Published:Updated:

வனத்துக்குள் திருப்பூர்!

மரம் நடும் நிகழ்வில் அமைப்பினர்
பிரீமியம் ஸ்டோரி
News
மரம் நடும் நிகழ்வில் அமைப்பினர்

வருமானம் தரும் மரங்கள்... நடவு, கன்று இலவசம்... விவசாயிகளை வரவேற்கும்

சுற்றுச்சூழல்

ரக்கன்றுகள் நடுவது போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே என்ற நிலை இன்று மாறியிருக்கிறது. சில ஆண்டுகள் முன்புவரை, அரசியல்வாதிகள், தங்கள் கட்சித் தலைமையின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுக்கொண்டே இருந்தார்கள். அவை அனைத்தும் மரங்களாகியிருந்தால், தமிழகம் இன்றைக்கு வனமாகி இருக்கும். ஆனால், வழக்கம்போல் காகிதத்தில் மரம் நட்டு, அறிக்கையில் எண்ணிக்கையைக் காட்டினார்கள்.
கார்த்திகேயன்
கார்த்திகேயன்

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை மீது ஆர்வம்கொண்ட பசுமை நேசர்களால் மரக்கன்று வளர்த்தல் சிரத்தையாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தன்னார்வலர்கள், இளைஞர்கள் மூலமாக இந்தப்பணி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னத்தி ஏராக இருப்பது ‘வனத்துக்குள் திருப்பூர் திட்டம்’. வெற்றி தன்னார்வ அமைப்பின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மரம் நடும் நிகழ்வில் அமைப்பினர்
மரம் நடும் நிகழ்வில் அமைப்பினர்

மரக்கன்றுகள் நடவு செய்வதைக் கர்மசிரத்தையாக, கவனமாக, கச்சிதமாகச் செய்வது எப்படி என்பதைத் திருப்பூரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். ‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்டம், கடந்த 5 ஆண்டுகளில், 5 கட்டங்களாகத் திருப்பூர் மாவட்டத்தில் 8 லட்சம் மரங்களை நடவு செய்து வளர்த்து வருகிறது. இந்த அமைப்பின் செயல்பாடுகள், பல்வேறு மாவட்டங்களில் மரம் வளர்க்கும் அமைப்புகள் உருவாகக் காரணமாக இருக்கின்றன. தனது அடுத்த இலக்காக 10 லட்சம் மரங்களை நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது வனத்துக்குள் திருப்பூர்.

சிவராம்
சிவராம்

6-ம் கட்டத்துக்கான தொடக்க விழா, ஜூன் 21-ம் தேதி, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வயக்காட்டு புத்தூர் கிராமத்தில் மணி என்பவரது தோட்டத்தில் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் நடந்த இந்த விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் விஜய கார்த்திகேயன் கலந்துகொண்டு மரக்கன்றை நடவு செய்து திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசியவர்,

‘‘ஒவ்வோர் ஊருக்கும் ஒரு நிகழ்வு அடையாளமாக இருக்கும். திருப்பூருக்கான அடையாளமாக இருக்கிறது ‘வனத்துக்குள் திருப்பூர்’. அதோடு மரம் நடுவதற்கான அடையாளமாகவும் இருக்கிறது. இந்தச் செயல், நமது தலைமுறைகள் பேசப்படும். இந்தக் காலகட்டத்தில் இப்படியொரு முயற்சியில் நான் பங்கெடுத்தேன் என்பதே பெருமைக்குரிய விஷயம். ஒரு செடியை நடவு செய்து, தண்ணீர் ஊற்றி மரமாக்குவது சாதாரணப் பணியில்லை. இதில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் இதுவொரு வாழ்நாள் சாதனை.

இந்தப் பணி 5 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 8 லட்சம் மரங்களை வளர்த்து உள்ளீர்கள். இன்னும் 2 லட்சம் மரங்கள் நட உள்ளீர்கள். 10 லட்சம் மரங்களை நடுவது இந்திய அளவில் பெருமையான விஷயம். இந்த மாதிரியை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும். ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்வதைவிட, குழுவாகச் செய்தால் சுலபமாகச் செய்யலாம். அதை வனத்துக்குள் திருப்பூர் சிறப்பாகச் செய்கிறது. இந்தச் சூழ்நிலையிலும் நிகழ்ச்சியைத் தள்ளிப்போடாமல், சரியான விதிமுறைகளோடு இதைச் செயல்படுத்தியுள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கும், இந்த மாவட்டத்தில் பசுமை போர்வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்’’ என்றார்.

நிகழ்ச்சியில் சூழலியல் ஆர்வலர்கள் கோவை சதாசிவம், ஓசை காளிதாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மரக்கன்று நடும் மாவட்ட ஆட்சியர்
மரக்கன்று நடும் மாவட்ட ஆட்சியர்

இது கூட்டு முயற்சி

10 லட்சம் மரக்கன்றுகள் நடவுக்கான திட்டம்பற்றி நம்மிடம் பேசிய வெற்றி அமைப்பின் தலைவர் சிவராம், “2015-ம் வருஷம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இயற்கையோடு கலந்த தினம் நினைவாக இது ஆரம்பிச்சது. அவருக்கான மெளன அஞ்சலி பேரணி திருப்பூர்ல நடத்தினோம். அதுல நான் பேசும்போது, கலாம் அய்யாவோட லட்சியங்கள்ல ஒன்னையாவது நாம கடைப்பிடிக்கணும். ஒவ்வொரு மனுஷனும் மரம் வைக்கணும்னு சொன்னாரு. நாம, அவர் நினைவா நம்ம மாவட்டத்துல ஒரு லட்சம் மரங்கள நட்டு வளர்க்கலாம்னு பேசுனேன். கூட்டத்துல இருந்த எல்லோரும் அதை ஏத்துகிட்டாங்க. அப்படி உருவானதுதான் வனத்துக்குள் திருப்பூர் திட்டம். இதுவொரு கூட்டு முயற்சி. மாவட்டத்துல இருக்கத் தொழிலதிபர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் எல்லோரும் சேர்ந்து செய்ற வேலை. இதுக்காகப் பலபேர் நன்கொடை கொடுக்குறாங்க. சிலர் உடல் உழைப்புக் கொடுக்குறாங்க.

வானத்துல இருந்து பார்த்தா, எங்க மாவட்டம் பச்சை போர்வை போர்த்துன மாதிரி, வனம் மாதிரி இருக்கணும். இதுதான் எங்க லட்சியம். அதுனாலதான் ஒரு லட்சம் மரங்கள் நடலாம்னு இறங்கி, இப்ப 8 லட்சத்தை வளர்த்துட்டோம். அடுத்த ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் மரக்கன்றுகளை அடையிறதுக்காக இப்ப நடவு பணிகளை ஆரம்பிச்சிருக்கோம். மரக்கன்றுகளை நடவு செஞ்சிட்டு, கடமை முடிஞ்சிப் போச்சுன்னு நாங்க போறதில்லை. அந்த மரக்கன்றுகள் வளர்ச்சியைக் கண்காணிக்க ஒரு குழு வெச்சிருக்கோம். தண்ணியில்லாம வாடுற மரங்களுக்குத் தண்ணிக்கொடுக்க 50 டிராக்டர் வெச்சிருக்கோம். இதுவும் பலர் நன்கொடை கொடுத்ததுதான்.

வணிகரீதியான மரங்கள்... கன்று, நடவு இலவசம்

விவசாய நிலங்கள்லதான் நாங்க, மரக்கன்றுகளை நட்டுக் கொடுக்கிறோம். தேக்கு, சந்தனம், செஞ்சந்தனம், மலைவேம்பு மாதிரியான மரங்கள், பழமரங்கள், சூழலுக்கு நன்மை செய்யும் மரங்கள் என விலை உயர்ந்த வணிகரீதியான வருமானம் தரும் மரங்களை விவசாய நிலங்கள்ல இலவசமா நட்டுக்கொடுக்கிறோம். நடவு செய்யும் பூமியில வேலி இருக்கணும். தண்ணி வசதி கொஞ்சமாவது இருக்கணும். அது மட்டும் தான் நாங்க போடுற கட்டுப்பாடு. இதுக்குச் சம்மதம் சொல்ற விவசாயிக, எங்களைத் தொடர்புக்கொண்டா, நாங்களே குழியெடுத்து மரக்கன்றுகளை இலவசமா நடவு செஞ்சுக்கொடுக்கிறோம். இதுவரைக்கும் நாங்க நடவு செஞ்ச மரங்களை நிலத்துக்காரங்க பாதுகாப்பா வளர்க்குறாங்க. அதுனாலதான் இத்தனை லட்சம் மரங்களை வளர்க்க முடிஞ்சது. இந்த மரங்களை அவங்க பாதுகாப்பா வளர்த்தா, சூழலுக்கும் நல்லது பண்றாங்க. பின்னால அவங்க சந்ததிக்கும் ஒரு வைப்புத்தொகை மாதிரி மரங்களோட மதிப்பு இருந்துகிட்டே இருக்கும்’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

வனத்துக்குள் திருப்பூர்!

காற்றில் குறைந்த கரி!

னத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குநர் குமார் துரைச்சாமி, “திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 5 திட்டங்கள் மூலம் 8 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்த்து வருகிறோம். 6-வது திட்டத்திற்கு 10 லட்சம் மரங்கள் என்ற இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இதுவரை மாவட்டத்தில் பல இடங்களில் குறுங்காடுகளை உருவாக்கியுள்ளோம். இதனால் காற்றில் கார்பன் அளவு குறைந்துள்ளது. பல்லுயிர்ப்பெருக்கம் உருவாகியுள்ளது. இதைச் சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. வெகுவிரைவில் திருப்பூரைப் பசுமை வனமாக மாற்றிக்காட்டுவோம். மாவட்டத்திலுள்ள விவசாயிகள், இயற்கையை நேசிக்கும் இளைஞர் அமைப்புகள், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளைப் பசுமையாக்க விரும்பும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்களைத் தொடர்புகொண்டால், அவர்கள் பகுதியிலும் மரக்கன்றுகளை நடவு செய்து தரத் தயாராக இருக்கிறோம்’’ என்று அழைப்புவிடுத்தார்.

தொடர்புக்கு, செல்போன்: 90470 86666