Published:Updated:

குளோனல் சவுக்கு... ஹெக்டேருக்கு 100 டன் மகசூல்!

ராஜேஷ் கோபாலன், சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
ராஜேஷ் கோபாலன், சீனிவாசன்

கூட்டம்

குளோனல் சவுக்கு... ஹெக்டேருக்கு 100 டன் மகசூல்!

கூட்டம்

Published:Updated:
ராஜேஷ் கோபாலன், சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
ராஜேஷ் கோபாலன், சீனிவாசன்
நிரந்தர வருமானம், ஆள் பற்றாக்குறைக்கான தீர்வு, கட்டுபடியான விலை போன்ற காரணங்களால் விவசாயிகள் பலரும் மரப்பயிர்ச் சாகுபடிக்கு மாறிவருகிறார்கள்.

தகுந்த தொழில்நுட்பங்களையும், பராமரிப்பு முறைகளையும் கடைப்பிடிக்கும்போதுதான் மரப்பயிர்ச் சாகுபடி லாபகரமானதாக அமையும். அதை மனதில்கொண்டு கோயம்புத்தூரில் இயங்கிவரும் மத்திய அரசுக்குச் சொந்தமான ‘வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்’ பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்திவருகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் ‘மரம் வளர்ப்போர் விழா 2020’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

கிருஷ்ணகுமார், முருகேசன், அன்வர்தீன்
கிருஷ்ணகுமார், முருகேசன், அன்வர்தீன்

தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்தக் கருத்தரங்கில், வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றுப் பேசினார்கள். கருத்தரங்கு நிகழ்வுக்கு தலைமையேற்றுப் பேசிய தமிழக வனத்துறை முன்னாள் தலைவர், முனைவர் கிருஷ்ணகுமார், “வனங்களும் மரங்களும்தான் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் சொத்து. மரம் வளர்ப்பு மூலம் ஏழ்மையைக் குறைக்க முடியும். விவசாயிகள் வளமான வாழ்க்கையை வாழ முடியும். இங்கிருக்கும் விஞ்ஞானிகள், மரங்களின் மருத்துவர்கள். நீங்கள் வளர்க்கும் மரங்களில் எந்த நோய் ஏற்பட்டாலும் இவர்களை அணுகினால் உடனடித் தீர்வு கிடைக்கும்’’ என்றார் அக்கறையோடு.

தலைமை உரையாற்றிய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் முருகேசன், “இங்கிருக்கும் விஞ்ஞானிகள், அதிக விளைச்சல் தரக்கூடிய பல புதிய மரப்பயிர் ரகங்களை உருவாக்கிவருகிறார்கள். விவசாயிகள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என அழைப்புவிடுத்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சிறப்பு அழைப்பாளரான கூடுதல் வனப்பாதுகாவலர் அன்வர்தீன், ‘‘தமிழகத்தைப் பொறுத்தவரை 3.7 சதவிகிதம் வனத்துக்கு வெளியே தனியார் மர வளர்ப்பில் உள்ளது. அதே நேரம் கேரள மாநிலத்தில் தனியார் காடுகளின் பரப்பளவு 7.5 சதவிகிதமாக இருக்கிறது. வனத்துக்கு வெளியேயுள்ள பண்ணைக்காடுகள்தான் 50 சதவிகிதம் மரப் பயன்பாடுகளைப் பூர்த்திசெய்கின்றன’’ என்றார்.

ராஜேஷ் கோபாலன், சீனிவாசன், நிக்கோடிமஸ்
ராஜேஷ் கோபாலன், சீனிவாசன், நிக்கோடிமஸ்

மரப்பெருக்கு நிறுவனத்தின் விரிவாக்கத்துறை இயக்குநர் ராஜேஷ் கோபாலன், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் மரச்சாகுபடி குறித்த பல தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். மர வளர்ப்புக் குறித்த தகவல்கள் தேவையான நேரத்தில் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை. அதற்கான தீர்வுதான் இந்தக் கருத்தரங்கு’’ என்றார்.

தொடர்ந்து பேசிய கரூர் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் பொதுமேலாளர் முனைவர் இரா.சீனிவாசன், ‘‘கரும்புக்கு மாற்றுப் பயிராகச் சவுக்கு விளங்குகிறது. குறைந்த அளவு நீர்ப்பாசனம், அதிக விளைச்சல். உற்பத்திச் செலவு குறைவு ஆகிய காரணங்களால் விவசாயிகள் சவுக்குச் சாகுபடிக்கு மாறிவருகிறார்கள். ரசாயன முறை சவுக்குச் சாகுபடியைவிட, இயற்கை முறையில் மேற்கொள்ளப்படும் சவுக்குச் சாகுபடிக்குச் செலவு குறைவு’’ என்றார்.

‘மர வளர்ப்பை ஊக்குவிப்பதில் வேளாண் இதழ்களின் பங்கு’ என்ற தலைப்பில் விளக்கப் படங்களுடன் சுவைபட உரையாற்றினார் பசுமை விகடன் இதழாசிரியர் பொன்.செந்தில்குமார். தொடர்ந்து கலந்துரையாடல் மற்றும் கேள்வி, பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மர வளர்ப்பு தொடர்பான பல்வேறு சந்தேகங்களை விவசாயிகள் எழுப்ப, அவற்றுக்கு விஞ்ஞானிகள் குழுவினர் பதிலளித்தனர்.

‘‘வரப்புப் பயிராக மரக்கன்றுகளை நடவு செய்யவிருக்கிறேன். கன்றுக்குக் கன்று இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்?’’ என்று கேட்டார் செஞ்சேரிமலை உழவர் பணிக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஓ.வி.ஆர்.ராமச்சந்திரன். அதற்கு பதிலளித்த மூத்த விஞ்ஞானி, முனைவர் நாகராஜன், ‘‘வரப்புப் பயிராக மரக்கன்றுகளை நடவு செய்யும்போது, ஐந்து மீட்டர் இடைவெளி அவசியம் தேவை. காற்றுத் தடுப்பு மரங்களாகச் சவுக்கு போன்ற மரங்களை மூன்று மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம். வரப்புப் பயிர் மரங்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனம் உகந்தது. உரிய நேரத்தில் உர மேலாண்மை, கவாத்து அவசியம். நோய்த் தாக்குதல் கண்காணிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

‘‘இலைவழி நாற்றங்கால் முறை சாத்தியமா... அந்த நாற்றுகள் மூலம் செடி மற்றும் மரங்கள் வளருமா?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கும் பதிலளித்த நாகராஜன், “இலைவழி நாற்றுகள் மூலம் பலன் தரும் செடிகள் மற்றும் மரங்கள் வளராது’’ என்று ஆணித்தரமாகச் சொன்னார்.

மரம் வளர்ப்பு மூலம் விவசாயிகள் வளமான வாழ்க்கையை வாழ முடியும். இலைவழி மூலம் செடிகள் வளர்த்தால் பலன் கிடைக்குமா?

100 டன் மகசூல்!

குளோனல் சவுக்கு பற்றிப் பேசிய முனைவர்நிக்கோடிமஸ், ‘‘குறுகியகால மரப்பயிரான சவுக்கு மரங்களை 24 மாதங்கள் முதல் அறுவடை செய்யலாம். ஒரு காலத்தில் சவுக்கு 30 ஆண்டுக்காலப் பயிர். இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியில் அது மூன்று ஆண்டுக்காலப் பயிராக மாற்றம் பெற்றுள்ளது. காற்றிலுள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல்கொண்ட பயிர்களில் முதன்மையானது சவுக்கு. கடலூர், காஞ்சிபுரம், சிதம்பரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஹெக்டேர் ஒன்றிலிருந்து 100 டன் வரை மகசூல் எடுக்கும் சூழல் இருக்கிறது.

மத்திய மாவட்டங்களில் 75 டன் வரை மகசூல் கிடைக்கும். மேற்கு மாவட்டங்களில் சவுக்குப் பயிரின் அதிகபட்ச மகசூல் 50 டன் வரை உள்ளது. நெல், கரும்புபோல் சவுக்குப் பயிரிலும் பல வீரிய ரகங்கள் உள்ளன. ‘குளோனல்’ நாற்றுகளை விவசாயிகள் அதிகம் விரும்பி நடவு செய்கிறார்கள்.

தகுந்த இடைவெளியில் நடவு செய்யும்போது மிளகாய், தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிப் பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம்’’ என்றார்.

இரண்டாம் நாள் கருத்தரங்கு, ‘மோனா 20’ புதிய உயிர் காரணி திரவ மருந்து வெளியீடு போன்ற தகவல்கள் அடுத்த இதழில்...

தொடர்புக்கு,

வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்,

கோயம்புத்தூர்

தொலைபேசி:

0422 248 4100, 2484144

0422-2484144

ஏழு ஆண்டுகளில் அறுவடை!

குளோனல் சவுக்கு... ஹெக்டேருக்கு 100 டன் மகசூல்!

டம்புச் சாகுபடி பற்றிப் பேசிய முனைவர் விஜயராகவன், “இது நமது தாயக மரம். இதில் புதிய ரகம் கொண்டுவரும் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பென்சில் உற்பத்திக்கு இது அதிகம் பயன்படுகிறது. காகிதம், தீக்குச்சி மற்றும் ஒட்டுப் பலகை தயாரிப்புக்கும் உகந்த மரம். வேகமாக வளரும் தன்மைகொண்டது. இந்த மரம் அதிகபட்சமாக 45 மீட்டர் உயரமும், 100 முதல் 160 செ.மீ விட்டமும் வளரக்கூடியது. நடவு செய்த ஏழு ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம். விற்கும்போது நல்ல விலை கிடைக்கும்.

மானாவாரியில் வளராது மலைவேம்பு!

லைவேம்பு பற்றிப் பேசிய முனைவர் மாயவேல், ‘‘இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. நடவு செய்த மூன்று ஆண்டுகளில் வெட்டினால் காகிதக்கூழ் தொழிற்சாலைக்கு விற்பனை செய்யலாம். ஆறு ஆண்டுகளில் அறுவடை செய்தால் ஒட்டுப் பலகை பயன்பாடுகளுக்கு அனுப்பலாம். 10 ஆண்டுகள் வளர்ந்த மரங்கள், மரச்சாமன்கள் தயாரிக்க ஏற்றவையாக இருக்கும். எப்போதும் தேவை அதிகமுள்ள மரப்பயிராக மலைவேம்பு உள்ளது.

குளோனல் சவுக்கு... ஹெக்டேருக்கு 100 டன் மகசூல்!

நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணில் மட்டும்தான் இது சிறப்பாக வளரும். இது வறட்சியைத் தாங்கி வளரும் பயிர் கிடையாது. மழை அளவு குறைந்த பகுதிகளில் இதைக் கட்டாயம் சாகுபடி செய்யக் கூடாது. ஜி.கே.10 என்ற ரகம் 10 ஆண்டுகளில் ஹெக்டேர் ஒன்றுக்கு 250 டன் மகசூலைக் கொடுக்கும். வாரம் ஒரு முறை நீர்ப் பாசனம் அவசியம். ஓர் ஆண்டுப் பயிருக்கு வாரம் 10 லிட்டரும், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வாரம் 50 லிட்டர் தண்ணீரும் கொடுக்க வேண்டும். 10 ஆண்டுகளில் 120 மரங்கள் மூலம் 80 டன் மகசூல் எடுக்கலாம். இன்றைய மதிப்பில் 9,50,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

ஆறு ஆண்டுகளில் 5,76,000 ரூபாய்!

குளோனல் சவுக்கு... ஹெக்டேருக்கு 100 டன் மகசூல்!

பெருமரம் பற்றிப் பேசிய முனைவர் ராஜ சுகுண சேகர், ‘‘பெருமரத்தை `பீயன் மரம்’ என்றும் அழைப்பார்கள். வேகமாக வளரக்கூடியது. வெப்பநிலை நான்கு டிகிரி முதல் 47 டிகிரி செல்சியஸ் வரையுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யலாம். தீக்குச்சிகள், தீப்பெட்டிகள் செய்வதற்கு மிகவும் ஏற்ற மரம். 6 முதல் 8 வயதுடைய மரங்கள் தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவை. 15 செ.மீ சுற்றளவுக்கு மேல் வளர்ந்திருக்கும் எல்லாக் கிளைகளும் தீக்குச்சித் தயாரிப்புக்கு ஏற்றவை. மானாவாரியில் ஹெக்டேருக்கு 997 மரங்கள் நடலாம். அதன் மூலம் ஆறு ஆண்டுகளில் 200 முதல் 250 டன்கள் அறுவடை செய்யலாம். டன் 1,600 ரூபாய் விலையில் 4 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இறவைப் பாசனத்தில் ஹெக்டேருக்கு 1,055 மரங்கள் நடவு செய்து ஆறு ஆண்டுகள் முடிவில் 315 முதல் 360 டன்கள் வரை மகசூல் எடுக்க முடியும். டன் 1,600 ரூபாய் விலையில் 5,76,000 ரூபாய் லாபம் பார்க்கலாம்.

மரநோய்களுக்கு மாமருந்து!

குளோனல் சவுக்கு... ஹெக்டேருக்கு 100 டன் மகசூல்!

‘பயோ பேசலின்’ (Bio Baselin) என்ற வளர்ச்சி ஊக்கியை, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில் வெளியிட்டார் முனைவர் வ.மோகன். அது குறித்து நம்மிடம் பேசியவர், “பயோ பேசலின் ஒரு பாக்டீரியா வகையைச் சார்ந்த நுண்ணுயிரி. திரவ வடிவில் இதை வெளியிடுகிறோம். இது பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாகவும், உயிர்க் காரணியாகவும் செயல்படுகிறது. இந்த பயோ பேசலின், சவுக்கு மரங்களின் வேர்களில் ஏற்படும் நீர்ப்பெருக்க நோய், வேர் அழுகல் நோய், கழுத்து நுனி அழுகல் நோய் மற்றும் `தண்டு வாடல் நோய்’ எனப்படும் பட்டைப்புண் நோய் போன்றவற்றை மிக விரைவில் குணப்படுத்தும் ஆற்றல்கொண்டது. மேலும், மற்ற மரப்பயிர்களில் விதை மூலம் உண்டாகும் நோய்களையும் கட்டுப்படுத்தும் தன்மையுடையது. மண்ணிலுள்ள நூற்புழுக்களின் பாதிப்பையும் கட்டுப்படுத்தும். இந்த பயோ பேசலின், மர நோய்களை முற்றிலும் குணப்படுத்துவதுடன், மரப்பயிர்களின் வளர்ச்சியூக்கியாகவும் செயல்படுகிறது’’ என்றவர்,

“பயோ பேசலின் ஊக்கியைப் பயன்படுத்தும் முறையை விளக்கினார். விதைநேர்த்தி செய்வதற்கு, 250 மி.லி அரிசிக்கஞ்சியில் 200 மி.லி பயோ பேசலினை ஊற்றி நன்கு கலக்கவும். அதில் ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகளைப் போட்டுக் கிளறிவிட வேண்டும். தொடர்ந்து கலவையில் நனைந்த விதைகளை வெளியிலெடுத்து 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்தி, உடனடியாக விதைக்க வேண்டும்.

நாற்றங்கால் விதைநேர்த்தி செய்வதற்கு, ஒரு வாளியில் 30 சென்டிமீட்டர் அளவு சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும். அதில் 500 மி.லி பயோ பேசலினை ஊற்றிக் கலக்கிவிட வேண்டும். தொடர்ந்து நடவு செய்ய வேண்டிய நாற்றுகளின் வேர்ப்பகுதியை 15 நிமிடங்கள் ஊறவைத்து, பிறகு நடவு செய்ய வேண்டும். ஐந்து லிட்டர் சுத்தமான தண்ணீரில், ஒரு லிட்டர் பயோ பேசலினை கலந்துகொள்ள வேண்டும். அந்தக் கலவையிலிருந்து 100 முதல் 200 மி.லி வரை எடுத்து, செடிகளின் வேர்ப்பகுதியில் நேரடியாகவும் ஊற்றலாம். பயோ பேசலின் வளர்ச்சி ஊக்கியை மற்ற நுண்ணுயிர் உரங்களுடன் கலந்தும் பயன்படுத்தலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் ரசாயன உரங்களுடன் கலக்கக் கூடாது. இது ஒரு லிட்டர் 400 ரூபாய் விலையில் கிடைக்கிறது. கோயம்புத்தூரிலுள்ள, வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் கிடைக்கும்’’ என்றார்.

தொடர்புக்கு, முனைவர் வ.மோகன், செல்போன்: 94434 26214.