Published:Updated:

`எங்க 22 கிராமங்களுக்கு மட்டும் ஏன் இழப்பீடு இல்ல?' - ஆதங்கத்தில் விவசாயிகள்

வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தங்கள் பணியை நேர்மையாகச் செய்யாததால் தங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என திருவாரூர் விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் இன்ஷூரன்ஸ் இழப்பீடு கிடைக்காததால், இப்பகுதி விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். கடந்த சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட தங்களது நெற்பயிர்கள், புயல் மற்றும் பருவம் தவறிய கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பெருமளவில் மகசூல் இழப்பு ஏற்பட்டதாகவும், ஆனால், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தங்கள் பணியை நேர்மையாகச் செய்யாததால் தங்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை எனவும் இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். ``தங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்கவில்லையென்றால், அடுத்தகட்டப் போராட்டம் கடுமையாக இருக்கும். சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்குவோம்" எனவும் எச்சரிக்கிறார்கள்.

விவசாயிகள் சாலை மறியல்
விவசாயிகள் சாலை மறியல்
கனமழையால் அழுகும் குறுவை நெற்கதிர்கள்; காப்பீடும் இல்லாததால் தவிப்பில் விவசாயிகள்!

2020-21-ம் ஆண்டுக்கான, சம்பா பருவ பயிர் காப்பீட்டு இழப்பிட்டுத் தொகை வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 18-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்கி இதைத் தொடங்கி வைத்தார். 6 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 1,597 கோடி ரூபாய் வழங்கப்பட இருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்தது. எந்தெந்தப் பகுதிகளுக்கு எவ்வளவு இழப்பீடு என்ற தகவல்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 22 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை என இப்பகுதி விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். குறிப்பாக, இம்மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஐந்து வருவாய் கிராமங்களுக்கு இழப்பீடு கிடைக்காததால், இப்பகுதி விவசாயிகள் இன்று சாலைமறியலில் ஈடுபட்டார்கள். மார்த்தாண்டம்-நாச்சிக்குளம் சாலையில் அமர்ந்து ஏராளமான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக இப்போராட்டம் நீடித்தது.

முருகையன்
முருகையன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் முருகையன், ``கடந்த சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், நிவர், புரெவி புயலாலும் பருவம் தவறி பெய்த தொடர் கனமழையாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முழுக்கவே பரவலாகப் பாதிப்புகள் அதிகம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், 22 வருவாய் கிராமங்களுக்கு மட்டும் இழப்பீடு கிடைக்காமல் போனது, இங்குள்ள விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கு. முத்துப்பேட்டை ஒன்றியத்துல உள்ள உதயமார்த்தாண்டபுரம், தில்லை விளாகம், இடும்பாவனம், மேல பெருமலை, தெற்கு காடு உள்ளிட்ட வருவாய் கிராமங்களைச் சேர்ந்த ஐயாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கல. இதில் என்ன பெரிய வேதனையான விஷயம்னா, இங்கவுள்ள விவசாயிகளுக்கு கடந்த சம்பாவுல ஏக்கருக்கு நாலஞ்சு மூட்டை நெல் கூட மகசூல் தேரலை. அறுவடை செலவைக் கூட ஈடுகட்ட முடியலை.

விவசாயிகள் சாலை மறியல்
விவசாயிகள் சாலை மறியல்
`பயிர் இழப்பீடு விவரங்களை இணையத்தில் வெளியிடவேண்டும்!' - விவசாய ஆர்வலரின் கோரிக்கை

கணக்கெடுப்புல ஈடுபட்ட வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளோட அலட்சியத்துனாலதான், இந்தப் பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் போயிடுச்சு. இது விவசாயிகளோட வயிற்றில் அடிக்கும் செயல். இதுக்கு தமிழக அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினதால, இப்போதைக்கு சாலை மறியல் போராட்டத்தைக் கைவிடுறோம். 25-ம் தேதி வரைக்கும் கால அவகாசம் கொடுத்திருக்கோம். அதுக்கு பிறகும் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கலைனா, முத்துப்பேட்டை ஒன்றியம் முழுக்க, பரவலாகப் பல இடங்கள்ல சாலைமறியல் போராட்டம் நடத்த இருக்கோம்’’ என எச்சரித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு