான் காய்ப்புக்கு வரும். ஒரு ஏக்கர்ல பசுந்தீவனம் சாகுபடி செய்றோம். கோ-4, வேலி மசால், முயல் மசால் பயிர் செய்றோம். எங்களோட மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் கிடைச்சிடுது. பாரம்பர்ய நெல் சாகுபடி மூலம் கிடைக்கக்கூடிய சத்தான வைக்கோலை, எங்களோட மாடுகளுக்கு உலர் தீவனமா கொடுக்குறதுனால, நல்லா ஆரோக்கியமா வளருது’’ என்றவர் நிறைவாக,

‘‘என்னைப் பொறுத்தவரைக்கும் விவசாயம்ங்கறது லாபகரமான தொழில் தான். எல்லாத் தொழில்கள்லயும் உள்ள மாதிரி, இதுலயும் ஒரு சில நேரங்கள்ல நஷ்டம் ஏற்படத்தான் செய்யும். அதுக்காக விரக்தி அடையக்கூடாது. எந்த ஒரு சூழ்நிலை யிலயும் விவசாயிகள் விவசாயத்தைவிட்டு வெளியேறிடக் கூடாது.

பண்ணையில்
பண்ணையில்

மத்த எந்தத் தொழில்லயும் கிடைக்காத மனநிம்மதி, சுயசார்பான வருமானம், விவசாயத்துல மட்டும்தான் கிடைக்கும். குறிப்பா, இயற்கை விவசாயம் செஞ்சு, விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செஞ்சா, இதுல நிச்சயமா நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

‘ஏண்டா நாம விவசாயத்துக்கு வந்தோம்’னு, ஒருநாளும் நினைச்சதே இல்ல. ஆனா, ‘ஏண்டா இந்த அரசியலுக்கு வந்தோம்’னு பல சமயங்கள்ல நினைச்சிருக்கேன். எனக்கு மனச்சோர்வு ஏற்பட்டா, உடனே பண்ணைக்கு வந்துடுவேன். இங்கவுள்ள பயிர்களையும் என்னோட ஆடு, மாடு, குதிரைகளையும் பார்த்தால் அப்படியே மனசு லேசாயிடும்’’ என்று உற்சாகமாகப் பேசி முடித்தார்.செவ்வாழை விரும்பிய கலைஞர்!

தனது தோட்ட செவ்வாழை பற்றிப் பேசிய கலைவாணன், ‘‘என்னோட பண்ணையில முன்னாடியெல்லாம் செவ்வாழை சாகுபடி செய்வேன். தலைவர் கலைஞருக்குச் செவ்வாழை ரொம்பப் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தலைவரோட வீட்டுக்குச் செவ்வாழை பழங்கள் அனுப்பி வைப்பேன். என்னோட தோப்புல விளைஞ்ச இளநீரும் தலைவருக்கு ரொம்பப் பிடிக்கும். நல்லா சுவையா இருக்குனு ரொம்பவே விரும்பினார்’’ என்றார்.

எல்லா வேலைகளும் செய்வேன்!

‘‘விவசாயத்துல எனக்கு எல்லா வேலைகளும் தெரியும். நானே இறங்கி வேலையும் பார்ப்பேன். அரசியல் தொடர்பான பணிகள்ல நான் மும்முரமா இருந்தாலும், தினமும் காலையில பண்ணைக்கு வந்துடுவேன். என்னென்ன வேலைகள் பார்க்கணும்னு விவசாயத் தொழிலாளர்கள்கிட்ட சொல்லிட்டு கிளம்பிடுவேன். என்னோட மகன் கலைமுகுந்தன், சட்டப்படிப்பு படிச்சிக்கிட்டு இருக்கார். அவருக்கும் விவசாயத்துல ஆர்வம் அதிகம். என்னால் பண்ணைக்கு வரமுடியாத நாள்கள்ல அவர் முழுமையா கவனிச்சிக்கிறார்’’ என்கிறார் பூண்டி கலைவாணன்.

பண்ணையில்
பண்ணையில்

மதிய உணவில்
பாரம்பர்ய அரிசி!

‘‘இன்றைய தலைமுறை ஆரோக்கியமா வாழவும், இயற்கை விவசாயிகளை ஊக்கப் படுத்தவும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்ல, பாரம்பர்ய நெல் ரகங்களையும் கொள்முதல் செய்யணும். இதுல ஏராளமான சத்துகள் நிறைஞ்சிருக்கு. பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்துலயும், அரசு மருத்துவமனைகள்ல சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளுக்கும் இந்த உணவைக் கொடுக்கலாம். ஆரம்பச் சுகாதார நிலையங் கள்ல, கர்ப்பிணிப் பெண்களுக்குச் சத்து மாவு கொடுக்கும்போது, குடவாலை அரிசி, பூங்கார் அரிசியையும் சேர்த்துக் கொடுக்கலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு ரொம்ப நல்லது. இதுசம்பந்தமா அமைச்சர்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதோடு, சட்டமன்றத்திலும் வலியுறுத்தி பேசியுள்ளேன்’’ என்றார். கலைவாணன்.

மண் ருசி!

மண் நஞ்சாவது குறித்துப் பேசிய கலைவாணன், ‘‘முன்னாடியெல்லாம், விவசாயிகள் ஒரு நிலத்தை விலைக்கு வாங்குறாங்கனா, அங்க உள்ள மண்ணைக் கொஞ்சம் எடுத்து வாயில போட்டு ருசி பார்த்துட்டு முடிவெடுப்பாங்க. இப்படிப்பட்ட நிலத்துல நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனத்தைப் போட்டு, மண்ணை விஷமாக்குறது வேதனையானது’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism