Published:Updated:

ஒரு லிட்டர் ஆட்டுப்பால் ரூ. 185 - அமெரிக்காவிலும் ஆடு, மாடு வளர்ப்பில் அசத்தும் நம்மூர் விவசாயி!

காய்கறித் தோட்டத்தில் திருமலைச்செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
News
காய்கறித் தோட்டத்தில் திருமலைச்செல்வன்

அக்கம் பக்கம்

மிழகத்தைச் சேர்ந்த திருமலைச்செல்வன் அமெரிக்காவில் வசிக்கிறார். டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள அவரது பண்ணையில் காய்கறிச் சாகுபடியும் கால்நடை வளர்ப்பும் சிறப்பாக நடைபெறுகிறது. மதிப்புக்கூட்டல் மூலம் நிறைவான வருமானம் ஈட்டும் திருமலைச்செல்வனிடம் வீடியோ காலில் உரையாடினோம். தனது விவசாயப் பணிகள் குறித்து மகிழ்ச்சியுடன் பேசினார்.
ஆட்டுடன்
ஆட்டுடன்

“தென்காசி மாவட்டம் சங்கரன்கோயில் என் பூர்வீகம். இயற்கை விவசாயியான தாத்தா பலவிதப் பயிர்களைச் சாகுபடி செய்தார். பள்ளி விடுமுறை நாள்கள்ல அவர் வீட்டுக்குப் போய் விவசாய வேலைகளைக் கவனிப்பேன். அப்பா அரசுப் பணியில் இருந்தார். அம்மா ஆசிரியை. அதனால, எங்க வீட்டுல யாரும் விவசாயம் செய்யலை. மதுரையில இன்ஜி னீயரிங் படிச்சுட்டு, கர்நாடக மாநிலத்துல எம்.இ முடிச்சேன். பிறகு, சிலகாலம் இந்தியாவில் வேலை செஞ்ச நிலையில், 1997-ல் அமெரிக்கா வந்தேன். தொடர்ந்து பல ஐ.டி நிறுவனங்கள்ல வேலை செய்ததுடன், க்ரீன் கார்டு வாங்கினேன். இதுக்கிடையே ஒருமுறை மலை வாசஸ்தலத்திலிருந்த ஓர் ஆசிரமத்துக்குப் போனேன்.

மனச்சுமைக்கு மருந்து விவசாயம்

வெளியிலிருந்து எந்தப் பொருள்களையும் வாங்காம, இயற்கை விவசாயம், சூரிய மின்சக்தி, குடிநீருக்கு மழைநீர்னு முழுமையான தற்சார்பு வாழ்க்கை முறையை அங்கு கடைப்பிடிச்சாங்க. அதைப் பார்க்க ஆச்சர்யமா இருந்தது. அப்போ நான் வசிச்ச கொலராடோ மாகாணத்துல சின்ன அளவுல தோட்டம் அமைச்சேன். பிறகு, விவசாய ஆர்வம் அதிகரிக்கவே, டெக்ஸாஸ் மாகாணத்துக்குக் குடியேறினேன். தோட்டத்துடன் இருந்த அந்த வீட்டில் எங்களுக்குத் தேவையான காய்கறிகளை விளைவிச்சோம். நிறைய அனுபவங்கள் கிடைச்சுது. ஆரம்பத்துல அமெரிக்கா வாழ்க்கை கலர்ஃபுல்லாதான் இருந்துச்சு. நான் வேலை செஞ்ச கம்பெனியில சீனியரா உயர்ந்த பிறகு, சம்பளத்துடன் வேலைப்பளுவும் கூடுச்சு. ஆனா, நேரமின்மையால் தூக்கம், தனிப்பட்ட சந்தோஷங்கள் படிப்படியா குறைஞ்சது” என்றவரின் மனச்சுமைகளுக்கு விவசாயமே வடிகாலாக இருந்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
காய்கறித் தோட்டத்தில் திருமலைச்செல்வன்
காய்கறித் தோட்டத்தில் திருமலைச்செல்வன்

“டெக்ஸாஸ்ல எங்க வீட்டுக்குப் பக்கத்துல 89 வயசான இயற்கை விவசாயி இருக்கார்.

அவர் இந்த வயசுலயும் ஆர்வமா விவசாயம் செய்றார். எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் தோட்டத்துக்குப் போய் நிறைய விஷயங்களைக் கத்துப்பேன். தவிர, உள்ளூர்ல நடக்கும் விவசாயப் பயிற்சிகள்லயும் கலந்து கிட்டேன். சொந்த ஊருக்கு வந்து விவசாயம் செய்யலாம்னு நினைச்சேன். என் மனைவியின் வேலை, மகள்களின் படிப்பு அமெரிக்காவில் தொடர்வதால் அந்த எண்ணம் சாத்திய மாகலை. அமெரிக்காவுலயே விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். எட்டு மாதம் தேடி, இப்போ வசிக்கிற நிலத்தைக் கண்டுபிடிச்சேன். நம்மாழ்வார் ஐயா சொன்ன மாதிரி, தோட்டத்தைச் சுத்தி நாலு பக்கமும் உயிர்வேலி மரங்கள் நிறையவே இருந்துச்சு. இது பல வருஷமா மாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்ந்த இடம். சில அடிக்கு மண் தோண்டியதுமே மண் புழுக்கள் அதிகமிருந்துச்சு. 2016-ம் ஆண்டு இந்த நிலத்தை வாங்கினேன்.

‘‘வாரத்துல அஞ்சு நாள் முழுக்க பண்ணை வேலைகளைக் கவனிச்சுப்பேன். சனி, ஞாயிறுகளில் விற்பனைக்குப் போயிடுவேன்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முழுநேர விவசாயி

டெக்ஸாஸ் மாகாணத்தில் டாலஸ் (Dalas) பக்கத்திலிருக்க லூகஸ் (Lucas) என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறேன். வீட்டிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காம்பெல் (Campbell) பகுதியில் பண்ணை இருக்கு. இது 33 ஏக்கர் நிலம். முதல்கட்டமா சில ஏக்கர்ல மட்டும் காய்கறிகளைப் பயிரிட்டேன். மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தினாலும், கோடைக்காலத்தில் நீர் தேவையைச் சமாளிக்க ஓர் ஆழ்துளைக் கிணறும் அமைச்சேன். வேலைப்பளுவால் விவசாய வேலைகளை முழுமையா செய்ய முடியலை. எனவே, ஒன்றரை வருஷத்துக்கு முன்ன, வேலையை விட்டுட்டு முழுநேர விவசாயி ஆகிட்டேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறும் திருமலைச்செல்வன், தற்போதைய விவசாய முறைகள் குறித்துப் பேசினார்.

பண்ணையில் திருமலைச்செல்வன்
பண்ணையில் திருமலைச்செல்வன்

கலப்புப் பண்ணை

“அமெரிக்காவுல இயற்கை விவசாய விளைபொருள்களுக்கு அதிக வரவேற்பு இருக்கு. வெண்டை, வெள்ளரி, தக்காளி, கத்திரி, கொத்தமல்லி, புடலை, சுரைக்காய், அவரை, பாகல், புதினா, பூசணி, செடி முருங்கை, அகத்தி, கறிவேப்பிலை, கீரை வகைகள் போன்ற காய்கறிப் பயிர்களை 5 ஏக்கரில் சாகுபடி செய்கிறேன். மழைக்காலத்துல கேரட், பீட்ரூட் உள்ளிட்ட சீஸன் பயிர்களையும் வளர்ப்பேன். தவிர, கால்நடை வளர்ப்பிலும் அதிக கவனம் செலுத்துறேன். இந்த மாகாணத்தில் பிரபலமான நாட்டுக்கோழி இனத்துல (Rhode island red, Ameraucana) 44 பெட்டை உட்பட 50 கோழிகளை வளர்க்கிறேன். இவை மூணு ஏக்கரில் வளர்கிறது. இந்த ஊர் ஆட்டு இனத்தில் (Alpine goat, Mubian goat) 15 குட்டிகள் உட்பட 25 ஆடுகள் நாலு ஏக்கரில் வளருது. சுற்றிலும் காடுகள் இருப்பதால் நரிகள் தொந்தரவு இருக்குது. அதுங்களை விரட்டியடிக்க நாலு அல்பகா (alpaca) ஒட்டக இன விலங்குகளை வளர்க்கறேன். ஜூபு (Zubu) என்ற நாட்டு இனத்தைச் சேர்ந்த ஒரு காளையும், ஆறு கறவை மாடுகளும் இருக்கு. இவை ஏழு ஏக்கர்ல மேயுது. இரவில் கொட்டகையில் அடையறது தவிர, மற்ற நேரங்கள்ல எல்லாக் கால்நடைகளும் முழுக்கவே விசாலமான மேய்ச்சல் முறையிலதான் வளருது. தண்ணீருக்கும் பிரச்னையில்லை.

ஒரு லிட்டர் ஆட்டுப்பால் ரூ. 185 - அமெரிக்காவிலும் ஆடு, மாடு வளர்ப்பில் அசத்தும் நம்மூர் விவசாயி!

பக்கத்துல இருக்க நண்பர் ஒருவர் கூடச் சேர்ந்து, அவரோட நிலத்துல மாட்டுப் பண்ணை வெச்சிருக்கோம். அதில் மேய்ச்சல் முறையில் 34 ஜெர்சி இனக் கறவை மாடுகள் இருக்கு. அவரும் நானும் பாட்னரா இணைஞ்சு பண்ணையைக் கவனிச்சுக்கிறோம். அக்கம்பக்க விவசாயிகள்கிட்ட தொழு உரத்தை வாங்கி, புதிய பயிரை நடவு செய்யுறதுக்கு முன்னாடி நிலத்தில போட்டு, உழுது விட்டுடுவேன். இதனால விளைச்சல் அதிகமா இருக்கு. கலப்புப் பயிர் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர் விதைகளை நான் பயன்படுத்துறதில்லை. காய்கறிப் பயிர்கள் விளையும் நிலத்தைச் சுத்தி ஆமணக்குச் செடிகள் வெச்சிருக்கேன். இதனால, பூச்சித் தாக்குதல் பெருசா ஏற்படறதில்லை.

குடும்பத்தினருடன்
குடும்பத்தினருடன்

அமுதக்கரைசல், ஜீவாமிர்தக்கரைசல் உள்ளிட்ட சில இயற்கை இடுபொருள்கள் மற்றும் வேப்பெண்ணெய் கரைசலைப் பயன்படுத்தறேன். பல வருஷமாவே இந்த மண் வளமாக இருக்கிறதால, காய்கறி விளைச்சல் சிறப்பா இருக்குது. மேலும், ஆடு, மாடு, கோழிகளின் கழிவுகளையும் பயிர்களுக்குப் போடுவேன். கால்நடைகளுக்கும் ஆரோக்கிய மான உணவுகளைக் கொடுக்குறதால பெருசா நோய் பாதிப்புகள் ஏற்படுறதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாட்ஸ்அப் மூலம் விற்பனை

தண்ணீர் பாய்ச்சுறது, விளைபொருள்களை விற்பனை செய்றது உட்பட பல வேலைகளையும் நானேதான் செய்யறேன். களை எடுப்பது, அறுவடை வேலைகளுக்குத்தான் வெளியாட் களைப் பயன்படுத்தறேன். ஐ.டி நிறுவனத்துல வேலை செய்யும் என் மனைவியும் ரெண்டு மகள்களும் விவசாய வேலைகள்ல எனக்கு உதவியா இருப்பாங்க. வாட்ஸ்அப் குரூப்லயே வாடிக்கையாளர்கள் அன்றாடத் தேவைக்கான காய்கறிகள், முட்டை, இறைச்சி, பால் போன்றவற்றைக் கேட்பாங்க. அதையெல்லாம் நானேதான் நேர்ல கொண்டுபோய் விற்பனை செய்றேன். வாரத்துல அஞ்சு நாள் முழுக்க பண்ணை வேலைகளைக் கவனிச்சுப்பேன். சனி, ஞாயிறுகளில் விற்பனைக்குப் போயிடுவேன். இதுக்கிடையே, புது விஷயங்களைத் தெரிஞ்சுக்க பல இயற்கை விவசாயிகளைச் சந்திச்சு அனுபவங்களைக் கத்துக்கிறேன். கடந்த ஜனவரியில தமிழ்நாட்டுல வந்து பயிற்சி எடுத்துக்கிட்டு வந்தேன்” என்றவர், வருமான வாய்ப்புகள் குறித்துப் பேசினார்.

மாட்டுடன், கோழிகளுடன்
மாட்டுடன், கோழிகளுடன்

ஆட்டுப்பால் 185 ரூபாய்

“எனக்குப் பிரதான வருமானம் பால் விற்பனையில்தான் கிடைக்குது. ஏ2 பாலைச் சுற்றுவட்டாரத்தில் உள்ள 200 வாடிக்கை யாளர்கள் தொடர்ந்து வாங்கறாங்க. இதன் மூலம் மாசத்துக்கு 6,500 டாலர் லாபம் கிடைக்கும். இந்திய மதிப்பில் 4,50,000 ரூபாய். தவிர, பால் மதிப்புக்கூட்டுப் பொருள்களான தயிர், ஐஸ்க்ரீம், வெண்ணெய் உள்ளிட்ட பொருள் களையும் விற்பனை செய்றேன். இதில் மாசத்துக்கு 30,000 ரூபாய் லாபம் கிடைக்கும். ஆட்டுப் பால்ல சீஸ் தயாரிச்சு விற்பனை செய்றேன். கறவையில் உள்ள 21 ஆடுகள்ல இருந்து தினமும் சராசரியா 50 லிட்டர் பால் கிடைக்கும். ஒரு லிட்டர் 185 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். தினமும் 9,250 ரூபாய் வீதம், மாசத்துக்கு 2,77,500 ரூபாய் கிடைக்கும். இதுல செலவுகள் போக 1,50,000 ரூபாய் லாபமா நிற்கும். என்னிடம் மாட்டுப் பால் வாங்கும் வாடிக்கையாளர்களே, கோழி மற்றும் ஆட்டிறைச்சி, கோழி முட்டை, காய்கறிகளையும் வாங்குறாங்க. இதன் மூலம் மாசத்துக்கு 10,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.

மனநிறைவுக்கு மதிப்பே இல்லை

இப்போதைக்கு மாசத்துக்குச் சராசரியா 6,40,000 ரூபாய் லாபம் வந்தாலும், போக்குவரத்து, பராமரிப்பு, வேலையாட்கள் உட்பட இதர செலவு களையெல்லாம் கழிச்சா மாசத்துக்கு 4,50,000 ரூபாய் நிகர லாபம் கிடைக்கும். இது, நான் ஐ.டி. வேலையில் இருந்திருந்தா கிடைச்சிருக்கும் வருமானத்தைவிட குறைவுதான். ஆனா, எல்லாத்தையும்விட விலை மதிப்பிட முடியாத மனநிறைவு கிடைக்குது. ‘இந்தியாவில் விளையும் காய்கறிகள், பால் போலவே உங்க விற்பனை பொருள்களின் சுவை நல்லா இருக்கு’ன்னு இந்தியாவைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் சொல்வாங்க. மகிழ்ச்சியா இருக்கும். விவசாயத்துல கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எந்தத் தொழில்லயும் நிச்சயம் கிடைக்காது” என்றார் மகிழ்ச்சியுடன்.

வாட்ஸ்அப் மூலமாகத் தொடர்புகொள்ள: 14695251913

ஓய்வெடுக்க நடமாடும் வீடு!

“என் தோட்டத்தில் வீடு இல்லை. எனவே, வீடு செட்டப்பில் கேரவன் வெச்சிருக்கேன். இதில் ஏழு பேர் தூங்கலாம். கிச்சன், வரவேற்பறை, பாத்ரூம் உள்ளிட்ட எல்லா வசதிகளும் அதுக்குள்ள இருக்கும். என் தோட்டம் இருக்கும் இடத்துல வெயில் அதிகமா இருக்கும். விவசாய வேலைகளுக்கு இடையே, இந்தக் கேரவன்ல கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக்கலாம். இதுபோன்ற கேரன்வன்களை இங்குள்ள நிறைய விவசாயிகள் வெச்சிருக்காங்க” என்கிறார் திருமலைச்செல்வன்.