Published:Updated:

பறவைகளுக்கு உணவகம்... பசிப்போக்கும் விவசாயி!

இயற்கை
பிரீமியம் ஸ்டோரி
News
இயற்கை

இயற்கை

‘மனிதர்கள்ள இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது’ இவை, இந்தியாவின் பறவைகள் மனிதர் என்றழைக்கப்படும் சலீம் அலி அடிக்கடி உதிர்த்த வார்த்தைகள். பறவைகள் நிபுணர் சலீம் அலி உயிரிழந்து மூன்று தசாப்தங்கள் ஆகிவிட்டன.

இப்போது அப்படியே நிகழ்காலத்துக்கு வருவோம். கொரோனா வைரஸ் உலகத்தின் செயல்பாடுகளை அடக்கி ஒடுக்கிக்கொண்டிருக்கிறது. இயல்புநிலை எப்போது திரும்பும்? என்பதுதான் அனைவரின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. எந்தக் காலத்திலும், பிற உயிரினங்களைப் பற்றி யோசிக்க நேரமில்லாத நம் பரபரப்பான வாழ்வியல் முறையில், இந்த நெருக்கடிக் காலம் மட்டும் விதிவிலக்கா என்ன?

முத்து முருகன்
முத்து முருகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்து முருகன் என்ற விவசாயி விதிவிலக்குதான். அவர், குளத்துப் பாளையத்தில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இந்த உலகம் நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல என்பதை நன்கு உணர்ந்த முத்து முருகன், பறவைகளுக்கு உணவளிப்பதற்காக, அரை ஏக்கரில் கம்பு மற்றும் சோளம் பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து, குருவிகள், கிளிகள் மற்றும் மயில்கள் என 100-க்கும் மேற்பட்ட பறவைகளுக்கு அட்சய பாத்திரமாக உணவளித்து வருகின்றன.

முத்து முருகனின் தோட்டத்துக்குச் சென்றோம். மரங்களிலிருந்த குருவிகள் ஒவ்வொன்றாகப் பறந்து கம்பைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. பறவைகளின் ரீங்காரங்களுக்கு மத்தியில் பேசத் தொடங்கினார் முத்து முருகன். “என்னுடைய சொந்த ஊர் குளத்துப்பாளையம்தான். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆரம்பத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நான், 1984-ம் ஆண்டிலிருந்து இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். சூழல் குறித்தும் அதிக அக்கறையோடு இயங்கி வருகிறேன். பல்லுயிர் பெருக்கத் துக்காக, ஏற்கெனவே என் தோட்டத்தைச் சுற்றி உயிர்வேலி அமைத்திருக்கிறேன். இயற்கை வேளாண்மைக்கு மாடுதான் அவசியம் என்று சொல்லிச் சோளம், கம்பு, சாமை போன்ற தீவனங்களைப் பயிரிடுவேன். அப்போதே, நிறைய பறவைகள் இங்கு வந்து தானியங்களைச் சாப்பிடும். தற்போது, இவை எல்லாம் மானாவாரியாகக்கூடப் பயிரிடப் படுவதில்லை. எல்லாம் பணப்பயிராக மாறி வருகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இயற்கையோடு இணைந்து இயற்கையை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், பறவைகளுக்காகக் கடந்த ஏப்ரல் மாதம் அரை ஏக்கர் பூமியில் சோளம் மற்றும் கம்பு பயிரிட்டேன். அதில் சோளம் கை கொடுக்கவில்லை. கம்பு நன்கு வளர்ந்தது. ஆடி மாதத் தொடக்கத்திலேயே அது பறவைகளுக்கு உணவாக மாறியது. புவி வெப்பமயமாதல் பிரச்னை உலகை அச்சுறுத்தி வருகிறது. நிறைய உயிரினங்கள் காணாமல் போகும் அபாயத்தில் இருக்கின்றன. இது போன்ற சின்னச் சின்ன செயல்பாடுகளால் தான் பாதிப்புகளிலிருந்து அனைவரையும் பாதுகாக்க முடியும் என்று நினைக்கிறேன். பறவைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்பதால்தான், கம்பு, சோளத்தைப் பயிரிடும்போது அது உணவு தேடி இங்கு வருகிறது. அதைப் பிரச்னையாகப் பார்க்காமல், பறவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தானியங்களைச் சாப்பிடும் பறவைகள்
தானியங்களைச் சாப்பிடும் பறவைகள்

வனப்பகுதி வெகுவாகக் குறைந்துவிட்டது. கான்கிரீட் காடுகள் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்றன. இதனால் யானைகள், புலிகள், மான்கள் தொடங்கிப் பறவைகள், பூச்சிகள்வரை நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தேனீக்கள் எண்ணிக்கை குறைந்தால், மகரந்தச்சேர்க்கை குறையும்.

கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது என்று புலம்புகிறோம். ஆனால், தவளைகளின் எண்ணிக்கை குறைந்ததால் தான், கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை யோசிக்க மறுக்கிறோம். மயில்களால் விவசாயத்துக்குப் பிரச்னை ஏற்படுகிறது என்பது உண்மைதான். அதேநேரத்தில், 15 ஆண்டுகளுக்கு முன்பு, ‘மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது’ என்ற கருத்து, இப்போது நேர் எதிராக மாறியுள்ளது. இவை எல்லாமே, நம்முடைய செயல்பாட்டில் எங்கேயோ சிக்கல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது” என்றவர் குருவிகள் கம்பைச் சாப்பிடுவதை நெகிழ்ச்சியுடன் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“இந்தக் குருவிகள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது மிகவும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. உலகில் மற்ற உயிரினங்களுக்கு மட்டுமான எதிர்வினை யாகப் பார்க்கக் கூடாது. அது நம்மை நோக்கித் திரும்பியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நம் இருப்புக்காகச் சூழல் இல்லை. சூழலைப் பொறுத்துதான் நம் இருப்பிடத்தை அமைக்க வேண்டும். நம் தவறான நடவடிக்கைகளையெல்லாம் நிறுத்திவிட்டு, இயற்கையை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்கான சிறு முயற்சிதான் இது. தினசரி நூற்றுக்கணக்கான தினைக் குருவிகள் வருகின்றன. இதை நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முன்பு, இந்தப் பகுதியில் இவ்வளவு தினைக் குருவிகள் இருப்பதை நான் பார்த்ததில்லை. இதன் மூலம், அதற்கு உணவு கிடைப்பதில்லை என்பதை மட்டும் என்னால் நன்கு உணர முடிகிறது. பறவைகளின் எண்ணிக்கை குறைவதற்குப் பல்வேறு காரணங்களைச் சொல்கின்றனர். ஆனால், பறவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை என்பதுதான் அடிப்படை பிரச்னை. அதற்கு எங்கு உணவு கிடைக்கிறதோ? அங்கெல்லாம் அது செல்லும்.

பறவைகளுக்கு உணவகம்... பசிப்போக்கும் விவசாயி!

புராண காலத்திலிருந்தே மனிதர்கள், பிற உயிரினங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறோம். ஆனால், அதை ஏதாவது ஒரு வகையில் சரி செய்து கொண்டிருந்தோம். இப்போது, அது குறைந்துவிட்டது. இப்போதும் கூட இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கு இதயத்தின் ஓரமாக இருக்கிறது. அதை இயற்கையும் நமக்கு உணர்த்திக்கொண்டேதான் இருக்கும். நான் இதை மானாவாரியாகத்தான் போட்டுள்ளேன். இதற்கு நீர்பாய்ச்சுவதில்லை. வீட்டில் மாடித்தோட்டம் போடுகிறோம். அதுபோல, நம் மொட்டை மாடிகளில், தானியங்களை ஒரு பையில் வைத்தால்கூடப் பறவைகள் அதைச் சாப்பிட வரும். இதில் அதிகச் செலவும் இல்லை. நான் 3 கிலோ விதைத்தேன். அதன் மூலம் கிட்டத்தட்ட 40 கிலோ தானியத்தை அது சாப்பிட்டிருக்கும். மாட்டுச் சாணத்தைத்தான் உரமாகப் போட்டேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் ரசாயன உரங்களைப் பயன்படுத்திவிடக் கூடாது. காய்கறிகளைப் பயிரிடும் நிலத்தில், ஒரு ஓரமாக இதுபோன்ற பயிர்களைப் பயிரிடலாம். இதன் மூலம், பறவைகள் அந்தப் பயிரை மட்டும் சாப்பிடும். பறவைகள் வரும்போது பூச்சித் தாக்குதல் குறையும்’’ என்றவர் நிறைவாக,

“ ‘பிழைக்கத் தெரியாத ஆள்’ என்று என்னை வசைபாடுபவர்கள் அதிகம். என் குடும்பத்தினரும் கூட அதற்கு விதிவிலக்கில்லை. ஆனால், மற்றவர்களுக்கு ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப் பணியைத் தொடர உள்ளேன். அடுத்தகட்டமாக, என்னுடைய தோட்டத்தின் மற்றொரு பகுதியில் பறவைகளுக்காகக் கம்பு பயிரிட உள்ளேன். பறவைகள் அடிக்கடி வரும்போது, நம் நிலத்தில் அதன் எச்சம் விழும். அந்தப் பகுதியே ஒரு உயிர்ச் சூழலாக மாறும். அது, விவசாயத்துக்கு உற்ற நண்பான இருக்கும்” என்றார் உறுதியான குரலில்.