Published:Updated:

நஞ்சில்லாக் காய்கறியில் மதிய உணவு!

பரங்கிக்காயுடன் மாணவ, மாணவியர்
பிரீமியம் ஸ்டோரி
News
பரங்கிக்காயுடன் மாணவ, மாணவியர்

கலக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்!

இயற்கை

விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களால், மனித ஆரோக்கியம் பெரும் சிக்கலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

‘இப்படியே போனால், அடுத்த சந்ததியினரின் உடலும் உள்ளமும் கெட்டுவிடும்’ என்று யோசித்து, தனது பள்ளி மாணவர்கள் அனைவரையும் இயற்கை விவசாயிகளாக மாற்றி வருகிறார் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர். 85 குடும்பங்கள் வசிக்கும் சின்னஞ் சிறிய அந்த கிராமத்து மனிதர்களின் வேலை மரம் வெட்டுவது. மாணவர்களைக் கொண்டே அதற்கும் தடைபோட வைத்ததோடு, பள்ளி வளாகம் முழுக்க இயற்கைக் காய்கறித் தோட்டத்தை அமைத்திருக்கிறார். அதில் விளையும் காய்கறிகளைக்கொண்டு மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்க ஏற்பாடு செய்திருக்கிறார். கூடுதலாகக் கிடைக்கும் காய்கறிகளை அந்த கிராம மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து, அவர்களையும் இயற்கை விவசாயிகளாக மாற்றிவருகிறார் குமாரவேல் என்ற அந்தத் தலைமை ஆசிரியர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நஞ்சில்லாக் காய்கறியில் மதிய உணவு!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திலிருக்கிறது அய்யம்பாளையம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் குமாரவேல். அந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் 53 மாணவர்களையும் இயற்கை விவசாயிகளாக்கி, அசத்தியிருக்கிறார். நாம் பள்ளிக்குச் சென்றபோது, காய்கறித் தோட்டத்தில் விளைந்த சுரைக்காய், பரங்கிக்காய், அவரை, பச்சை மிளகாய், கத்திரி, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை மாணவர்கள் அறுவடை செய்து கொண்டிருந்தனர். இன்னும் சில மாணவர்கள், காய்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். மாணவர்கள் செய்யும் பணிகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்த குமாரவேலிடம் பேசினோம்.

“நான் இந்தப் பள்ளிக்கு வந்தபோது ஒரே ஒரு கட்டடம் மட்டும் இருந்துச்சு. பள்ளியைச் சுற்றி புதர்கள் மண்டி, காடுபோல் இருந்துச்சு. 43 மாணவர்கள் அப்போ படிச்சிக்கிட்டு இருந்தாங்க. ‘பள்ளிச் சூழலை முதல்ல மாத்தணும்’னு முடிவு பண்ணினேன். ஊர் மக்களை அழைத்துப் பேசி, பள்ளியைச் சுற்றி இருந்த புதர்களை அகற்றினோம். பிறகு, பள்ளியோட ரெண்டு ஏக்கர் இடத்தைக் கண்டுபிடிச்சோம். அங்கே மாணவர்கள் மூலமா இயற்கை முறையிலான உயிர்வேலி அமைச்சோம். தொடர்ந்து மாணவர்களுக்கு இயற்கைச் சூழல் பற்றியும், மரங்கள் வளர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். உடனே பல மாணவர்கள், ‘எங்க பெற்றோர்கள் புதர்களை அகற்றும் வேலைக்குப் போறாங்க. அப்படியே மத்த மரங்களையும் வெட்டுறாங்க’னு சொன்னாங்க. மாணவர்கள் மூலமாகவே அவர்களின் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மரம் வெட்டுவதைத் தடுத்தோம். பல மாணவர்கள், ‘இனி மரம் வெட்டக் கூடாதுனு எங்க பெற்றோர்கள்கிட்ட சத்தியம் வாங்கியிருக்கோம்’னு சொன்னப்போ எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு’’ என்றவர், காய்கறித் தோட்டத்துக்குள் நம்மை அழைத்துச் சென்றார்.

பள்ளியைச் சுற்றி புதர்கள் மண்டி, காடுபோல் இருந்துச்சு. பரங்கிக்காய் பொரியல், சுரைக்காய்க் கூட்டு, கத்திரிக்காய்க் கூட்டுனு பல சத்துணவுகளைச் சமைச்சு கொடுக்குறோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
பரங்கிக்காயுடன் மாணவ, மாணவியர்
பரங்கிக்காயுடன் மாணவ, மாணவியர்

“சரக்கொன்றை, பூவரசு, வேம்பு, புங்கன்னு 50 மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க ஆரம்பிச்சோம். தண்ணீர் பிரச்னையா இருந்துச்சு. கிருஷ்ணராயபுரம் பி.டி.ஓ மூலமா பள்ளியில போர்வெல் ஒன்றை அமைச்சோம். கரூர் சட்டப்பணிகள் இயக்கம் மூலமா 500 மரக்கன்றுகளை வாங்கி, 165 மரக்கன்றுகளைப் பள்ளி வளாகத்தில் நட்டோம். மீதமுள்ள மரக்கன்றுகளை கிராம மக்களுக்குக் கொடுத்து, அவங்களையும் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினோம். இந்தச் சூழல்லதான் ‘எங்க தாத்தா, பாட்டியெல்லாம் 80, 90 வயசுல ஜம்முனு இருக்காங்க. ஆனா, இப்போ சின்ன வயசுலேயே பலர் இறந்துபோறாங்களே... அது ஏன் சார்?’னு மாணவர்கள் கேட்டாங்க. ‘விஷமான உணவைச் சாப்பிடுவதுதான் அதுக்குக் காரணம். அந்தக் காலத்து ஆட்கள் இயற்கை முறையில் உணவுப் பொருள்களை விளைவிச்சு சாப்பிட்டாங்க. அதனால ஆரோக்கியமா இருந்தாங்க’னு சொன்னேன். அதைக் கேட்ட மாணவர்கள், ‘நாமும் இயற்கை முறையில் காய்கறிச் சாகுபடி பண்ணுவோமா சார்?’னு ஆர்வமாகக் கேட்டாங்க. உடனே பள்ளி வளாகத்தில் காலியாகக் கிடந்த முக்கால் ஏக்கர் இடத்துல இயற்கை முறையில காய்கறித் தோட்டம் அமைச்சோம்.

பள்ளி வளாகத்தில் விளைந்த சுரைக்காயுடன்
பள்ளி வளாகத்தில் விளைந்த சுரைக்காயுடன்

பரங்கி, தக்காளி, வெண்டை, பச்சை மிளகாய், குண்டு மிளகாய், அவரை, நீளச்சுரை, குண்டுச்சுரை, வெள்ளரி, புடலங்காய், மிளகு, தக்காளி, கீரைனு பல பாரம்பர்ய ரகக் காய்கறிகளை இயற்கை முறையில் விளையவெச்சோம். ஊர் மக்கள் கொடுக்கும் தொழுவுரம், வேளாண்மைத்துறையில வாங்குற இயற்கை உரத்தை மட்டுமே போடுறோம். பூச்சித் தொல்லையைத் தடுக்க வெறும் தண்ணியில மஞ்சள்தூளைக் கரைச்சு தெளிப்போம். சமையல் அறையில பாத்திரம் கழுவுற தண்ணி, மாணவர்கள் கைகழுவுற தண்ணி எதையும் வீணாக்காம காய்கறித் தோட்டத்துக்குப் பயன்படுத்துறோம். இங்கே விளையும் காய்கறிகள் மூலமா தினமும் பரங்கிக்காய் பொரியல், சுரைக்காய்க் கூட்டு, கத்திரிக்காய்க் கூட்டு, பரங்கிக்காய் அல்வானு பல சத்துணவுகளைச் சமைச்சுக் கொடுக்குறோம்.

நஞ்சில்லாக் காய்கறியில் மதிய உணவு!

‘இந்தச் சுவை நல்லாயிருக்கு சார்... நாங்க இதுவரைக்கும் இப்படிச் சாப்பிட்டதேயில்லை’னு மாணவர்கள் ஆர்வமாகிட்டாங்க. இங்கே அதிகமா இருக்குற காய்கறிகளை கிராம மக்களுக்கும் கொடுத்தோம். ‘இது நல்லா ருசியா இருக்கு’னு அவங்களும் சொன்னாங்க. பல பேரு எங்ககிட்ட காய்கறி விதைகளை வாங்கிட்டுப் போய், அவங்களும் இயற்கை முறையில காய்கறித் தோட்டம் அமைக்க ஆரம்பிச்சாங்க. போன கோடைக்காலத்துல தண்ணீர் பற்றாக்குறை ஆகிப்போச்சு. ஊர் மக்களே ரெண்டு தடவை லாரியில தண்ணி கொண்டு வந்து ஊத்தி, மரக்கன்றுகளையும், காய்கறித் தோட்டத்தையும் பாதுகாத்தாங்க. இந்தக் காய்கறித் தோட்டத்துல விளைஞ்ச காய்கறிகளைவெச்சு பொங்கல் நாள்ல, `சமத்துவப் பொங்கல்’ கொண்டாடினோம். கிராம மக்கள் எல்லாரும் வந்து காய்கறிகளை அறுவடை செஞ்சு, பொங்கல், காய்கறி கூட்டு தயாரிச்சாங்க. இப்போ காய்கறித் தோட்டத்தை மாணவர்களே பராமரிச்சுட்டு வர்றாங்க. மாணவர்கள் பயன்படுத்துற கழிவறைத் தண்ணியைச் சுத்திகரிச்சு, காய்கறித் தோட்டத்துக்குப் பயன்படுத்தலாமானு ஆய்வு பண்ணிக்கிட்டு இருக்கோம்’’ என்றவர் நிறைவாக,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரவிச்சந்திரன், மோகனா
ரவிச்சந்திரன், மோகனா

“இந்த கிராமத்துல இருக்கிற 85 வீடுகள்லயும் மாணவர்கள் மூலமா இயற்கைக் காய்கறித் தோட்டம் அமைக்கப்போறோம். ‘நஞ்சில்லா உணவு... அதுவே எம் கனவு’னு எங்க மாணவர்கள் செயல்படுறாங்க. காய்கறிகளைத் தவிர, கொய்யா, பாதாம், மா, வாழைனு பழ மரங்களையும் வளர்த்துட்டுவர்றோம். மாணவர்களுக்கு முதலில் போதிக்கப்பட வேண்டியது இது போன்ற ‘வாழ்வியல் கல்வி’தான். அதனாலதான் மாணவர்களை இயற்கை விவசாயிகளா மாத்தியிருக்கோம். மத்தபடி அவர்களுக்கு ரெண்டு ஸ்மார்ட் வகுப்புகள் மூலமா தரமான கல்வியையும் தருகிறோம்” என்றார் புன்னகையோடு!

தண்ணீர் ஊற்றும் பணி
தண்ணீர் ஊற்றும் பணி

காய்கறி அறுவடையில் முனைப்பாக இருந்த மாணவர்களான ரவிச்சந்திரன் மற்றும் மோகனாவிடம் பேசினோம். ``இயற்கையைப் பத்தி எங்க சார் சொல்லிக்கிட்டே இருப்பாரு. அதனால இயற்கையைக் காக்க மரங்களையும், எங்களைக் காக்க இயற்கைக் காய்கறித் தோட்டத்தையும் அமைச்சிருக்கோம். இங்கே விளையுற சத்தான, விஷமில்லாத காய்கறிகளைத்தான் மதிய உணவா சாப்பிடுறோம். தினமும் அரை மணி நேரம் இந்தக் காய்கறித் தோட்டத்தைப் பராமரிக்கிற வேலையைப் பார்க்கிறோம்’’ என்றனர். வாழ்த்துகள் செல்லங்களா..!

நஞ்சில்லாக் காய்கறியில் மதிய உணவு!
இயற்கை விழிப்புணர்வு பிரசாரம்
இயற்கை விழிப்புணர்வு பிரசாரம்

தொடர்புக்கு: குமாரவேல் செல்போன்: 98429 33574.