Published:Updated:

மரக்கன்றுகள் இலவசம்... பசுமையைப் பரப்பும் கிரீன் நீடா!

பனைவிதைகளுடன் ராஜவேலு
பிரீமியம் ஸ்டோரி
பனைவிதைகளுடன் ராஜவேலு

சேவை

மரக்கன்றுகள் இலவசம்... பசுமையைப் பரப்பும் கிரீன் நீடா!

சேவை

Published:Updated:
பனைவிதைகளுடன் ராஜவேலு
பிரீமியம் ஸ்டோரி
பனைவிதைகளுடன் ராஜவேலு

மூக நலனில் அக்கறை கொண்ட ஒரு சிலரால் இந்தப் பூமிப் பந்தில் ஆங்காங்கே மரங்கள் துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன. அப்படிப் பட்டவர்களில் ஒருவர்தான் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேலு. கிரீன் நீடா என்ற பெயரில் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி, மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

பனைவிதைச் சேகரிப்பில் கிரீன் நீடா அமைப்பினர்
பனைவிதைச் சேகரிப்பில் கிரீன் நீடா அமைப்பினர்

பனைவிதைச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ராஜவேலு மற்றும் கிரீன் நீடா உறுப்பினர்களைச் சந்தித்தோம். உற்சாகமாகப் பேசிய ராஜவேலு, “டெல்டாவின் இதயப் பகுதி நீடாமங்கலம்னு சொல்லுவாங்க. இது கிராமப் பகுதியாக இருந்தாலும் இங்க மரங்கள் அதிகம் கிடையாது. இதனால வெயில் வாட்டி எடுக்கும். இந்த நிலையிலதான், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துல வேலை கிடைச்சி, சென்னைக்குப் போனேன். அங்க அடையாறு, நுங்கம்பாக்கம் உள்படப் பல பகுதிகள்ல பச்சைப்பசேல்னு மரங்கள் நிறைஞ்சிருக்குறதைப் பார்க்க ஆச்சர்யமா இருந்துச்சு. இதுமாதிரி நீடாமங்கலத்துலயும் மரங்களை உருவாக்கணும்ங்கற எண்ணம் தோன்ற ஆரம்பிச்சது. இதுக்கிடையில 15 வருஷத்துக்கு முன்னாடி, கானூர் ரேஷன் கடை கிட்ட நான் வெச்ச, இயல்வாகை கன்று, மரமாக வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பிச்சது. ‘இது ராஜவேலு வெச்ச மரம். இது இல்லைனா, வெயில்லதான் வாடணும்’னு ஊர் மக்கள் சொல்றதும், என்னைப் பார்க்கும் போதெல்லாம், வாழ்த்துறதும் எனக்கு ஊக்கமா இருந்துச்சு. அதுகொடுத்த உந்துதலால என்னைப் போலவே மரம் வளர்ப்புல ஆர்வமுள்ள ஆட்களைச் சேர்த்துக்கிட்டு, ‘கிரீன் நீடா’ ங்கிற அமைப்பைத் தொடங்கி, மரம் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட ஆரம்பிச்சோம். இதுல 20 பேர் உறுப்பினரா இருக்காங்க. என்னோட மாச சம்பளத்துல ஒரு குறிப்பிட்ட பகுதியை இதுக்குச் செலவு பண்றேன். மற்ற உறுப்பினர்களும் தங்களால முடிஞ்ச உதவிகளைச் செய்யறாங்க.

குறுங்காடு
குறுங்காடு

நான் சென்னையில் வேலை பார்த்தாலும்கூட, வாரந்தோறும் நீடாமங்கலம் வந்துடுவேன். என்னோட வீட்டுல எப்பொழுதும் மரக்கன்றுகள் தயாராகிக்கிட்டே இருக்கும். செம்மண், மணல், மாட்டு எரு, மண்புழு உரம் கலந்து, படுக்கை அமைச்சு அதுல விதைகளைப் போட்டு உற்பத்தி செய்றதுனால, எல்லாக் கன்றுகளுமே தரமானதா வளருது. சின்னக் கன்றுகளாகக் கொடுத்தால் அதன் பிழைப்புத்திறனுக்கு உத்தரவாதம் இருக்காதுங்கறதுனால, 6 முதல் 12 மாசம், நல்லா வளர்ந்த நிலையில பெரிய கன்றுகளாகக் கொடுக்கிறோம். மாதந்தோறும் அதன் வளர்ச்சிக்கு ஏற்ப, பெரிய பைகள்ல கன்றுகளை மாற்றிக்கிட்டே இருப்போம். பெரிய கன்றுகளை நடவு செஞ்சாதான் அது குறைஞ்ச நாள்ல வேகமாக வளரும்.பைகள்ல மண்ணோடு, எருவும் கலந்து போடுவோம். ஆனால் மரக்கன்றுகளை விற்பனை செய்யும் பல நர்சரிகள், லாப நோக்கத்துல இதையெல்லாம் கடைப்பிடிக்கிறதே இல்லை. பெரிய கன்றுகளை நாங்களே இலவசமாகக் கொடுக்குறோம். இது தெரிஞ்சு, பலபேர் இப்ப எங்களைத் தேடி வர்றாங்க.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பனைவிதைகளுடன் ராஜவேலு
பனைவிதைகளுடன் ராஜவேலு

எங்ககிட்ட கன்று வாங்க சில விதிமுறைகளை வெச்சிருக்கோம். உண்மையான அக்கறை, ஆர்வத்தோடு மரம் வளர்ப்பாங்களாங்கறதை, அவங்கப் பேச்சிலேயே கண்டுபிடிச்சிடுவோம். இதோடு குழி எடுத்து வெச்சிருக்கணும், சுற்றுச்சுவர் இல்லாத இடமாக இருந்தால் கூண்டு தயாராக இருக்கணும், இதையெல்லாம் நாங்க நேர்ல பார்த்துட்டுதான் கன்று கொடுப்போம்.

வடுவூரின் பழைய பெயர் மகிழம் காடு. அங்க மகிழம் மரங்களை மீட்டெடுக்க, அந்த ஊரில் கிரீன் நீடாவின் தனிப்பட்ட முயற்சியில், பொது இடங்கள்ல 200 மகிழம் கன்றுகளை நடவு செஞ்சு, கூண்டு அமைச்சிருக்கோம். நீடாமங்கலம் பேருந்து நிறுத்தத்துல இயல்வாகை, புங்கன், மந்தாரை மரக்கன்றுகள் வெச்சோம். ஒரு டீக்கடைக்காரர் தண்ணீர் ஊற்றிப் பராமரிக்கிறார். ஒரு வங்கி அருகில் மரம் வச்சோம். அந்த வங்கியின் மேலாளர் தினமும் ஆர்வத்தோடு தண்ணீர் ஊத்திக்கிட்டு இருக்கார்.

பள்ளிக்கூட வளாகங்கள், கோயில்கள்ல நூற்றுக்கணக்கான மரங்கள் வெச்சிருக்கோம். வீடுகளுக்குப் பழமரங்கள் கொடுக்குறோம். தண்ணீர் ஊற்றி சிறப்பாகப் பராமரிக்கிறங்களுக்குப் பரிசு கொடுத்துக் கெளரவிப்போம். பசுமை தீபாவளி கொண்டாடுறதை வழக்கமாக வெச்சிருக்கோம்.

நீடாமங்கலம் ரயில் நிலையம் பக்கத்துல, பேரூராட்சிக்குச் சொந்தமான இடத்துல குறுங்காட்டை உருவாக்குறதுக்காக ஆயிரம் கன்றுகள் நடவு செஞ்சிருக்கோம். பழம் தரும் மரங்கள் இருந்தால்தான், பறவைகளின் வருகை அதிகமாகி, விதைகள் பரவலாகி, சுற்றுவட்டாரப் பகுதிகள்ல தானாக மரங்கள் வளரும் என்ற நோக்கத்தோடு நட்டு வளத்துட்டு வர்றோம்.

நீடாமங்கலத்துக்குப் பக்கத்துல உள்ள கானூரில் 2019-ம் ஆண்டை உணர்த்தும்விதமா, 2019 பனை விதைகளை நூறு நாள் வேலையாள் களைப் பயன்படுத்தி வெற்றிக்கரமா விதைச்சோம். தமிழ்நாட்டின் பல பகுதிகள்ல இருக்கிற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மூலமாகவும் பலவிதமான விதைகள் கிடைக்குது. இவங்களோட பங்களிப்பு எல்லாம் இருக்குறதுனாலதான், மரம் வளர்ப்பில் கிரீன் நீடா வெற்றிகரமாக நடைப்போடுது” என்றார் நெகிழ்ச்சியுடன்.

தொடர்புக்கு, செல்போன்: 99402 20986