Published:Updated:

திருவாரூரின் அடையாளமாக விளங்கிய அரிசி ஆலை; 5 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி!

திருவாரூர் நவீன அரிசி ஆலை
திருவாரூர் நவீன அரிசி ஆலை

``தமிழ்நாட்டில் இயற்கை எரி வாயு மூலம் இயக்கப்படும் ஒரே நவீன அரிசி ஆலை என்ற பெருமையைக் கொண்ட ஆலை இது. மாதத்துக்கு 4,000 மெட்ரிக் டன் அரவைத் திறன் கொண்டது. மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை மூடப்பட்டது."

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூரில் கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த நவீன அரிசி ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது இப்பகுதி விவசாயிகளையும் பொதுமக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. திருவாரூர் நகரின் மையப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த பிரமாண்ட அரிசி ஆலை, திருவாரூரின் பெருமைமிகு அடையாளமாகவே திகழ்ந்து வந்தது.

தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாடின் கீழ் இயங்கி வந்த இந்த ஆலை, ஐந்தாண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல், தனியார் அரிசி ஆலைக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு வந்ததால் அரசுக்கு வீண் செலவு ஏற்பட்டது. பல பெருமைகளைக் கொண்ட இந்த ஆலையைத் தொடங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் குரல் கொடுத்து வந்த நிலையில்தான், இங்கு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

திருவாரூர் நவீன அரிசி ஆலை
திருவாரூர் நவீன அரிசி ஆலை
`நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடையாது!' - தமிழக அரசின் அறிவிப்பால் விவசாயிகள் அதிர்ச்சி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்குச் சொந்தமாகத் தமிழகம் முழுவதும் 21 நவீன அரிசி ஆலைகளும், இக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான சுமார் 372 நவீன அரிசி ஆலைகளும் தமிழகம் முழுவதும் செயல்படுகிறது. இவற்றில் திருவாரூர் நவீன அரிசி ஆலைக்கு சில தனிச் சிறப்புகள் உண்டு. 1965-ம் ஆண்டு இந்த ஆலை தொடங்கப்பட்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வந்தது. இந்த நவீன அரிசி ஆலையின் உள்ளே ஒரு காலகட்டத்தில் உணவுத் துறையின் ஆராய்ச்சி நிலையம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த ஆராய்ச்சி நிலையத்தில்தான் குழந்தைகளுக்கான மாற்று உணவு தயாரிக்கப்பட்டதாகத் திருவாரூர் மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த நவீன அரிசி ஆலை திருவாரூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அருகில் இருப்பதால் அரவையின்போது வெளிவரும் தூசு, சாம்பல் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி சுமார் 20 ஆண்டுகளுக்கும் முன்னர் போராட்டம் நடத்தப்பட்டதால், அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் முயற்சியால் 2000-ம் ஆண்டில் காஸ் (இயற்கை எரி வாயு) மூலம் இந்த ஆலையை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு, தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கி வந்தது. இந்நிலையில்தான் ஐந்தாண்டுகளுக்கு இந்த ஆலை மூடப்பட்டது. திருவாரூரின் பெருமைமிகு அடையாளமான இந்த ஆலையைத் திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில்தான் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறது.

திருவாரூர் நவீன அரிசி ஆலை
திருவாரூர் நவீன அரிசி ஆலை
நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி; சாமர்த்தியமாக சிக்கவைத்த விவசாயிகள்!

இதுகுறித்து, நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் மாசிலாமணி, ``தமிழ்நாட்டில் காஸ் (இயற்கை எரி வாயு) மூலம் இயக்கப்படும் ஒரே நவீன அரிசி ஆலை என்ற பெருமையைக் கொண்ட ஆலை இது. மாதத்துக்கு 4,000 மெட்ரிக் டன் அரவைத் திறன் கொண்டது. மறு சீரமைப்பு என்ற பெயரில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை மூடப்பட்டது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் நெல்லை, தனியார் ஆலைகளுக்கு அரவைக்கு அனுப்பி, அதன் தனிப்பட்ட முறையில் சுயலாபம் பார்த்து வந்த அரசு அதிகாரிகள், இந்த ஆலையைத் திறக்க ஆர்வம் காட்டவில்லை. இன்னும் சொல்லப்போனால், முடக்கியே வைத்திருந்தார்கள். தி.மு.க அரசு பொறுப்பேற்றதும், இதுகுறித்து வலியுறுத்தினோம், இந்நிலையில்தான் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு வருவது மகிழ்ச்சியான விஷயம்’’ எனத் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு