Published:Updated:

``நஷ்டத்தை ஏத்துக்கிறேன்; 40 ரூபாய் பழம் 10 ரூபாய்தான்'' - பட்டதாரி விவசாயியின் மனிதநேயம்! #Video

சுரேஷ்
சுரேஷ்

``இனி யோசிக்க நேரமில்லைனு உடனே மூணு டன் பழங்களை அறுவடை செஞ்சோம். மூணு டெம்போவை வாடகைக்குப் பிடிச்சு, வீதி வீதியா போய் விற்பனையில் இறங்கினேன்."

இயற்கை சீற்றங்கள், பேரிடர் எது வந்தாலும், முதல் பாதிப்பு விவசாயிகளுக்குத்தான். அதற்கு இந்தக் கொரோனா பாதிப்பும் விதிவிலக்கல்ல. தற்போதைய ஊரடங்கு காலத்தால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விளைச்சல் நன்றாக இருந்தாலும், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் எப்போதும் இன்னல்களையே எதிர்கொண்டுவரும் விவசாயிகளுக்கு, தற்போது ஏற்பட்டிருப்பது மீள முடியாத சோகம்.

அறுவடை வேலையில் சுரேஷ்
அறுவடை வேலையில் சுரேஷ்

கோடைக்கால பயிர்களைப் பயிரிட முடியாமல் தவிக்கும் விவசாயிகள் ஒருபுறம். விளைந்த பயிர்களை அறுவடை செய்ய வேலையாட்கள் இல்லாமலும் அறுவடை செய்தவற்றை விற்க முடியாமலும் என, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தவித்துக்கொண்டிருக்கின்றனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதி விவசாயிகள் செண்டுமல்லிப் பூக்களை அறுவடை செய்து, விற்பனைசெய்ய முடியாமல், டிராக்டரைக் கொண்டு நிலத்திலேயே உழவு செய்துவிட்ட காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு அரங்கேறின. அறுவடை செய்த வாழைப் பழங்களை விற்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் வேதனைப்பட்ட கொங்கு மண்டல விவசாயிகள் பலர் பழங்களைக் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கொடுத்த நிகழ்வும் நடந்துவருகிறது.

இந்தச் சூழலில், ஆசிரியர் பணியுடன் விவசாயத்தையும் மேற்கொண்டுவரும் ஒரு பட்டதாரி விவசாயியை, ஊரடங்குக் காலகட்டம் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி இறுதியில் வியாபாரியாக மாற்றியிருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். மொரப்பூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். குடும்பப் பாரம்பர்யத் தொழிலான விவசாயத்தைக் கைவிட மனமில்லாமல், பகுதிநேரமாக விவசாயம் செய்துவருகிறார். அந்தப் பகுதி வானம் பார்த்த பூமி. மழையை மட்டுமே நம்பி மானாவாரி விவசாயம் நடக்கும் அந்த ஊரில், தனது 9 ஏக்கர் நிலத்தில் சூழலுக்கு ஏற்ப குறிப்பிட்ட பரப்பளவில் மட்டுமே விவசாயம் செய்துவருகிறார் சுரேஷ்.

அறுவடை வேலையில் சுரேஷ்
அறுவடை வேலையில் சுரேஷ்

ரசாயன உரங்கள் எதுவும் சேர்க்காமல் இயற்கை இடுபொருள்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்துவருகிறார். தற்போதைய கோடைக்காலப் பயிரான முலாம் பழத்தைப் பயிரிட்டவர் எதிர்பார்த்த விளைச்சல் கிடைத்த மகிழ்ச்சியில் அறுவடையைத் தொடங்கும் நேரத்தில்தான், கொரோனாவின் அச்சுறுத்தல் வேகமெடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இக்கட்டான சூழலிலும் சமயோசிதமாக முடிவெடுத்தவர், வியாபாரியாக மாறி 11 டன் முலாம் பழங்களை விற்பனை செய்துவிட்டார். லாபம் சுத்தமாகக் கிடைக்காவிட்டாலும், விளைபொருள் வீணாக்காத திருப்தி சுரேஷை மகிழ்வித்திருக்கிறது. 12 ஆண்டுகளாக விவசாயம் செய்துவந்தாலும், கடந்த இரண்டு வாரக் காலகட்டம் சுரேஷுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவங்களைக் கொடுத்திருக்கிறது. காலைப் பொழுதில் முலாம் பழங்களை அறுவடை செய்துகொண்டிருந்தவரிடம் பேசினோம்.

"என் தம்பியும் நானும் யோசிச்சு, ஃபேஸ்புக்ல பதிவிட்டோம். அதைப் பார்த்துட்டு பல மாவட்டங்கள்ல இருந்தும் பழங்களை வாங்கிக்கிறோம்னு பலர் கேட்டாங்க. ஆனா, போக்குவரத்துத் தடையால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாம போச்சு. இனி யோசிக்க நேரமில்லைனு உடனே மூணு டன் பழங்களை அறுவடை செஞ்சு விற்க ஆரம்பிச்சுட்டோம்."
சுரேஷ்

``பாரம்பர்ய விவசாயக் குடும்பம். பெற்றோருக்கு வயசாகிடுச்சு. அதனால பாரம்பர்ய விவசாயத் தொழில் அழிஞ்சுடக் கூடாது, ஆசிரியர் வேலையுடன் விவசாயத்தையும் பகுதிநேரமா பாத்துக்கிறேன். தினமும் காலையிலயும், ஸ்கூல் போய்ட்டு வந்து சாயந்திரமும், விடுமுறை நாள்கள்லயும் மட்டுமே விவசாயத்துக்குனு நேரம் செலவிடுவேன். முந்தைய காலங்கள்ல மா, தென்னை, கரும்பெல்லாம் பயிரிட்ட நிலையில, இப்போ தண்ணிப் பிரச்னையால விவசாயம் செய்றதே பெரும்பாடா இருக்கு. ஒரு கிணறு இருந்தாலும் அதுலயும் தண்ணி இல்லை. சுமாரா கிடைக்கிற ஆழ்துளைக் கிணத்து தண்ணிய வெச்சுதான் இப்போதைக்கு விவசாயம் செய்றேன். தண்ணி செலவைக் குறைக்கவும், களைகளைக் கட்டுப்படுத்தவும் மல்சிங் ஷீட் போட்டிருக்கேன்.

சுரேஷ்
சுரேஷ்

சில ஆண்டுகளாவே சாணம், இலைத் தலைகளை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்றேன். போன வருஷம் தர்பூசணி பயிரிட்ட நிலையில, கடந்த டிசம்பர் மாசக் கடைசியில ஓர் ஏக்கர்ல மட்டும் முதன் முறையா முலாம் பழம் சாகுபடி செஞ்சேன். வழக்கம்போல தண்ணிப் பிரச்னையைத் தவிர வேறு எந்தச் சிக்கலும் ஏற்படலை. நல்லா பராமரிச்சு விளைச்சலும் நல்லா இருந்தா ஓர் ஏக்கருக்கு 15 டன்னுக்கும் அதிகமாவே முலாம் பழம் கிடைக்கும்” என்று இடைவெளிவிடும் சுரேஷுக்கும் முலாம் பழம் சாகுபடியில் நல்ல மகசூல் கிடைத்திருக்கிறது. ஆனால், அறுவடை செய்வதில்தான் பெரும் இன்னல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

``விளைச்சல் நல்லா இருந்ததால சராசரியா 13 டன் மகசூலுக்கு குறையாம கிடைக்கும். காய்களும் நல்லா தரமா இருந்ததால டன் 25,000 - 30,000 ரூபாய்க்கு விலைபோகும்னு எதிர்பார்த்தேன். அதன்படி நடந்திருந்தா செலவுகள்போக சராசரியா ரெண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைச்சிருக்கும். எல்லா விவசாயிகளைப்போல சந்தைப்படுத்துதல்தான் எனக்கும் சவால். நேரப் பிரச்னையால் இடைத்தரகர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள்கிட்ட வித்துடுவேன். அவங்க என் நிலத்துக்கே வந்து பழங்களை மொத்தமா வாங்கிட்டுப்போயிடுவாங்க. அதனால விற்பனைக்குச் சிக்கல் இருக்காது. ஓரளவுக்கு லாபமும் இருக்கும்.

அறுவடை வேலையில் சுரேஷ்
அறுவடை வேலையில் சுரேஷ்

மூணு மாசப் பயிரான இது, கடந்த மார்ச் மாசம் மூணாவதுவாரத்துல அறுவடைக்குத் தயாரானது. அந்த நேரத்துல நல்லா திரண்ட நிலையிலும், காய் நிலையிலும், பிஞ்சு நிலையிலயும் மூணு விதத்துல காய்கள் இருந்துச்சு. அதனால, ஒரே நேரத்துல எல்லாப் பழங்களையும் அறுவடை செஞ்சு விற்க முடியாது. தினமும் கொஞ்சமா அல்லது ரெண்டு நாளைக்கு ஒருமுறை டன் கணக்குல நல்லா திரண்டு வளர்ந்தப் பழங்களைத்தான் பறிப்போம்.

அதன்படி கடந்த ரெண்டு வாரத்துக்கு முன்பு 3 டன் பழங்கள் நல்லா வளர்ந்து இருந்ததால அதை முதல்கட்டமா விற்க நினைச்சேன். அந்த நேரத்துல ஊரடங்கு உத்தரவை அறிவிச்சுட்டாங்க. என்ன பண்றதுனு தெரியாம குழப்பத்துல இருந்தேன். முலாம் பழத்தைப் பறிச்ச சில நாள்கள்ல பயன்படுத்தலைனா வீணாகிடும். அதனால, `ஊரடங்குக் காலத்துல விற்க முடியாமப் போயிடுமோ’ன்னு காய்களை வாங்க முன்வந்த சில வியாபாரிகள்கூட திடீர்னு பின்வாங்கிட்டாங்க. என் தம்பியும் நானும் யோசிச்சு, ஃபேஸ்புக்ல பதிவிட்டோம்.

 சுரேஷின் தம்பி
சுரேஷின் தம்பி

அதைப் பார்த்துட்டு பல மாவட்டங்கள்ல இருந்தும் பழங்களை வாங்கிக்கிறோம்னு பலர் கேட்டாங்க. ஆனா, போக்குவரத்துத் தடையால் அதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாம போச்சு. இனி யோசிக்க நேரமில்லைனு உடனே மூணு டன் பழங்களை அறுவடை செஞ்சோம். மூணு டெம்போவை வாடகைக்குப் பிடிச்சு தம்பியுடன் சில வேலையாள்களைப் பயன்படுத்தி நேரடியா நானே வீதிவீதியா போய் விற்பனையில் இறங்கினேன்.

ஆசிரியரான நான் விவசாயம் செஞ்சாலும், மக்கள்கிட்ட நேரடியா விற்பனை செய்தது புது அனுபவம். இதுக்காக நான் எந்தக் கூச்சமும் பார்க்கலை. விவசாயம் செய்றது எவ்வளவு சவாலானதுனு அனுபவத்தில் உணர்ந்ததால, விளைபொருளை வீணாக்காம மக்கள்கிட்ட கொண்டுபோய் சேர்க்கிறது மட்டும்தான் என் ஒரே நோக்கமா இருந்துச்சு. அதனால, சராசரியா கிலோ 40 – 50 ரூபாய்க்கு விற்கக்கூடிய பழத்தை வெறும் 10 ரூபாய்க்கு வித்தேன். ரொம்பவே தரமான பழங்களை மட்டும்தான் 12 - 15 ரூபாய்க்குக் கொடுத்தேன்” என்கிறார்.

கொரோனாவால எல்லாத் துறையினருக்கும் பெரிய அளவுல பாதிப்பு ஏற்பட்டிருக்கு. இந்த யதார்த்தத்தை உணர்ந்து மனம் துவண்டுபோகாம, நல்ல தரமான பொருளை வீண் செய்யாம குறைந்த விலையில மக்களுக்குக் கொடுத்த திருப்தி எனக்குக் கிடைச்சிருக்கு.
சுரேஷ்

தற்சமயம் தினமும் 750 கிலோ பழங்களை அறுவடை செய்து வருகிறார். இதுவரை 11 டன் பழங்களை விற்பனை செய்திருக்கிறார். காவல்துறையினரின் அனுமதியுடன், கடந்த பத்து நாள்களாக நேரடி விற்பனையில் ஈடுபட்டுவருகிறார். அறுவடை செய்த முலாம் பழங்களை டெம்போவில் ஏற்றும் பணிகளை முடித்ததும் மீண்டும் தொடர்ந்தவர், முலாம் பழ அறுவடையில் கிடைத்த வருமானம் குறித்துப் பேசினார்.

சுரேஷ்
சுரேஷ்

``உழவு, விதை, வேலையாள் செலவு, மல்சிங் ஷீட் உட்பட எல்லா வகையிலயும் 80,000 ரூபாய் செலவாச்சு. இப்போ பழத்தை விற்க வாடகைக்கு மூணு டெம்போ பயன்படுத்தறேன். அதுக்கு ஒரு டிரைவருக்கு ஒருநாளைக்கு 700 ரூபாய் கூலியும், டீசலுக்கு ஆயிரம் ரூபாயும் கொடுக்கறேன். ஓர் ஆளுக்கு 1,700 ரூபாய் வீதம் மூணு பேருக்குச் சேர்த்து 5,100 ரூபாய் செலவாகுது. இதுவே மொத்தம் 14 நாளைக்குக் கணக்குப்போட்டா 71,400 ரூபாய் செலவு. ஓர் ஆளுக்கு ஒருநாள் கூலியா 300 ரூபாய் வீதம் டெம்போவில் இருந்தபடியே செய்ற விற்பனைக்கு அஞ்சு பேரைப் பயன்படுத்தறேன். 14 நாளுக்கு அவங்களுக்கான செலவு 21,000 ரூபாய். முலாம் பழத்தை விற்கிறதுக்கு மட்டுமே 92,000 ரூபாய் செலவு. இந்த விற்பனை மற்றும் பயிர் சாகுபடிச் செலவுனு மொத்தம் 1,72,000 ரூபாய் செலவாகியிருக்கு.

அதேசமயம் இப்போ விற்பனையில ஒரு கிலோ சராசரியா 12 ரூபாய்னு வெச்சுகிட்டாகூட, டன்னுக்கு 12,000 ரூபாய்தான் கிடைக்குது. இதுவரை 11 டன் பழங்களுடன், அடுத்த சில நாள்கள்ல பறிக்கப்போற மூணு டன் பழங்களையும் சேர்த்தாகூட 14 டன்னுக்கு 1,68,000 ரூபாய்தான் கிடைக்கும். எனக்கு நாலாயிரம் நஷ்டம்தான். கூட்டிக்கழிச்சுப் பார்த்தா இந்தத் தொகையைக்கூட ஈடுசெய்திடலாம். இந்த விற்பனை கணக்குல என்னுடைய மற்றும் தம்பியின் உழைப்பைச் சேர்க்கலை.

அறுவடை வேலையில் சுரேஷ்
அறுவடை வேலையில் சுரேஷ்

ஓரளவுக்கு லாபம் கிடைச்சாதான், எந்த விவசாயியா இருந்தாலும் அடுத்த பயிரை நம்பிக்கையோடு சாகுபடி செய்வாங்க. ஆனா, எனக்குப் பெரிசா வருத்தமில்லை. இன்னைக்கு கொரோனாவால எல்லாத் துறையினருக்கும் பெரிய அளவுல பாதிப்பு ஏற்பட்டிருக்கு.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து மனம் துவண்டுபோகாம, நல்ல தரமான பொருளை வீண் செய்யாம குறைந்த விலையில மக்களுக்குக் கொடுத்த திருப்தி எனக்குக் கிடைச்சிருக்கு. நிலைமை சரியானதுக்குப் பிறகு மீண்டும் வேறு ஒரு பயிரை நல்ல முறையில் சாகுபடி செய்வேன்” என்று உற்சாகமாகக் கூறும் சுரேஷ் விற்பனைக்குச் செல்ல ஆயத்தமானார்.

அடுத்த கட்டுரைக்கு