Published:Updated:

"செலவு குறைவு, மகசூல் அதிகம்!" - விவசாயம் மற்றும் மாடித்தோட்டத்திற்கேற்ற 'குழித்தட்டு நாற்றங்கால்'

ம. பிரபு

நாம் உண்ணுகின்ற பல காய்கறிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஊட்டச்சத்து இல்லாத காய்கறிகள். அனைத்து காய்கறி விவசாயிகள் மற்றும் மாடித் தோட்டம் வைப்போர், தரமான காய்கறி நாற்றுகளை உருவாக்குவதற்கும் பயனடைவதற்கும் ஊட்டச்சத்துமிகுந்த இயற்கை குழித்தட்டு நாற்றங்காலைப் பயன்படுத்தலாம்.

குழித்தட்டு நாற்றங்கால்
குழித்தட்டு நாற்றங்கால்

மக்கள் தொகை பெருகப் பெருக மனிதனின் தேவைகள் அதிகமாகின்றன. நம்முடைய அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடம் இந்தத் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேருக்கின்றன. இவற்றில் இன்றியமையாதவை உணவாகும். தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4 கோடிக்கு மேலானோர் கிராமங்களில் வசித்து வருகின்ற விவசாயிகளாகும். இந்த விவசாயிகளின் மூலதனம் நெல், கரும்பு மற்றும் காய்கறிகளை விளைவிப்பதாகும். நமது அன்றாட வாழ்வுக்குக் காய்கறிகள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

குழித்தட்டு நாற்றங்கால்
குழித்தட்டு நாற்றங்கால்

“ஒரு வயது வந்த நபர் சீரான திட்ட உணவுக்கு ஒரு நாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ண வேண்டும்” என்ற ஒரு புள்ளிவிவரம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போதைய காய்கறி உற்பத்தியைக் கணக்கிட்டு பார்க்கும்போது ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முதல் 120 கிராம் காய்கறிகளையே பெறப்படுவதாகக் கூறப்படுகின்றன. ஆகவே இந்தக் காய்கறி உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயம் இப்போது நமக்கு உள்ளது. அதற்குக் குழித்தட்டு நாற்றங்கால் தயாரிக்கும் முறை மிகவும் முக்கியமானதாகக் கருதப் படுகின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ராஜந்தாங்கள் கிராமம் ஏழுமலை (வயது 40) இவர் குழித்தட்டு நாற்றங்கால் முறை மூலம் காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து கொண்டு வருகிறார். இவர் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றுள்ளார். இவர் ஒரு காய்கறி விவசாயி. தரமான காய்கறி நாற்று கிடைக்கப்பெறாத நிலையில், நாம் ஏன் ஒரு காய்கறி நாற்றங்கால் உருவாக்கக் கூடாது என்ற ஒரு நிலையில் இந்தக் குழித்தட்டு நாற்றங்காலைத் தன்னுடைய 20 சென்ட் நிலத்தில் தொடங்கினார். குழித்தட்டு நாற்றங்கால் என்பது நல்ல காய்கறிப் பயிர்களைத் தரமான முறையில் வீரியநாற்றுகளாக உற்பத்தி செய்வதாகும். மேலும், காய்கறி நாற்றுகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றியும் இருக்கும். கடந்த எட்டு ஆண்டுக்காலமாக இம்முறை மூலமாகத் தக்காளி, கத்ரிக்காய், மிளகாய் முதலான பல காய்கறி நாற்றுக்களை உற்பத்தி செய்து கொண்டுவருகிறார். இவர்களின் குழித்தட்டு நாற்றங்காலால், சுற்றி உள்ள பலகிராமங்கள் மற்றும் பல மாவட்ட விவசாயிகள் பயன் பெற்றுக் கொண்டு வருகின்றனர். இவர் தென்னை நார்க்கழிவை ஊடகமாக பயன்படுத்துகிறார். இதன் மூலம் அதிகப்படியான நீரை வடித்து நாற்றுக்கு தேவையான அளவு ஈரப்பதத்தை மட்டும் அளிக்கின்றது.

மேலும் இவருடைய நாற்றங்காலில் பச்சை நிழல்வலை கூடாரம் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதற்குக் காரணம் நாற்றுக்கு தேவையான தட்பவெட்பநிலை அளிப்பதோடு அல்லாமல் வைரஸ் நோய் பரப்பும் பூச்சிகள் நாற்றை நேரடியாகதாக்குவதை தடுக்கவும் பயன்படுகின்றது. சொட்டுநீர்ப் பாசனம் மூலம் தண்ணீரைச் சிக்கன படுத்துவதோடு, வேர் அழுகல் நோயைக் கட்டுப்படுத்துகிறது. குழித்தட்டுகளில், நன்கு பதப்படுத்தப்பட்ட போதுமான தென்னை நார்க்கழிவை நிரப்பி, 1 முதல் 2 செ.மீ ஆழத்தில் குழி உருவாக்கி, குழிக்கு ஒரு விதை என்ற அளவில் இடுவார். மீண்டும் நார்க்கழிவு மூலம் விதைகளை மூடி, பின் குழித்தட்டுகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வெளிச்சம் உட்புகாதவாறு பாலிதீன் தாள் கொண்டு ஐந்து நாள் மூடிவைப்பார். ஐந்தாம் நாள் விதை முளைக்க ஆரம்பிக்கும். அப்போது, பச்சை நிழல்வலை குடிலில் வைப்பார். இரண்டு நேரம், தண்ணீர் தெளித்து கவனமாகப் பாதுகாப்பார். குழித்தட்டு முறையில் உற்பத்தி செய்த தக்காளியை 25 முதல் 30 நாள்களிலும், மிளகாய் மற்றும் கத்திரி நாற்றுக்களை 35 முதல் 40 நாள்களிலும் நடவு செய்யலாம். இம்முறை மூலம் நாற்றின் வளர்ச்சி நேரம் குறையப்படுகிறது. இம்முறை மூலம் சீரான நாற்று வளர்ச்சி மற்றும் வேர் வளர்ச்சி பெறப்படுகின்றன.

குழித்தட்டு நாற்றங்கால்
குழித்தட்டு நாற்றங்கால்

இவர்களது குழித்தட்டு நாற்றங்கால் மூலம் தக்காளி ஒரு ஏக்கருக்கு நடவு செய்யத் தேவையான 23,000 நாற்றுகளை உற்பத்தி செய்ய 165 குழித்தட்டுகளிலிருந்தும், கத்தரி ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய தேவையான 15,000 நாற்றுகளை உற்பத்தி செய்ய 108 குழித்தட்டுகளிலிருந்தும் மற்றும் மிளகாய் ஒரு ஏக்கருக்கு நடவு செய்ய தேவையான 23,000 நாற்றுகளை உற்பத்தி செய்ய 165 குழித்தட்டுகளிலிருந்தும் பெறப்படுகின்றன. சந்தையின் காய்கறி நாற்று விலையை (தக்காளி - 50பைசா, மிளகாய் - 1ரூபாய், கத்திரி - 50பைசா) நோக்கும்போது, இவருடைய நாற்றங்காலில், நாற்று விலை (தக்காளி - 40பைசா, மிளகாய் - 70பைசா, கத்தரி - 40 பைசா) மிகவும் குறைவு. வருமானத்துக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் தரமான நாற்றுகளை வழங்குவதற்காகவும் இந்தக் குழித்தட்டு நாற்றங்கால் பயன் பெற்றுக்கொண்டு வருகிறது.

நம்முடைய தமிழகத்தின் வீட்டுக் காய்கறி உற்பத்தி திட்டத்துக்கு ரூபாய் 3 கோடி நிதி உதவி இப்போது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நாம் உண்ணுகின்ற பல காய்கறிகள் பூச்சி கொல்லி மருந்துகளால் ஊட்டச்சத்து இல்லாத காய்கறிகள் ஆகும். இந்த நிலையில் அனைத்துக் காய்கறி விவசாயிகள் மற்றும் மாடித்தோட்டம் வைப்போர், தரமான காய்கறி நாற்றுகளை உருவாக்குவதற்கும் பயனடைவதற்கும் ஊட்டச்சத்துமிகுந்த இயற்கை குழித்தட்டு நாற்றங்காலைப் பயன்படுத்தலாம்.