Published:Updated:

பாரம்பர்யக் கருவிகளைப் பாதுகாக்கும் விவசாயி!

பாரம்பர்ய இரும்புக் கருவிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
பாரம்பர்ய இரும்புக் கருவிகள்

மரக்கால்... காக்கட்டை... கொம்புகுப்பி

பாரம்பர்யம்

நிலத்தைப் பண்படுத்தி விவசாயம் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து இன்றுவரை எத்தனையோ மாற்றங்களையும் அறிவியல் புதுமைகளையும் சந்தித்துவருகிறது விவசாயம்.

ஏர்பூட்டி விவசாயம் செய்வது குறைந்து டிராக்டர், ரோட்டவேட்டர் என இன்றைக்குக் கருவிகள்மயமாகிவிட்டது விவசாயம். அதிகாலையில் எழுந்து, வயலுக்குப் போய், பட்டனை அழுத்தி, மோட்டாரை இயக்கிய காலம் மாறிவிட்டது. சென்னையிலிருந்துகூட திருநெல்வேலியில் இருக்கும் மோட்டாரை செல்போன் மூலம் இயக்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அணிவகுக்கும் பாரம்பர்யக் கருவிகள்
அணிவகுக்கும் பாரம்பர்யக் கருவிகள்

இந்த நிலையில், இயந்திரமயமான விவசாயத்தால் பாரம்பர்ய விவசாயத் தொழில்நுட்பங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்படும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய விவசாயக் கருவிகளைப் பாதுகாத்துவருகிறார் செண்பகசேகரப் பிள்ளை. திரும்பிய இடமெல்லாம் பச்சைப்பசேலென இருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பூக்களுக்குப் பெயர்பெற்ற தோவாளை வட்டம், துவரங்காடு கிராமத்தில் வசிக்கிறார் செண்பகசேகரப்பிள்ளை.

அவர் வைத்திருக்கும் கருவிகளைப் பற்றிக் கேட்டதும், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். “என்னோட அப்பா விவசாயிங்கறதுனால எனக்குச் சின்ன வயசுல இருந்தே வயல்ல வேலை செஞ்சு பழக்கம். மாடுகளைவெச்சு உழவு ஓட்டுறது, களை பறிக்கிறது, கதிர் அறுக்கிறது, உரம் போடுறதுனு செய்யாத வேலை இல்லை.

கருவிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கும்
செண்பகசேகரப்பிள்ளை
கருவிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கும் செண்பகசேகரப்பிள்ளை

பி.ஏ எக்கனாமிக்ஸ் படிச்சிட்டு, ராமேஸ்வரத்துல மீன்வளத்துறையில் சில நாள்கள் வேலை பார்த்துட்டிக்கிட்டிருந்தேன். என்னமோ தெரியலை... வயல்ல வேலை செஞ்சுட்டு வர்றப்போ மனசு முழுக்கச் சந்தோஷமா இருக்கும். வேலையில அது கிடைக்கலை. அதனால வேலையை விட்டுட்டு முழுநேர விவசாயியா மாறிட்டேன்.

வேளாண்துறை நடத்தும் எல்லா மீட்டிங்குக்கும் தவறாம போயிடுவேன். அவங்க சொல்ற எல்லாப் புதுத் தொழில்நுட்பங்களையும் கத்துக்கிட்டு அதையெல்லாம் வயல்ல செயல்படுத்திப் பார்ப்பேன். அப்படி அம்பை-16, டி.பி.எஸ்-3 மாதிரி புது ரகங்களைப் பயிரிட ஆரம்பிச்சேன். என் வயல்ல மகசூல் அதிகமா இருக்கறதைப் பார்த்துட்டு எல்லாரும் ஆர்வமா புதுரகங்களைப் பயிரிட ஆரம்பிச்சாங்க.

மண் மாசு அடையறதைப் புரிஞ்சுக்கிட்டு இப்போ முடிஞ்சவரை இயற்கை உரங்களை மண்ணுக்குத் தேவையான அளவு மட்டும் போட்டு விவசாயம் செஞ்சுட்டு வர்றேன்’’ என்றவர், பாரம்பர்யக் கருவிகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘நான் சேகரிச்சுவெச்சிருக்கும் இந்தப் பொருள்களெல்லாம் ஒருகாலத்துல விவசாயிகள் வீட்டுலயும், பூஜை அறையிலயும் இருந்த சாமானங்கள்.

காலகட்டம் மாறமாற மறைச்சுட்டாங்க. ஆனா, எனக்கு ஒவ்வொரு கருவியைப் பார்க்கும்போதும், `மனுஷன் தன் அறிவைக்கொண்டு எவ்வளவு யோசிச்சு, இதையெல்லாம் கண்டுபிடிச்சிருக்கான்’னு வியந்துபோவேன்.

நாம இப்போ பார்க்கும் எல்லா நவீன இயந்திரங்களும் பாரம்பர்யக் கருவிகளை அடிப்படையாவெச்சுதான் உருவாகியிருக்கு. முன்னல்லாம் அடுக்களையில உரல், ஆட்டுக்கல், திருவை, அம்மினு இருக்கும். ஆனா இப்போ, அந்த இடத்துல மிக்ஸி, கிரைண்டர்னு இருக்கு.

பாரம்பர்ய இரும்புக் கருவிகள்
பாரம்பர்ய இரும்புக் கருவிகள்
அந்தக் காலத்துல மரக்கால யாருக்கும் குடுக்க மாட்டோம். அப்படியே குடுத்தாலும் சாயந்தரம் 5 மணிக்குள்ள வாங்கிடுவோம்.

ஆனா அதெல்லாம் இன்னைக்குக் காட்சிப்பொருளா மாறிடுச்சு” என்றவர் கருவிகள் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லத் தொடங்கினார். ‘‘மரக்கால், தகரத்தில் செய்த காக்கட்டை, கொம்புக் குப்பி, பனை ஓலையில் செய்த இறவெட்டி, தகரத்தில் செய்த இறவெட்டி, குறுங்காவளையம், வள்ளக்கை, தொடக்கயிறு, நாற்றுப் பாவும்போது பயன்படுத்தும் மூங்கில் களை, ஊடு மண்வெட்டி, மாட்டை வதக்கும் சூட்டுக்கோல், நெல் சேமிக்கப் பயன்படும் குலுக்கை, நெல் அளக்கப் பயன்படும் பொது அளவு மரக்கால், கூலி மரக்கால், நெல் சீட்டு மரக்கால், பாட்டம் மரக்கால், பொழிதட்டுப் பலகை, மாட்டுக்கு மருந்து கொடுக்கும் கொட்டம், லாடம் மற்றும் ஆணி, பறவைகளை விரட்டும் கவுண், பாதாளக் கரண்டி போன்ற பல பாரம்பர்ய வேளாண் கருவிகளைப் பாதுகாத்துட்டு வர்றேன். இதையெல்லாம் விவசாயக் கண்காட்சிகள், கூட்டங்களுக்குக் கொண்டு போய்க் காட்சிப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு இந்தப் பொருள்களோட சிறப்புகளைச் சொல்லிக்கொடுக்கிறேன்’’ என்று முடித்தார்.

மாவட்ட வேளாண் உற்பத்திக்குழு, வேளாண் விற்பனைக்குழு போன்ற பல்வேறு வேளாண் சார்ந்த குழுக்களில் உறுப்பினராக இருப்பதுடன், முன்னோடி விவசாயியாகவும் திகழ்ந்துவருகிறார். கடந்த இருபது ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிள்ளிக்குளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த இறுதியாண்டு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்கள் அனுபவப் பயிற்சியும் அளித்துவருகிறார். மேலும், சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் விவசாயக் கண்காட்சிகள் மற்றும் கூட்டங்களில் தான் சேகரித்துவைத்துள்ள பாரம்பர்யக் கருவிகளைக் காட்சிப்படுத்திவருகிறார்.

தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வரும் செண்பகசேகரப்பிள்ளைக்கு 2004 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், `சிறந்த விவசாயி’க்கான பாராட்டுச் சான்றிதழும் ரொக்கப்பரிசும் வழங்கி கௌரவித்துள்ளது.