Published:Updated:

ஒரே வருடத்தில் 11 இடங்களில் உடைப்பு... கான்கிரீட் வாய்க்காலால் கொந்தளிக்கும் விவசாயிகள்!

கான்கிரீட் வாய்க்காலில் உடைப்பு
கான்கிரீட் வாய்க்காலில் உடைப்பு

கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, இப்பதான் முதல் வருஷம் தண்ணீர் போகுது. அதுக்குள்ளார ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளேயே பக்கவாட்டு பகுதியில 11 இடங்கள்ல உடைப்பு ஏற்பட்டிருக்கு.

ஊழல் முறைகேடுகளால் விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவது, நாம் அனைவரும் ஏற்கெனவே அறிந்ததுதான். ஆனால், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் வடுவூர் புதுக்கோட்டை கிராமத்தில் நிகழ்ந்திருப்பது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீர்நிலைகளில் மேற்கொள்ளப்படும் தரமற்ற கட்டுமானப் பணிகளின் லட்சணம் அடுத்த சில ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வருவதுதான் வழக்கம். ஆனால், இப்பகுதியில் ஓடக்கூடிய வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்ட ஒரே வருடத்தில், ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ளாகவே 11 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை என விரக்தியுடன் பேசுகிறார்கள் இப்பகுதி விவசாயிகள்.

கான்கிரீட் வாய்க்காலில் உடைப்பு
கான்கிரீட் வாய்க்காலில் உடைப்பு

இதுகுறித்து நம்மிடம் மிகுந்த ஆதங்கத்தோடு பேசிய மலர்மன்னன், ``இது வடவாறுல இருந்து, வடுவூர் புதுக்கோட்டையில பிரியக்கூடிய ஒண்ணாம் நம்பர் வாய்க்கால். இந்த வாய்க்காலை நம்பி, பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடுவூர் புதுக்கோட்டை மட்டுமல்லாமல், உத்தங்குடி, எடமேலையூர், பெருமங்கலம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், உள்ளிட்ட இன்னும் பல கிராமங்கள் வழியாக, சுமார் 14 கிலோ மீட்டருக்கு இந்த வாய்க்கால் பாயுது. இந்த வாய்க்காலோட இரண்டு பக்கமும் ஏராளமான தேக்கு மரங்கள் செழிப்பா வளர்ந்திருந்துச்சு.

வாய்க்காலோட பக்கவாட்டு பகுதியில கருங்கல் அமைக்கப்பட்டிருந்துச்சு. இதுதான் காலம் காலமான நடைமுறை. கான்கிரீட் தளம் அமைக்குறோம்னு சொல்லி, வாய்க்காலோட இரண்டு பக்கமும் இருந்த தேக்கு மரங்களையும் கருங்கல்லையும் அப்புறப்படுத்தி, பல கோடி ரூபாய் செலவுல, வாய்க்காலை சிமென்ட் தொட்டி மாதிரி மாத்திட்டாங்க. போதுமான அளவுக்கு படித்துறையும் அமைக்கலை. இதனால் பலவிதமான பின்னடைவுகள். கான்கிரீட் தளமாக மாத்துறதுக்கு முன்னாடி, வாய்க்கால்ல தண்ணீர் போறப்ப, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துகிட்டு இருந்துச்சு.

ஒரே வருடத்தில் 11 இடங்களில் உடைப்பு... கான்கிரீட் வாய்க்காலால் கொந்தளிக்கும் விவசாயிகள்!

எல்லா பகுதி விவசாயிகளும் தங்களோட மாடுகளை வாய்க்கால்ல இறக்கி குளிப்பாட்டி, வெளியேத்துறதுக்கு வசதியா படித்துறையும் முறையாக இருந்துச்சு. கான்கிரீட் தளம் அமைக்குறப்ப இந்தப் பகுதி விவசாயிகள் முக்கியமான சில யோசனைகள் சொன்னாங்க. வாய்க்கால்ல தண்ணீர் போகும்போது, நிலத்தடியில சேகரமாகுறதுக்கு வசதியாக, வாய்க்காலின் தரைப்பகுதியில மட்டும் ஒரு சில இடங்கள்ல மட்டுமாவது, சிறு துளைகள் அமைக்கச் சொன்னோம். ஆனால், அதிகாரிகள் எதையுமே கண்டுக்கல. இந்த ஆண்டு வாய்க்கால்ல தண்ணீர் போயும்கூட, இந்தப் பகுதிகள்ல நிலத்தடி நீர் மட்டம் உயரலை. இதையெல்லாம்கூட விவசாயிகள் பொறுத்துக்கிட்டாங்க.

ஆனால், கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, இப்பதான் முதல் வருஷம் தண்ணீர் போகுது. அதுக்குள்ளார ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள்ளேயே பக்கவாட்டு பகுதியில 11 இடங்கள்ல உடைப்பு ஏற்பட்டிருக்கு. மீதி இன்னும் 13 கிலோ மீட்டர் தூரத்துல இன்னும் எவ்வளவு உடைப்பு ஏற்பட்டிருக்கோ தெரியலை. கான்கிரீட் கட்டுமான பணி தரமில்லாததாலதான், இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கு. முதல் கட்டமாக கான்கிரீட்ல உடைப்பு ஏற்பட்டிருக்கு.

கான்கிரீட் வாய்க்கால்
கான்கிரீட் வாய்க்கால்

தண்ணீர் இன்னும் அதிகமாகப் போனால், வாய்க்கால்ல உடைப்பு ஏற்பட்டு, விளைநிலங்கள் எல்லாம் தண்ணீர்ல மூழ்கிடும். கான்கிரீட் அமைக்காமல் சும்மா விட்டிருந்தாலே இந்த வாய்க்கால் நல்லா உறுதியா பாதுகாப்பாக இருந்திருக்கும். தேக்கு மரங்களும் கருங்கற்களும் இருந்ததுனால, கரைகள் நல்லா பலமாதான் இருந்துச்சு. கான்கிரீட் தளம் அமைக்கணும்னு முடிவு பண்ணின அரசு அதிகாரிகள், இதைத் தரமா செய்யணும்னு மனசு வைக்கலை. இதுதான் விவசாயிகளோட துரதிர்ஷ்டம்” என ஆதங்கப்பட்டார்.

அடுத்த கட்டுரைக்கு