Published:Updated:

`30 முயல்கள், குறைவான இடம், லாபம் ₹20,000 ரூபாய்!' - முயல் வளர்ப்பில் அசத்தும் சென்னை பெண்

மொட்டைமாடியில் வெறும் 100 சதுர அடி பரப்பளவிலேயே முயல் மற்றும் லவ் பேர்ட்ஸ் வளர்த்துவரும் சண்முகப்பிரியா, நிலையான விற்பனை வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார். இவரைச் சந்தித்து முயல் வளர்ப்பு அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

அசைவப் பிரியர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்லும் இன்றைய சூழலில், ஆரோக்கியமான முறையில் கால்நடைகளை வளர்ப்பவர்களுக்கு, சிறப்பான விற்பனை வாய்ப்பும் எளிதில் கைகூடுகின்றன. அந்த வரிசையில் இடம்பிடித்திருக்கும் சென்னையைச் சேர்ந்த சண்முகப்பிரியா, முயல் வளர்ப்பில் அசத்திவரும் பட்டதாரி. கோழி, ஆடு, வாத்து போன்ற பிரதான கால்நடைகளுடன் ஒப்பிடுகையில், முயல் வளர்ப்புக்குக் குறைந்த இடவசதியும் பராமரிப்புமே போதுமானதுதான். அதனால்தான், நகரப் பகுதியினருக்கும் நம்பிக்கையூட்டும் சுயதொழிலாக முயல் வளர்ப்பு திகழ்கிறது.

சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா

அந்த வகையில், மொட்டைமாடியில் வெறும் 100 சதுர அடி பரப்பளவிலேயே முயல் மற்றும் லவ் பேர்ட்ஸ் வளர்த்துவரும் சண்முகப்பிரியா, நிலையான விற்பனை வாய்ப்பையும் உறுதி செய்துள்ளார். பரபரப்புக்குப் பஞ்சமில்லாத கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அருகில், குறுகலான சாலையில் அமைந்திருக்கிறது இவரின் முயல் பண்ணை. சண்முகப்பிரியாவைச் சந்தித்து, முயல் வளர்ப்பு அனுபவங்கள் குறித்துப் பேசினோம்.

``எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி. கல்யாணமானதும் சென்னையில குடியேறிட்டேன். பி.ஏ படிச்சிருக்குற நான், பிரைவேட் ஸ்கூல் டீச்சரா சில வருஷங்கள் வேலை செஞ்சேன். ஆனா, சரியான ஊதியம் கிடைக்காதது, அதிக நேர வேலைனு சில சிக்கல்கள் ஏற்படவே, அந்த வேலையிலிருந்து விலகிட்டேன். பிள்ளைகளைக் கவனிச்சுகிட்டு, வீட்டிலிருந்தபடியே ஏதாச்சும் வேலை செய்யலாம்ங்கிற தேடல்லதான் முயல் வளர்ப்பு பத்தித் தெரிஞ்சுகிட்டேன். யூடியூப்ல இதுக்கான முதல்கட்ட விவரங்களைத் தெரிஞ்சுகிட்டு, மாதவரத்திலிருக்குற கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை அணுகினேன். அங்க முயல் வளர்ப்புக்கான ஒரு மாத கோர்ஸ்ல கலந்துகிட்டேன்." - கையிலிருந்த முயலைத் தடவிக்கொடுத்தவாறே முன்கதையைப் பகிர்ந்தவர், ஆறு முயல்களுடன் சோதனை முயற்சியாக முயல் வளர்ப்பிலும் ஈடுபட்டிருக்கிறார்.

சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா

``கால்நடை வளர்ப்புல பெரிசா முன்அனுபவம் இல்லாததால, `இது சரிப்பட்டு வருமா... வராதா?'ன்னு எனக்குள் ரொம்பவே தயக்கம் இருந்துச்சு. முயல் வளர்ப்புல அனுபவம் பெற்ற சிலர்கிட்ட பேசினேன். முதலீட்டுக்குப் பெரிசா செலவு செய்யல. சின்ன கூண்டுல நாலு பெண் மற்றும் ரெண்டு ஆண் முயல்களை வீட்டுக்குள்ளேயே வெச்சு வளர்த்தேன். முயல் வளர்ப்புக்கான அனுபவங்களை ஆறு மாதங்கள்ல ஓரளவுக்குக் கத்துகிட்டேன். இதையே சுயதொழிலா செய்யலாம்னு நம்பிக்கை கிடைச்சது." - ஒவ்வொரு படியையும் நிதானமாக எடுத்து வைத்திருப்பவர், பத்தாயிரம் ரூபாய் செலவில், வீட்டு மொட்டை மாடியில் எளிமையான முறையில் ஓலைக்கொட்டகை அமைத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``மூணு வருஷங்களுக்கு முன்புதான் இந்தக் கொட்டகையை அமைச்சேன். இந்த 10*10 அளவுள்ள கொட்டகையை அமைக்கவே பத்தாயிரம் ரூபாய் செலவாச்சு. என்கிட்ட இருந்த ஆறு முயல்களுடன், கூடுதலா நாலு முயல்கள் வாங்கினேன். தொடக்கத்துல, கூண்டுகளைத் தரையில வெச்சுத்தான் முயல்களை வளர்த்தேன். விற்பனை வாய்ப்புகள் மெதுவா அதிகரிக்கவே, கூடுதலா 20 முயல்கள் வளர்க்க ஆரம்பிச்சேன். இடவசதி குறைவா இருக்குறதால, குட்டிகளை உடனுக்குடன் விற்பனை செஞ்சுடுவேன். 25 பெண் முயல்களுடன், அஞ்சு ஆண் முயல்களை மட்டுமே எப்போதும் இருக்கும்படி பார்த்துக்குறேன்.

சண்முகப்பிரியா
சண்முகப்பிரியா

9 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட கூண்டுல, தலா ஒன்றரை அடி நீளத்துல தடுப்பு அமைச்சிருக்கேன். இந்த வகையில ஒரு கூண்டுல ஆறு தடுப்புகள் இருக்குது. இதே அளவுலேயே, அடுக்குமுறையில தலா மூணு கூண்டுகள் இருக்கு. இந்த மூணு கூண்டுல மட்டும் மொத்தமா 18 அறைகள் இருக்கு. இதுக்குப் பக்கத்துலயே, 3 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட தலா மூணு கூண்டுகள் வெச்சிருக்கேன். அதுல மொத்தமா ஆறு அறைகள் இருக்குது. ஆக மொத்தம் 24 அறைகள்ல 30 முயல்களை வளர்க்கிறேன்.

அஞ்சு அறைகள்ல தலா ஓர் ஆண் முயல் இருக்கு. மீதமிருக்குற அறைகள்ல சூழலுக்கு ஏற்ப ஓரிரு பெண் முயலை வளர்க்கிறேன். ஒரு கூண்டுக்கும் இன்னொரு கூண்டுக்கும் இடையில ஒன்றரை அடி இடைவெளி விட்டிருக்கேன். முயல்களின் எச்சத்தைத் தனியா சேகரிச்சு வெளியேத்திடணும். ஒவ்வோர் அறையிலயும் தனித்தனி தண்ணீர் டியூப் இருக்கும். தேவைக்கு ஏற்ப முயல்கள் தண்ணீர் குடிச்சுக்கும்" என்று பண்ணையின் அமைப்புமுறை குறித்து விளக்கியவர், விற்பனைக்கான முயல் வளர்ப்புமுறை பற்றி பேசினார்.

முயல் வளர்ப்பு
முயல் வளர்ப்பு
Vikatan

``பெண் முயல்கள் ஒவ்வொரு பிரசவத்துலயும் 6 - 10 குட்டிகள் போடும். சராசரியா அஞ்சு குட்டிகள் பிறந்தா, எல்லாக் குட்டிக்கும் தாய்ப்பால் சரியா கிடைச்சு, அவை ஆரோக்கியமா வளரும். பிறந்த குட்டிகளை 30 - 35 நாள்கள்வரை தாய்கிட்ட பால் குடிக்க ஏதுவா ஒண்ணா இருக்கச் செய்யணும். அதுக்கப்புறமா, குட்டிகளை ஓரிரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தி வெச்சுட்டு, பிறகு விற்பனை செய்யலாம். பிரசவம் முடிஞ்ச ஒரு மாசத்துக்குப் பிறகு, பெண் முயலை ஆண் முயலுடன் இனச்சேர்க்கைக்கு விடலாம். பெண் முயல்களோட கர்ப்ப காலம் 30 நாள்கள் மட்டும்தான். ஒரு பெண் முயல் வருஷத்துக்கு 4 - 5 முறை குட்டிகள் போடும். 10 - 12 வருஷங்கள்வரை முயல்கள் உயிர்வாழும். ஆனா, அஞ்சு வருஷப் பருவத்துல இருக்கும் ஆண் மற்றும் பெண் முயல்களைக் கழிச்சு விட்டுடுறது நல்லது.

வாழ்நாள்ல 80 சதவிகித நேரத்தைத் தன்னைச் சுத்தப்படுத்திக்கவே முயல்கள் முனைப்பு காட்டும். அதனால, அவற்றைக் குளிப்பாட்ட வேண்டிய அவசியமில்ல. கூண்டுக்குள்ளேயே இருக்குறதால, பூனை, நாய் மாதிரியான பிராணிகளோட தொந்தரவும் அதுக்கு ஏற்படாது. பண்ணைக்கு உள்ளே கழிவு தேங்காம பார்த்துக்கிட்டாலே, நோய் பாதிப்பு பெரிசா வராது. முயல் எவ்ளோ குளிர்னாகூட தாங்கிக்கும். ஆனா, வெயில் காலத்து அவை ரொம்பவே சிரமப்படும். அதனால, கோடைக்காலத்துல கொட்டகை மேலயும் தரையிலயும் அவ்வப்போது தண்ணீர் தெளிச்சு விடணும். விற்பனைக்காக வளர்க்குறப்போ, இனச்சேர்க்கை நேரம் தவிர, மற்ற பெரும்பாலான நேரத்துலயும் ஆண் மற்றும் பெண் முயல்களைத் தனித்தனியே வளர்க்குறதுதான் நல்லது" என்று பயனுள்ள ஆலோசனைகளைக் கூறுபவர், வாரம்தோறும் விற்பனை செய்வதற்கு ஏற்ப, சுழற்சி முறையில் முயல்களைக் கருத்தரிக்க வைக்கிறார்.

குட்டி முயல்கள்
குட்டி முயல்கள்
கோழி, ஆடு, மாடு, முயல்... வளமான வருமானம் தரும் கால்நடை வளர்ப்பு! - ஒரு முழுமையான வழிகாட்டி

கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து தினம்தோறும் இலை தழைகளைச் சேகரித்து வந்து முயல்களுக்குத் தீவனமாகக் கொடுக்கிறார். தவிர, வளர்ந்த முயல்களுக்குத் தினமும் தலா 120 கிராம் குச்சித்தீவனத்தையும் உணவாக அளிக்கிறார். அன்றாடம் காலையிலும் மாலையிலும் தலா ஒரு மணி நேரம் மட்டுமே முயல்களைப் பராமரிக்க நேரம் செலவிடுகிறார். முயல் வளர்ப்பு தவிர, பல வகையான லவ் பேர்ட்ஸ் பறவைகளையும் வளர்க்கிறார். எளிமையான முறையில் முயல் வளர்ப்பை மேற்கொள்ளும் சண்முகப்பிரியா, இதன் மூலம் ஈட்டும் வருமானம் சற்றே ஆச்சர்யத்தைக் கூட்டுகிறது.

``புதுசா குட்டிகள் கிடைக்கப்போகுற தகவலை, ஒவ்வொருமுறையும் வாட்ஸ்அப் குரூப்கள்ல முன்கூட்டியே தெரியப்படுத்திடுவேன். அப்போதே ஆர்டர்ஸ் வர ஆரம்பிச்சுடும். குட்டிகள் பிறந்த பிறகு வாடிக்கையாளர்களுக்கு முறையா தகவல் சொல்லுவேன். அவை ஒரு மாசப் பருவத்துக்கு வந்ததுமே வீடு தேடிவந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. அதனால, விற்பனைக்கு இதுவரை எனக்குச் சிரமம் ஏற்பட்டதில்ல. 300 முதல் 1,000 ரூபாய் வரை ரகம் மற்றும் நிறத்துக்கு ஏற்ப முயல்களோட விலை மாறுபடும். மாசத்துக்குச் சராசரியா 50 முயல்களை விற்பனை செய்றது மூலமா 20,000 ரூபாய்வரை லாபம் ஈட்டுறேன். தவிர, லவ் பேர்ட்ஸ் விற்பனையில அஞ்சாயிரம் ரூபாய் லாபம் கிடைக்குது. ஆக, மாசத்துக்கு 25,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

லவ் பேர்ட்ஸ்
லவ் பேர்ட்ஸ்
ஆண்டுக்கு ரூ.2 லட்சம்...
ஒரு ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

நியூசிலாந்து வொயிட், சின்சில்லா, பிளாக், பிளாக் டச், இங்கிலீஸ் பாட்டர், அங்கோரா, சோவியத் வைல்டு போன்ற இனங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. இவை எல்லாத்தையுமே கறிக்காகவும், அழகுக்காகவும், விற்பனைக்காகவும் வளர்க்கலாம். ஏழு பெண் முயல்களும், மூணு ஆண் முயல்களும் கொண்டது ஒரு யூனிட். பயிற்சி எடுத்த பிறகு, புதுசா முயல் வளர்ப்புல இறங்குறவங்க முதல்ல ஒரு யூனிட் மட்டும் அமைச்சு அனுபவம் பெற்ற பிறகு, பண்ணையை விரிவுபடுத்தலாம்" என்று நம்பிக்கையூட்டி முடிக்கும் சண்முகப்பிரியா, முயல்களுக்குத் தீவனம் கொடுத்தபடியே புன்னகைக்கிறார். கூண்டுக்குள் குதூகலத்துடன் கூச்சலிடும் முயல்களின் கண்கள் மின்னொளிபோல பிரகாசத்துடன் சுடர்விடுகின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு