Published:Updated:

`முதல்வர் உத்தரவிட்டும்கூட சம்பா பயிர்க்கடன் கிடைக்கவில்லை!' - விவசாயிகள் ஆதங்கம்

சில அதிகாரிகள், விவசாயிகளின் குறைகளை காது கொடுத்து கேட்காமல், தூங்கிக் கொண்டிருந்ததும், செல்போனை பார்த்துக் கொண்டு இருந்ததும் விவசாயிகளை எரிச்சலடைய செய்தது.

திருவாரூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் சில அதிகாரிகள், விவசாயிகளின் குறைகளை காது கொடுத்து கேட்காமல், தூங்கிக் கொண்டிருந்ததும், செல்போனை பார்த்துக் கொண்டும் இருந்தது விவசாயிகளை எரிச்சலடைய செய்தது.

நெல்
நெல்

இக்கூட்டம் தொடங்கியவுடன், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் இக்கோரிக்கைக்காக, உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வாகனத்தை ஏற்றி விவசாயிகளை படுகொலை செய்த மத்திய அமைச்சரின் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி விவசாயிகள் முழக்கமிட்டார்கள். அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பேசினர்.

சண்முக சுந்தரம் என்ற விவசாயி பேசும்போது, ``தமிழக முதலமைச்சர் உத்தரவிட்ட பிறகும் கூட, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் கிடைக்கவில்லை. குறிப்பாக சம்பா பருவ நெல் சாகுபடி செலவுகளுக்கு பயிர் கடன் கிடைக்காததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். கஜா புயலின்போது பலர் உடைமைகளை இழந்த நிலையில், 2016-ல் பிரீமியம் செலுத்திய ரசீது இருந்தால் மட்டுமே பயிர்க்காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை தருவோம் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் சேதுராமன் பேசியபோது, ``நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்க வேண்டும். அரசு திட்ட ஒதுக்கீட்டின்படி விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும். அல்லது உரத்துக்கான பணத்தை வழங்க வேண்டும்’’ என்றார்.

விவசாயிகள்
விவசாயிகள்
`உத்தரப்பிரதேச விவசாயிகள் உயிரிழப்பு சம்பவம்' எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறதா யோகி அரசு?

விவசாயி தம்புசாமி, ``கடந்த ஆட்சியைப் போலவே, தற்போதைய ஆட்சியிலும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு சிப்பத்துக்கு 40 ரூபாய் வீதம் லஞ்சம் வாங்குகிறார்கள். நெல் ஈரப்பத பிரச்னையை சமாளிக்க வட்டத்துக்கு ஒரு நெல் உலர்த்தும் இயந்திரம் அமைத்துத் தர வேண்டும்’’ என்றார்.

விவசாயி பத்மநாபன் பேசும்போது, ``விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு காவல்துறையினர் சம்மன் வழங்கி வருகின்றனர்" என ஆதங்கப்பட்டார். ``நடமாடும் நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்த வேண்டும். நீடாமங்கலம் பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபான கடையை அகற்ற வேண்டும்’’ என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி பேசும்போது, ``அலிவலம் வாளவாய்க்கால் பகுதிகளில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தப்பளாம்புலியூர் கூட்டுறவு சங்கத்தில் 2018, 19-ம் ஆண்டில் ஏராளமான மோசடி நடைபெற்றுள்ளது. தற்போது நகைக்கடன் மோசடியும் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக, விசாரணை நடத்தி, தவறு இழைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். டிஏபி உரத்திற்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுவதால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். டிஏபி உரத்துக்கு மாற்று உரம் தயாரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Farmer (Representational Image)
Farmer (Representational Image)
மூடப்படும் புதுக்கோட்டை ஓ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறுகள்; மகிழ்ச்சியில் விவசாயிகள்!

பயரி கிருஷ்ணமணி பேசும்போது, ``ஆந்திராவிலிருந்து சிலர் மீன்களை வாங்கி வந்து, ரசாயனம் கலந்து ஒரு கிலோ 95 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்கின்றனர். இதனால், இப்பகுதிகளில் மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்படுவதோடு, ரசாயனம் தடவிய மீன்களை சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகிறது. இதை நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இக்கூட்டத்தில் பேசிய விவசாயிகளில் பெரும்பாலானோர், ``தற்போது குறுவை நெல் அறுவடையின் போது கண்டிப்பாக மழை பெய்யும். நெல் ஈரமாவதை தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. எனவே அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு ஈரப்பதம் இலக்கை 22 சதவீதத்திற்கு மேல் அனுமதிக்க வேண்டும்’’எனத் தெரிவித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு