Published:Updated:

`இதை வைத்து இரண்டு டீ கூட குடிக்க முடியாது!' - கிசான் சம்மான் நிதி குறித்து கொதிக்கும் விவசாயிகள்

இந்தப் பணத்தை வைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை டீ கூட குடிக்க முடியாது. ஆனால் இந்தப் பணத்தை கொண்டு விவசாயிகளின் வாழ்க்கை ஒளிமயமாக மாறிவிட்டதாக, தம்பட்டம் அடிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் நாட்டில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது, பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைத் திட்டமாகவே, மத்திய அரசாலும், பாரதிய ஜனதா கட்சியினராலும் மிகுந்த பெருமிதத்தோடு விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயின் பிறந்தநாளில் விவசாயிகளின் நம்பிக்கைக்கும் சுயமரியாதைக்கும் இத்திட்டத்தை பிரதமர் மோடி அர்ப்பணித்து, விவசாயிகளுடன் உரையாற்றுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. `9 கோடி விவசாய குடும்பங்களின் வங்கி கணக்குகளுக்கு ₹18,000 கோடி சம்மான் நிதி' என்ற வாசகம் கவர்ச்சிகரமாக பளிச்சிடுகிறது. `பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தால், நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்... இந்தத் திட்டத்தால் நாட்டின் விவசாயிகள் பெரும் பயனடைந்துள்ளார்கள்’ என ஒரு விவசாயி நெகிழ்ச்சியுடன் கூறுவது போன்ற வாசகமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் என்ன நினைக்கிறார்கள்?

அர்ப்பணிப்பு  நிகழ்வு
அர்ப்பணிப்பு நிகழ்வு

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோதே, இதற்கு விவசாயிகள் மத்தியில் பல விதமான கடும் விமர்சனங்கள் எழுந்தன. ``இது மிகவும் சொற்ப தொகை. இதனால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி உண்மையாகவே விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என நினைத்தால், விளைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க ஏற்பாடு செய்யட்டும்.

குறிப்பாக, உற்பத்தி செலவோடு, 50 சதவீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் வழங்கிய பரிந்துரையை நடைமுறைப்படுத்தினாலே போதும். ஆண்டுக்கு ₹6,000 உதவித்தொகை வழங்கும் திட்டமெல்லாம் தேவையே இல்லை" என விவசாயிகள் வலியுறுத்தினார்கள். ஆனாலும் இத்திட்டம் நாடு முழுவதும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில்தான் இத்திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள் எழுந்தன. உண்மையான விவசாயிகளுக்கு, இந்த உதவித்தொகை கிடைக்கவிலலை எனவும் விவசாயமே செய்யாதவர்களுக்கு குறுக்கு வழியில் பல கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள்.

Farmer (Representational Image, File)
Farmer (Representational Image, File)
AP Photo / Rajesh Kumar Singh

இத்திட்டத்தில் ஆட்சியாளர்களுக்கும் வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டினார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மோசடி நடைபெற்றிருப்பது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க, விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மத்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களை தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த மூன்று சட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்காகவே கொண்டு வரப்படுவதாகவும் இச்சட்டங்களால் தங்களது எதிர்காலம் பறிபோகும் எனவும் அச்சம் தெரிவித்து, தலைநகர் டில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த பல நாள்களாகப் போராடி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில்தான், கிசான் சம்மான் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து படாடோபமான விளம்பரங்களுடன், அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் துணைச் செயலாளர் சுகுமாறன், ``விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற விலை கிடைக்காததால் கடும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கிறோம். விவசாயிகளின் விலைபொருள்களுக்கு லாபகரமான விலை கிடைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத பிரதமர் மோடி, சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 உதவித்தொகை வழங்கி வருவதாக பெருமைப்பட்டு கொள்கிறார். ஆண்டுக்கு 365 நாள்... இந்த வகையில் கணக்குப் பார்த்தால், ஒரு விவசாயியின் குடும்பத்துக்கு, ஒரு நாளைக்கு 16 ரூபாய் கிடைக்கும்.

Delhi farmer protest
Delhi farmer protest
கிசான் சம்மான் திட்டம்: கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்... எப்படி நடந்தது முறைகேடு?

இந்தப் பணத்தை வைத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை டீ கூட குடிக்க முடியாது. ஆனால் இந்தப் பணத்தை கொண்டு விவசாயிகளின் வாழ்க்கை ஒளிமயமாக மாறிவிட்டதாக, தம்பட்டம் அடிக்கிறார்கள். இது மிகவும் அல்ப தொகை என்பது ஒருபுறமிருக்க, இந்தத் தொகையும் கூட, உண்மையான விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. விவசாயமே செய்யாத, விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத பலர் முறைகேடாக இந்தப் பணத்தை பெற்று வந்துள்ளார்கள். வேளாண்மைத்துறை அதிகாரிகள், அரசியல் புரோக்கர்கள் கைகோத்துதான் இந்த முறைகேட்டைச் செய்துள்ளார்கள். தமிழ்நாட்டில் மட்டுமே 400 கோடி ரூபாய் ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பது வெட்டவெளிச்சமானது. இந்திய அளவில் 1200 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. வெளியில் தெரிந்தது இவ்வளவுதான்.

இன்னும் வெளியில தெரியாதது எவ்வளவோ? நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு இதுநாள் வரையிலும் இதில் நேர்மையான, முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. உண்மையான குற்றவாளிகளை முழுமையாக களையெடுக்க எந்த ஒரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தற்போது இத்திட்டம் தொடர்பாக, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் விளம்பரம் செய்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.

சுகுமாறன்
சுகுமாறன்

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடிமையாக்கக்கூடிய மூன்று சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி, டில்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரில் போராடி வருகிறார்கள். 35 விவசாயிகள் இதுவரை உயிரிழந்துள்ளார்கள். ஆனாலும் மத்திய அரசுக்கு கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லை. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க மறுக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. விவசாயிகள் மிகுந்த அர்ப்பணிப்போடு, இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக, கிசான் சம்மான் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி படாடோபமாக நடத்தப்படுகிறது” எனக் கொந்தளித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு