Published:Updated:

1 கிலோ 250 ரூபாய்! `உம்பளச்சேரி கன்றுக்குட்டிகளை எடை வைத்து விற்பதா?' விவசாயிகள் ஆதங்கம்

உம்பளச்சேரி மாடுகள்
உம்பளச்சேரி மாடுகள்

''நாங்க என்ன கறிக்காகவா வாங்குறோம். விவசாயத்துக்கு பயன்படுத்துற கன்றுக்குட்டிகளை எடை வச்சு விற்பனை செய்றது தவறானது’’ என ஆதங்கப்பட்டார்.

இந்திய அளவில் புகழ் பெற்ற நாட்டு மாடுகளில் உம்பளச்சேரி முதன்மை இடம் வகிக்கிறது. இதன் கழிவுகள் நிலத்தை வளப்படுத்துவதால், விவசாயிகள் மத்தியில் இதற்கு வரவேற்பு அதிகம். குறிப்பாக, இயற்கை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்கள், உம்பளச்சேரி மாடுகள் வளர்ப்பதைக் குறிக்கோளாகவே கொண்டுள்ளார்கள். இந்நிலையில்தான் உம்பளச்சேரி நாட்டு மாடுகளைப் பெருக்க, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கையில் அரசு கால்நடைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைகளுக்காக, முன் பதிவின் அடிப்படையில் இங்கு கன்றுக்குட்டிகள் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபகாலமாக, எடை வைத்து விலை நிர்ணயம் செய்வதால், இவற்றை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.

உம்பளச்சேரி கன்றுக்குட்டி - எடை இயந்திரத்தில்
உம்பளச்சேரி கன்றுக்குட்டி - எடை இயந்திரத்தில்

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய, இளம் விவசாயி பாலாஜி, ``திருவாரூர் மாவட்டம் வடசேரிதான் எனக்கு சொந்த ஊர். உம்பளச்சேரி காளைக் கன்றுகளை வாங்கி, அதை வளர்த்து உழவுக்குப் பயன்படுத்தலாம்னு மூணு வருஷத்துக்கு முன்னாடி, கொருக்கை பண்ணையில பதிவு செஞ்சேன். என்னை மாதிரி எங்க ஊர்ல 16 விவசாயிகள், கன்றுக்குட்டிகள் கேட்டு பதிவு செஞ்சிருந்தோம். இப்பதான் எங்களுக்கு அழைப்பு வந்துச்சு. ரொம்ப சந்தோஷமா, கொருக்கை பண்ணைக்குக் கிளம்பிப் போனோம். எடை வெச்சுதான் கொடுப்போம்னு அங்க உள்ள அலுவலர்கள் சொல்லிட்டாங்க. கிலோவுக்கு 250 ரூபாய்னு விலை நிர்ணயம் செஞ்சாங்க. ஒரு கன்றுக்குட்டி 50 கிலோவுக்கு மேல இருந்துச்சு. அதோட விலை 12,500 ரூபாய்க்கு மேல போகுது. ஒரு ஜோடி காளைக் கன்று வாங்கணும்னா 25,000 ரூபாய்க்கு மேல விலை கொடுத்தாகணும்.

இவையெல்லாம் ஒரு வயசுக்கு உட்பட்ட கன்றுக்குட்டிகள். இதை நாங்க வாங்கிக்கிட்டு போயி, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வளர்த்தால்தான் உழவுக்கும் வண்டிக்கும் பயன்படுத்த முடியும். அதுவரைக்கும் இதுல எந்த வருமானமும் கிடைக்காது. நான் மட்டுமல்ல, எந்த ஒரு விவசாயியும் இவ்வளவு விலை கொடுத்தெல்லாம் வாங்க முடியாது. எங்க ஊர் விவசாயிகள் எல்லாருமே வெறுத்துப் போய், கன்றுக்குட்டிகள் எதுவும் வாங்காமல் சும்மாதான் திரும்பி வந்தோம். நாங்க என்ன கறிக்காகவா வாங்குறோம். விவசாயத்துக்குப் பயன்படுத்துற கன்றுக்குட்டிகளை எடை வெச்சு விற்பனை செய்றது தவறானது’’ என ஆதங்கப்பட்டார்.

கொருக்கை பண்ணையில் விவசாயிகள்
கொருக்கை பண்ணையில் விவசாயிகள்

வெளிச்சந்தையில் உம்பளச்சேரி கன்றுக்குட்டி 5,000 - 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அரசுப் பண்ணையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது எந்த வகையில் நியாயம்? எனவும் இவர் கேள்வி எழுப்புகிறார். கொருக்கை பண்ணையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாடுகளின் வயது அடிப்படையிலேயே விலை நிர்ணயம் செய்யப் பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. அப்போது, ஆண்டுக்கு 100 - 150 கன்றுக்குட்டிகள் வரை விற்பனையானதாகவும், எடை வைத்து விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை வந்த பிறகு, ஆண்டுக்கு 10-க்கும் குறைவான கன்றுக்குட்டிகள் மட்டுமே இங்கு விற்பனையாவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தார்கள். இது குறித்து தமிழக அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு