Published:Updated:

``பெருங்குடவாழை நெல்லை கண்டுபிடிச்சு பரவலாக்கினோம்'' பாரம்பர்ய நெல் சாகுபடியில் பட்டதாரி பெண்!

சிவரஞ்சனி

குடவாழை, பால்குட வாழை, பனங்காட்டு குடவாழை, வெள்ளை குடவாழை என நான்கு வகை குடவாழை வகை நெல்களையும் மீட்டுள்ளோம்.

``பெருங்குடவாழை நெல்லை கண்டுபிடிச்சு பரவலாக்கினோம்'' பாரம்பர்ய நெல் சாகுபடியில் பட்டதாரி பெண்!

குடவாழை, பால்குட வாழை, பனங்காட்டு குடவாழை, வெள்ளை குடவாழை என நான்கு வகை குடவாழை வகை நெல்களையும் மீட்டுள்ளோம்.

Published:Updated:
சிவரஞ்சனி

உடல்நலம், மனநலம், சுற்றுச்சூழல், பாரம்பர்யம், பண்பாடு, விருந்தோம்பல் என ஒவ்வொன்றையும் நவீனம் என்ற பெயரில் இழந்து வருகிறோம். அதில் முதன்மையான இடத்தில் இருப்பது உடல் நலம். 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட கேழ்வரகு களியையும், பொன்னி, கவுனி அரிசி சாதத்தையும் இன்று நாம் மறந்துவிட்டோம். இதனால் விளைந்த விளைவு என்னவென்றால், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆயிரக்கணக்கான நெல் வகைகளில் பல ரகங்கள் அழிந்தேவிட்டன. வீரிய ரகங்கள் நம் வயல்களை அலங்கரிக்கின்றன. மக்கள் மருத்துவமனை வாசல்களில் காத்துக் கிடக்கின்றனர். இந்தச் சூழலில்தான் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகில் அமைந்துள்ள குறவப்புலத்தை சேர்ந்த சிவரஞ்சனி எனும் பொறியியல் பட்டதாரி பெண், பல நூறு பாரம்பர்ய நெல் வகைகளை தனது 2 ஏக்கர் வயலில் சாகுபடி செய்து மகசூல் எடுத்துள்ளார்.

வயலில் சிவரஞ்சனி
வயலில் சிவரஞ்சனி

பாரம்பர்ய நெல் சாகுபடி குறித்து அறிந்துகொள்ள அவருடைய வயலுக்குச் சென்றபோது அடுத்த நடவுக்கான ஆயத்த பணிகளில் இருந்தார். அவரிடம் பேசியபோது, ``விவசாயத்தில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை. நான் 12-ம் வகுப்பு முடித்த பிறகு பி.இ எலக்ட்ரானிக் இன்ஜினீயரிங் படிப்பை சென்னையில் படித்தேன். என் கல்லூரி மதிப்பெண்கள் நல்ல முறையில் இருந்ததால் பல முன்னணி நிறுவனங்களிலிருந்து எனக்கு வேலைக்கான வாய்ப்புகள் வந்தன. இருப்பினும் திருமணம், குழந்தைகள் என என் வாழ்வு வேறு வழியில் செல்லத் தொடங்கியது. என் கணவரோ ஒரு சித்த மருத்துவர். அவரிடம் மருத்துவம் பார்ப்பதற்கு தினமும் பல நோயாளிகள் வருவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இப்படி வருபவர்களின் நோய் வகையில் புற்றுநோய் அதிகம் இருக்கும். இத்தகைய நோயாளிகள் எங்களிடம் கூறுகையில், தங்களின் இந்த நிலைக்கு ஒரு வகையில் ரசாயன உரம் தோய்த்த காய்கறிகளும், நெல் வகைகளுமே காரணமென்றும் நம் பாரம்பரியத்தை மறந்ததாலேயே தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் சொல்வார்கள். இதைக் காணும்போது என் மனம் வலிக்கும். ஏன் இப்படி இந்த நிலை என நினைத்தேன். இறுதியில் ஒரு முடிவு எடுத்தேன். நமது பாரம்பர்ய நெல் வகைகளையும் காய்கறிகளையும் மீட்பது என்று உறுதிபூண்டேன்.

பாரம்பர்ய நெல்
பாரம்பர்ய நெல்

2014-ம் ஆண்டு முதல் நமது நாட்டின் பாரம்பர்ய நெல் வகைகளை தேடி நாடு முழுவதும் நானும் என் கணவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். முதலில் எங்களுக்கு வெறும் 7 வகையான நெல் வகைகள் மட்டுமே கிடைத்தன. பின் அடுத்த வருடம் 175 வகையான நெல் வகைகளை நாடு முழுவதிலிருந்தும் நாங்கள் சேகரித்தோம். நாங்கள் சேகரித்த அத்தனை விதை நெல் ரகங்களையும் பைகளில் வளர்ப்பதைத் தவிர்த்து நேரடியாக எங்கள் வயல்களில் பாத்தி கட்டி விதைத்தோம். நல்லபடியாக விளைந்து மகசூல் கொடுத்தது. இதன் மூலம் பாரம்பர்ய மண்வளம் மாறாத நல்ல வகை விதைகள் எங்களுக்குக் கிடைத்தது. இதை எங்கள் பகுதியில் உள்ள மற்ற விவசாயி களுக்கும் நாகை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல விவசாயி களுக்கும் இலவசமாகக் கொடுத்தோம்.

இதில் என்னுடைய பெரும் முயற்சியில் வேதாரண்யம் பகுதியில் அழிவிலிருந்து மீட்டெடுத்த ஒரு நெல் வகை என்றால், அதன் பெயர் `பெருங்கூம்பாலை’ என்ற நெல் வகையே ஆகும். இந்த நெல் வகையை மீட்டதே ஒரு மிகப்பெரிய சாகசம் என்றே கூறுவேன். ஏனெனில், இந்த நெல் வகையின் வித்து எங்கள் பகுதியில் அருகில் உள்ள பெரியகுத்தகை என்ற ஊரில் ஒரு விவசாயியின் வீட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது. அதில் அவரிடம் இருந்த மொத்த நெல்லே அரைப்படி விதை நெல்லாகும். அதில் நாங்கள் ஒரு கைப்பிடி நெல்லை வாங்கி அதைத் தனியாக விதைத்து பராமரித்து அதில் அரை மூட்டை நெல்லை விளைச்சலாகப் பெற்றோம். இந்த பெருங்கூம்பாலை நெல்லானது அக்காலத்தில் உடல் சூட்டை தணிப்பதற்காகவும், காமாலை நோய் நேரத்தில் உடல் சூட்டை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் இந்நெல்லை பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாரம்பர்ய நெல் வகைகள்
பாரம்பர்ய நெல் வகைகள்

இது மட்டுமல்லாமல் குடவாழை, பால்குட வாழை, பனங்காட்டு குடவாழை, வெள்ளை குடவாழை என நான்கு வகை குடவாழை வகை நெல்களையும் மீட்டுள்ளோம். இந்த நெல்லானது குடல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குடல் ஒவ்வாமை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தக்கூடியது. எங்களிடம் இருக்கும் பாரம்பர்ய நெல் ரகங்களை விவசாயிகளுக்குக் கொடுத்து வருகிறோம்” என்றார் உற்சாகத்துடன்.

இதேபோல் இவர்களிடமிருந்து பல ஆராய்ச்சி படிப்பு மாணவர்கள் நெல்மணிகளை வாங்கிச் செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்துக்கும் 30 வகையான நெல் வகைகளை இவர் அளித்துள்ளார். இவர் செய்யும் இந்த பாரம்பர்ய நெல் வகை மீட்புக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார். அத்துடன் பாரம்பர்ய விதை வங்கியையும் நம்மாழ்வார் நினைவாக வைத்துள்ளனர்.

சிவரஞ்சனி
சிவரஞ்சனி

பொறியாளர் சிவரஞ்சனி தன் லட்சியமாகக் கூறுவது இதைத்தான். ``ஒரு நெல் என்பது ஒரு பெண்ணைப்போல... ஒரு பெண் பிறந்த இடத்தில் ஒன்றாகவும் புகுந்த இடத்தில் இன்னொன்றாகவும் இருக்கிறாள். அதைப்போல நெல் வளரும் இடத்தில் ஒன்றாகவும் இன்னொரு நடும்போது பல்கி பெருகுகிறது. எனவே, நெல்லை பாதுகாத்து அதைப் பரவலாக்குவதே இன்றைய தேவை” என்றார்.

- பா.கேசவன்