Published:Updated:

திருவாரூர்: `தெருவிளக்கு அமைக்க பனை மரங்களை வெட்டுவதா?' - கொதிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

பனை விதைப்பு செய்வதை விடவும், ஏற்கெனவே உள்ள பனை மரங்களை பாதுகாக்குறதுதான் ரொம்ப முக்கியமான கடமை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சுற்றுச்சூழலுக்கு பல வகைகளிலும் பெருந்துணையாக இருக்கக்கூடியது பனை மரம். தமிழ்நாட்டில் இதுகுறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. பனை விதைகளைச் சேகரித்து, விதைப்பு செய்யும் உயரிய பணிகளில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள். பனையை வளர்த்தெடுக்க பலரும் கடும் உழைப்பு செலுத்தி வரும் அதேநேரம், இதன் மகத்துவத்தை உணராதவர்கள், நன்கு வளர்ந்த பனை மரங்களை வெட்டி வீழ்த்தும் அவலமும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகிலுள்ள நகர் ஊராட்சியில் பனை மரங்கள் அழிக்கப்பட்ட சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பனை மரங்கள்
பனை மரங்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய நகர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், ``எங்க ஊருக்குள்ளார நுழையும்போது, நிறைய பனை மரங்கள் வரிசையா அணிவகுத்து வரவேற்கும். எல்லாமே நாப்பது ஐம்பது வருசத்து மரங்கள். நல்லா உயரமா வளர்ந்து, நொங்கும் காய்ச்சிக்கிட்டு இருந்துச்சு. மின் விளக்குகள் அமைக்குறதுக்காக, ஊராட்சி நிர்வாகமே அந்த மரங்களை எல்லாம் வெட்டினதுதான் ரொம்ப வேதனையான விஷயம். நாங்க பதறிப்போயிட்டோம்.

மின் விளக்கு அவசியம்தான். இது எங்க ஊர் மக்களோட ரொம்ப நாள் கோரிக்கை. ஆனால், அந்த பனை மரங்களை வெட்டாமலே மின் விளக்கு அமைச்சிருக்க முடியும். சிலரோட சுயநலத்தால், செங்கல் காலவாய்க்காகத்தான் பனை மரங்கள் வெட்டியிருக் காங்கனு ஒரு பேச்சு இருக்கு’’ எனத் தெரிவித்தார்கள். நகர் ஊராட்சித் தலைவர் மோகனா இளங்கோவிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``எங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. மின் விளக்குகள் அமைக்குறதுக்காகத்தான் வெட்டினோம். ஆனால், நாங்க செஞ்சது தவறுங்கறதை மனதார உணர்ந்துட்டோம். மின்சார வாரிய அதிகாரிகள், அவசரப்படுத்தினதால, இதுமாதிரி ஆயிடுச்சு. செங்கல் சூளைக்காக வெட்டப்பட்டதா சொல்றது உண்மையல்ல. வெட்டின மரங்களை குவிச்சி வச்சிருக்கோம்’’ எனத் தெரிவித்தார்.

ராஜவேலு
ராஜவேலு

தமிழக அரசின் மரமாக, பனை மரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதைப் பாதுக்காக்க எந்தவொரு சட்டபூர்வமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமை என்கிறார் கிரின்நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``பனை விதைப்பு செய்வதைவிடவும், ஏற்கெனவே உள்ள பனை மரங்களை பாதுகாக்குறதுதான் ரொம்ப முக்கியமான கடமை. ஆயிரம் விதைகள் நட்டால், அதுல இருந்து நூறு விதைகள் பொழச்சு வர்றதே பெரிய விஷயமா இருக்கு. அதுவும்கூட பெரிய மரங்களா வளர்ந்து வர, 20 - 30 வருஷங்களுக்கு மேல ஆகுது. சுற்றுச்சூழலுக்கு பனை மரங்கள் ஆற்றக்கூடிய சேவை மகத்தானது. எவ்வளவுதான் வறட்சி ஏற்பட்டாலும் பனை மரங்கள் பட்டுப்போகாது. இதோட வேர்கள் எப்பவும் நிலத்தடி நீரை சேமிச்சி வச்சிருக்கும். இதனால்தான் பனை மரங்கள் உள்ள பகுதிகள்ல நிலத்தடிநீர் நல்லா இருக்கும். பனை மரங்கள், மண் அரிப்பையும் தடுக்கக்கூடியது. புயல் அடிக்கக்கூடிய நேரங்கள்ல காற்று தடுப்பு அரணாகவும் பயன்படுது. ஆனால் இதன் அருமையை உணராதவர்கள், தங்களோட சுயநலத்தால், செங்கல் சூளைக்காக, நிறைய பனை மரங்களை அழிச்சிட்டாங்க.

பனை மரம்
பனை மரம்
உ.பாண்டி

30 வருஷங்களுக்கு முன்னாடி தமிழ்நாட்ல 5 கோடி பனை மரங்கள் இருந்ததாகச் சொல்லப்படுது. ஆனால், இப்ப ஒரு கோடி பனை மரங்கள்தான் மிச்சமிருக்கு. அதுவுலயும்கூட பெரும்பாலான பனை மரங்கள் தென் மாவட்டங்கள்லதான் இருக்கு. டெல்டா மாவட்டங்கள்ல பனை மரங்களோட எண்ணிக்கை ரொம்ப குறைவு. இதையும் அழிக்குறது வேதனையான விஷயம். பனை மரங்களைப் பாதுகாக்க இலங்கை அரசு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதுபோல். தமிழ்நாட்டிலும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதைச் செய்தால் சுற்றுச்சூழலை மட்டுமல்ல, பனை சார்ந்த பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு