Published:Updated:

`கதிர் வர்ற நேரம், பயிர் மழையில மூழ்கிடுச்சே!' - வேதனையில் திருவாரூர் விவசாயிகள்

மழைநீரில் நெற்பயிர்கள்
மழைநீரில் நெற்பயிர்கள்

மூணடி உயரத்துக்குத் தண்ணீர் நிக்குது. இது கதிர் வர்ற நேரம். இரண்டு நாள்களா பேஞ்ச மழையில, பயிர் முழுமையாக மூழ்கிடுச்சி. இதே நிலைமை நீடிச்சிதுனா, வேர் அழுக ஆரம்பிச்சிடும்.

புரெவி புயல் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருவதால், திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், கோயில்வெண்ணி, நன்னிலம், முத்துப்பேட்டை, மன்னார்குடி மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் சம்பா, தாளடி பட்டத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த ஏராளமான நெற்பயிர்கள் சேதமடையக்கூடிய ஆபத்து இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

`கதிர் வர்ற நேரம், பயிர் மழையில மூழ்கிடுச்சே!' - வேதனையில் திருவாரூர் விவசாயிகள்

இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களின் நெல் சாகுபடிக்காக, உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி பட்ட நெல் சாகுபடி செய்யப்பட்டது. விதைப்பு மற்றும் நடவுப்பணிகளுக்குப் போதிய அளவு தண்ணீர் கிடைத்ததோடு மட்டுமல்லாமல், பயிர்களைத் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கவும் தண்ணீர் கிடைத்து வந்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள்.

வறட்சி ஏற்படாமல், இந்த ஆண்டு சம்பா, தாளடி நெல் சாகுபடியில் வெற்றிகரமாக மகசூல் எடுத்துவிடலாம் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார்கள். இந்நிலையில்தான் புரெவி புயல் காரணமாக, கடந்த இரண்டு நாள்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை விவசாயிகளை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

விவசாயி மாயவநாதன்
விவசாயி மாயவநாதன்

நீடாமங்கலம் ஒன்றியம் செருமங்கலம், அப்பரசன்பேட்டை, காஞ்சிக்குடிகாடு, தாராக்கோட்டை, காரிக்கோட்டை, பேரையூர், கட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் மூழ்கியுள்ளது.

நம்மிடம் மிகுந்த மன உளைச்சலோடு பேசிய செருமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மாயவநாதன், ``இதோ பாருங்க. இது 90 நாள் வயசுள்ள பயிர். இது ஓரளவுக்கு மேடான பகுதி. இங்கயே மூணடி உயரத்துக்கு தண்ணீர் நிக்குது. இது கதிர் வர்ற நேரம். இரண்டு நாள்களா பேஞ்ச மழையில, பயிர் முழுமையாக மூழ்கிடுச்சி. இதே நிலைமை நீடிச்சிதுனா, வேர் அழுக ஆரம்பிச்சிடும்.

முதலுக்கே மோசம் வந்துடுமோனு மனசு பதைபதைப்பா இருக்கு. நாற்று உற்பத்தி, நடவு, களையெடுப்பு, உரம் போட்டதுனு இதுவரைக்குமே ஏகப்பட்ட செலவு செஞ்சிருக்கோம். என்ன ஆகுமோ தெரியலை, பயமா இருக்கு. எங்க ஊர்ல மட்டுமே சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர்ல மூழ்கிக் கிடக்கு. காஞ்சிக்குடிக்காடு, அப்பரசன்பேட்டை, தாராக்கோட்டை, பேரையூர், கட்டக்குடி உள்ளிட்ட இன்னும் பல கிராமங்கள்லயும் இதே நிலைமைதான்.

புரெவி புயல்  நீரில் மூழ்கிய பயிர்
புரெவி புயல் நீரில் மூழ்கிய பயிர்

எங்க பகுதியில ஓடக்கூடிய வாய்க்காலை இந்த ஆண்டு முறையாகத் தூர் வாரி இருந்தால், இந்த அவல நிலை ஏற்பட்டிருக்காது. தூர் வாரினதா கணக்கு காட்டினாங்க. ஆனால், தூர் வாரவே இல்லை. வாய்க்காலை ஒழுங்கா தூர் வாரி இருந்தால், தண்ணீர் வடிஞ்சிருக்கும். இரண்டு நாள் மழைக்கே வயல்கள்ல தண்ணீர் தேங்கக்கூடிய அளவுக்கு வாய்க்கால்கள் அடைப்பட்டு கிடக்கு” என ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு