நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

வறண்ட போர்வெல்லிலும் தண்ணீர் வரவைத்த விவசாயி!

ஜான்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான்

அப்போது புகை... இப்போது தண்ணீர்...

தொழில்நுட்பம்

“போர்வெல் போடும்போது தண்ணியே இல்லை. இப்போ வீட்டுப் பக்கத்துல இருக்குற 17 சென்ட் தோட்டத்துக்கும் பாயுற அளவுக்குத் தண்ணி இருக்கு. போன மே மாசம்கூட என் போர்வெல்லுல தண்ணி செழிப்பாத்தான் இருந்துச்சு” மகிழ்ச்சிப் பொங்கப் பேசுகிறார் ஜான். பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் அருகே உள்ள தனபிரகாசம் நகரில் வசித்துவருகிறார். ஒரு காலை நேரத்தில் அவரிடம் பேசினோம்.

போர்வெல் தண்ணீரில் செழிக்கும் தோட்டம்
போர்வெல் தண்ணீரில் செழிக்கும் தோட்டம்

“நான் எம்.சி.ஏ பட்டதாரி. என் குடும்பத்துக்கு இருந்த கடனுக்காக எங்க அப்பா விவசாய நிலத்தை வித்துட்டார். இயற்கை விவசாயம் செய்யணும்னுதான் ஆசை. நிலம் இல்லையேங்கற ஏக்கம் இருக்கத்தான் செஞ்சது. அப்புறம் கொஞ்சம் நிலம் வாங்கினோம். அதுலயும் பெரிசா ஒண்ணும் பயிர்வெக்கலை. கடந்த சில வருஷமா இருந்த வறட்சிதான் அதுக்குக் காரணம். எப்படியாவது இயற்கை விவசாயம் செய்யணும்கிறதுல குறியா இருந்தேன்.

‘இந்தத் தண்ணியை எடுத்துட்டா, உள்ளே தண்ணி இருக்காது. இந்த போர்வெல் வீணாப்போயிடும்’னு போர்வெல்காரர் சொன்னார். தண்ணியோட சுவை ஆரம்பத்துல இருந்ததுக்கும், இப்போ இருக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

அதுக்காகத் தயாராகணும்ங்கிறதுதான் என்னோட குறிக்கோளா இருந்துச்சு. நம்மாழ்வார் பத்தின காணொலிகளை அடிக்கடி பார்ப்பேன். அந்த வகையில எனக்கு நீரியல் வல்லுநர் பிரிட்டோராஜின் ‘வறண்ட ஆழ்துளைக் கிணற்றை மீட்கும் முறை’ குறித்த வீடியோ கிடைச்சது. அதையும் முழுசாகப் பார்த்தேன். அந்த நேரத்துலதான் என் வீட்டுல போர்வெல் போட்டாங்க. முதல்ல போட்ட போர்வெல்லுல தண்ணி வரலை. போன வருஷம் ஜூலை மாசம் அதுக்குப் பக்கத்துலேயே இன்னொரு போர்வெல்லும் போட்டாங்க. முதல்ல முந்நூறு அடிவரைக்கும் போட்டாங்க. தண்ணி வரலை, வெறும் புகைதான் வந்துச்சு. அதனால அப்பா ‘இதோட நிறுத்துங்க’னு சொன்னார். நான்தான் அடம் பிடிச்சு 510 அடிவரைக்கும் போர் போடவெச்சேன். அப்புறமா ஒரு 50 அடிக்குத் தண்ணீர் இருந்தது. ‘இந்தத் தண்ணியை எடுத்துட்டா, உள்ளே தண்ணி இருக்காது. இந்த போர்வெல் வீணாப்போயிடும்’னு போர்வெல்காரர் சொன்னார்.

போர்வெல் தண்ணீரைச் சேகரிக்கும் தொட்டி
போர்வெல் தண்ணீரைச் சேகரிக்கும் தொட்டி

ஆனா, மறுபடியும் இதுல தண்ணீர் வரவைக்க முடியும்னு நான் நம்பினேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலயும் மூணு பேர் போர்வெல் போட்டாங்க. அங்கேயும் தண்ணி வரலை. மழைக்காலங்கள்ல எங்க மொட்டை மாடியில விழும் தண்ணியை போர்வெல்லில் விழற மாதிரி செஞ்சேன்’’ என்றவர் மழைநீர்ச் சேமிப்பு அமைப்பைப் பற்றிச் சொன்னார். “போர்வெல்லுல இருந்து மூணடி தூரத்துல எட்டடி நீளம், எட்டடி அகலம், ஆறடி ஆழம் என்ற அளவுல குழி எடுத்தேன். அந்தக் குழியோட அடிப்பாகத்துல ரெண்டடிக்குச் சின்னக்கண் கொண்ட துளைகள் அமைச்சு, அதைச் சுற்றி கொசுவலையைக் கட்டினேன். பிறகு, குழியில மூணடி உயரத்துக்குக் கூழாங்கற்களையும், பக்கத்துல இருந்த சின்னக் கற்களையும் கொட்டி நிரப்பினேன். மாடியில இருந்து விழற மழைநீரை இந்தக் குழிக்குள்ள விழற மாதிரி செஞ்சேன். மழைநீர், கற்களில் வடிகட்டப்பட்டு, போர்வெல்லுக்குள் தண்ணி விழ ஆரம்பிச்சது. பிறகு, முதல் மழை கிடைச்சதும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணியை 2 ஹெச்.பி மோட்டார் மூலம் வெளியே எடுத்தோம். செம்மண் பூமியாக இருந்ததால சிவப்பு நிறத்தில தண்ணி வெளியே வந்துச்சு. அதைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்த ஆரம்பிச்சோம். ஒரு வாரம் கழிச்சு நல்ல தண்ணி கிடைக்க ஆரம்பிச்சது. கிணற்றில் கயிற்றைக் கட்டி அளவு பார்த்தோம். சுமார் 150 அடி ஆழத்துக்குத் தண்ணி இருந்துச்சு. அந்தத் தண்ணியை வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்திட்டு வர்றோம்.

போர்வெல்லில் தண்ணீர் வரவைக்கும் மழைநீர்ச் சேகரிக்கும் அமைப்பு
போர்வெல்லில் தண்ணீர் வரவைக்கும் மழைநீர்ச் சேகரிக்கும் அமைப்பு

பக்கத்துல ஆறடி நீள, அகல உயரத்துல ஒரு தொட்டி கட்டி இருக்கோம். அதுல ஒரு தடவை போர்வெல் தண்ணியை நிரப்பிடுவோம். அது தீர்ந்த பிறகுதான் மறுபடியும் தண்ணி நிரப்புவோம். போன அக்டோபர் மாசம் அமைச்ச இந்த மழைநீர்ச் சேகரிப்பு முறையால மே மாசம்கூட தண்ணீர்த் தட்டுப்பாடு எங்களுக்கு இல்லை. பக்கத்துல இருந்த 17 சென்ட் நிலத்துல கொஞ்சம் பயிர்களைவெச்சிருக்கேன். அதுக்கும் இந்தப் போர்வெல் தண்ணிதான் பயன்படுது. மழைநீர்ச் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தினதுக்குப் பிறகு, பக்கத்துல இருந்த முதல் போர்வெல்லுலயும் தண்ணி ஊற ஆரம்பிச்சது. அப்போதான் என் குடும்பத்துக்கு நான் சொன்னதுல நம்பிக்கை வந்துச்சு. லட்சங்கள்ல செலவு செய்யும் போர்வெல்லுக்கு, 20,000 ரூபாய் செலவு செஞ்சு மழைநீர்ச் சேமிப்பு அமைப்பு உருவாக்கினாலே போதும். தண்ணீர் கிடைச்சிடும். ஒரு தடவை வீட்டுக்குத் தண்ணி வாங்குறதுக்கே 2,000 ரூபாய் செலவு ஆகுது. அதுக்கு பதிலா மழைநீரைச் சேமிச்சா நல்ல பலன் கிடைக்கும். தண்ணியோட சுவை ஆரம்பத்துல இருந்ததுக்கும், இப்போ இருக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.

‘‘மழைக்காலங்கள்ல எங்க மொட்டை மாடியில விழற தண்ணியை போர்வெல்லில் விழற மாதிரி செஞ்சேன்.’’

`புது போர்வெல் போட்டு, தண்ணிக்கு பதிலா வெறும் புகைதான் வருது’னு வேதனைப்படும் மக்கள் அதிகமா இருக்கறாங்க. ஆனா, எவ்வளவு வறண்ட பகுதியானாலும், அப்படிப் புகை வந்த போர்வெல்களிலும், வறண்ட போர்வெல்களிலும் தண்ணியைக் கொண்டு வர முடியும். ஆரம்பகாலத்துல என்னைத் திட்டினவங்க எல்லாரும் இப்போ பாராட்டுறாங்க. பக்கத்துல இருக்குறவங்க இங்கே வந்து தண்ணி பிடிச்சுட்டு போறாங்க; அவங்களும் இதே மாதிரி செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. இதுக்கெல்லாம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரைப் பின்பற்ற ஆரம்பிச்சதுதான் காரணம். கூடவே பிரிட்டோ சாருக்கும் நன்றி” என்றபடி விடைகொடுத்தார்.ஜான்.

தொடர்புக்கு, ஜான், செல்போன்: 95858 67311.