Published:Updated:

பாறையிலும் நெல் விளையும்! கழனியாக மாறிய கல்குவாரி!

கல்குவாரி நிலத்தில் விளைந்த நெற்பயிர்களுடன் ராஜகுமாரன்
பிரீமியம் ஸ்டோரி
News
கல்குவாரி நிலத்தில் விளைந்த நெற்பயிர்களுடன் ராஜகுமாரன்

மகசூல்

யலில் நெல் சாகுபடி செய்து மகசூல் எடுத்து வரும் விவசாயிகள் மத்தியில், மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரைச் சேமித்து, கல்குவாரிப் பாறையின் உச்சியில் மண் நிரப்பி விவசாயம் செய்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகுமாரன்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஐந்துள்ளி கிராமம். ரப்பர் தோட்டங்கள் மிகுந்த இப்பகுதியில், கல்குவாரி பாறைக்கூட்டங்கள் நிரம்பிய மலைத்தொடர்கள் காணப்படுகின்றன. இதை ஒட்டியுள்ள பள்ளமான பகுதிகளிலும், பாறைக்கூட்டங்களைத் தவிர, தாழ்வான சரிவுப் பகுதிகளிலும், ரப்பர் மரங்களாகக் காட்சி அளிக்கிறது. இதன் வழியாக மலை உச்சியில் உள்ள ராஜகுமாரனின் கல்குவாரிக்குச் சென்றோம். பாறைகளில் வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட சிறியதும் பெரியதுமான கற்கள் ஒருபுறம் சிறு மலைபோலக் குவிந்து கிடக்கின்றன. மற்றொருபுறம் பாறைகள் தகர்க்கப்பட்ட இடங்களில் குளம் போன்ற பெரிய பள்ளமும் காணப்பட்டது. அதனருகில் சுமார் 50 அடி ஆழமான மண் நிரப்பிய பாறைக் கிடங்குப் பகுதியில், முற்றிய நிலையிலிருந்த நெற்கதிர்களை அறுவடை செய்துகொண்டிருந்த ராஜகுமாரனிடம் பேசினோம்.

கல்குவாரியில் உருவாக்கப்பட்ட விளைநிலம்
கல்குவாரியில் உருவாக்கப்பட்ட விளைநிலம்

“கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல், வாழை விவசாயம் பரவலா நடந்துட்டு வருது. இந்த விளவங்கோடு தாலுக்கா பகுதியில் ஒருகட்டத்துல நெல் விவசாயமே குறைஞ்சு ரப்பர் தோட்டம் அதிகமாச்சு. ரப்பரில் கணிசமான வருமானம் கிடைக்கும் என்பதற்காகத் தாகத்துக்கு ரப்பர் பாலைக் குடிக்க முடியுமா? வயிறு பசிச்சா அந்த ரப்பரைத்தான் சாப்பிட முடியுமா? கேரளாவுக்கு நம்ம மாநிலத்திலிருந்துதான் காய்கறிகள் அதிகமா ஏற்றுமதியாகிட்டிருந்துச்சு. மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம்னு வீட்டுக்குள் விவசாயத்துக்கும், இயற்கை விவசாயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து முன்னேறியது. ஆனா, நம்ம விவசாயிகள் பசுமைப்புரட்சியில தொடங்கி இப்போ வரைக்கும் ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைத் தாராளமா பயன்படுத்திட்டு வர்றாங்க. சந்தையிலயும், நஞ்சு படர்ந்த காய்கறி, பழங்கள்தான் கிடைக்குது. இயற்கை விவசாயத்துப் பக்கம் திரும்பிய விவசாயிகளின் எண்ணிக்கையும் குறைவுதான்.

இயற்கை விவசாயத்தைப் பற்றி இணையத்திலும், செய்தித்தாள்களிலும் படிச்சிருக்கேன். இயற்கையா நம்மளே விளைய வெச்ச காய்கறிகள், கீரைகளை உணவுல பயன்படுத்தணும்னு ஆசைப்பட்டேன். வீட்டுப் பின்பக்கத்தில் முதலில் கீரை போட்டேன். தொடர்ந்து, கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், புடலைனு காய்கறிகளைப் போட்டு மகசூல் எடுத்தேன். எல்லாத்துக்கும் அடியுரமா தொழுவுரம், மண்புழு உரம் மட்டும்தான். காய்கறி, கீரைகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்துட்டோம். சாப்பிடுற அரிசியும் இயற்கையா இருக்கணுமேன்னு யோசிச்சேன். இந்த நிலையில்தான் என்னோட குவாரி பாறையின் பள்ளமான பகுதி சும்மாதானே இருக்கு. அதுல நெல் சாகுபடி செய்யலாம்னு நினைச்சேன். பாறையை ஒட்டியுள்ள பகுதியிலிருந்து கரிசல் மண்ணை மினிலாரியில் 20 லோடு எடுத்து வந்து 10 சென்ட் பரப்பளவு நிலத்தில் நிரப்பிச் சமமாக்கினேன். பிறகு டிராக்டர் மூலமா உழவு செஞ்சேன்.

கல்குவாரி நிலத்தில் விளைந்த நெற்பயிர்களுடன் ராஜகுமாரன்
கல்குவாரி நிலத்தில் விளைந்த நெற்பயிர்களுடன் ராஜகுமாரன்

குவாரியின் பின் பகுதியில் சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்துல எப்பவும் மழைநீர்த் தேங்கி நிற்கும். அந்தத் தண்ணீரையே பாசனத் தேவைக்குப் பயன்படுத்தலாம்னு முடிவு செஞ்சேன். பெரிய குழாயை வயல் பகுதியிலிருந்து தண்ணீர் பள்ளத்திற்குள் செலுத்தி, மோட்டர் மூலம் தண்ணீரை நேராக வயலுக்கு பம்ப் செய்தேன். பாறை இடுக்குகள் வழியாக வடிந்தோடும் தண்ணீரும் இந்தப் பள்ளத்துல சேகரமாவதால், மழை பெய்யாவிட்டாலும் எப்போதும் தண்ணீர்த் தேங்கி நிற்கும். ஒரு மினிலாரி அளவு மட்கிய சாணத்தை வாங்கிப் பரப்பிவிட்டேன். 200 கிலோ அடுப்புச் சாம்பல், 50 கிலோ தேயிலைத் தூள், 500 கிலோ காய்ந்த இலைதழையும் போட்டு உழுதேன்.

குமரி மாவட்டத்தின் பாரம்பர்ய நெல் ரகங்களான ‘கொச்சிச்சம்பா’, ‘தங்கச்சம்பா’ ஆகியவற்றில் கொச்சிச்சம்பா ரகத்தைச் சாகுபடிக்காகத் தேர்வு செஞ்சேன். இதன் வயது 135 முதல் 150 நாள்கள். 10 சென்ட் பரப்பளவுள்ள நிலத்துக்கு 1 கிலோ விதைநெல் போதும். குறைவான பரப்பளவு சாகுபடி என்பதால் நாற்றங்காலில், விதைநெல் தூவி நாற்று வளர்க்காமல், வயலிலேயே நேரடியாகத் தூவினேன். விதைப்பதற்கு முன்பாக 12 மணிநேரம் விதைநெல்லை ஊறவைத்து, அடுத்த 12 மணிநேரம் சணல் சாக்கில் கட்டி தனியாக வெச்சுட்டு, 2 லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு பசுஞ்சாணம், 200 மி.லி பசுமாட்டுச் சிறுநீர் கலந்த சாணிப்பாலில் விதைதேர்த்தி செய்தேன். விதைத்த 5 நாள்களில் முளைப்பு தெரிஞ்சது. அடுத்தடுத்த நாள்களில் வயல் முழுவதும் பசுமை படர ஆரம்பிச்சது. ஈரப்பதத்தைப் பொறுத்து தினமும் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சினேன். 15 மற்றும் 30-ம் நாளில் ரெண்டு களை எடுத்துவிட்டேன்.

விளைவித்த நெல்லுடன்
விளைவித்த நெல்லுடன்

களை எடுத்த பிறகு 3 கிலோ மண்புழு உரத்தைப் பரவலா தூவினேன். 20-ம் நாளுக்கு மேல் 10 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி பஞ்சகவ்யா தெளிச்சேன். மலை உச்சிங்கிறதுனால சூரிய வெளிச்சத்துக்கு எந்தக் குறையுமில்லை என்பதால், நோய்த்தாக்குதலும் இல்ல. இருந்தாலும், 30-ம் நாளுக்கு மேல் 15 நாளுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 100 மி.லி வேப்பங்கொட்டைக் கரைசல் கலந்து தெளிச்சேன். வேற எந்தப் பராமரிப்பும் செய்யல. 140 முதல் 150 நாளில் அறுவடை செய்திட்டேன். இதுவரைக்கும் இதே 10 சென்ட் பரப்பில் 5 முறை, இதே கொச்சிச்சம்பாவைச் சாகுபடி செய்து அறுவடை செய்திருக்கேன். 200 முதல் 250 கிலோ வரைக்கும் மகசூல் எடுத்திருக்கேன். இந்த நெல்லை அரிசியாக்கி வீட்டுத் தேவைக்குதான் பயன்படுத்திட்டு வர்றேன்” என்றவர் சிறிது இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார்.

“கல்குவாரி நிறைஞ்ச பகுதியில மலை உச்சியில நெற்கதிர்கள் தகதகன்னு காற்றில் அசைந்தாடி மின்னுறதைப் பார்க்கிறப்பவே மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இதே போல 2 சென்ட் பள்ளத்தை மேடாக்கி 25 செவ்வாழை போட்டிருந்தேன். நல்ல பலன் தந்துச்சு. இப்போ அந்த இடத்துல தண்டுக்கீரையும், முளைக்கீரையும் வளர்ந்திருக்கு. குவாரியையொட்டி இன்னும் நிறைய இடங்கள் சும்மா கிடக்கு. அதுல அடுத்தகட்டமாக 25 சென்ட் பரப்பளவில் பாறைப்பள்ளத்தை மேடாக்கிகிட்டு இருக்கேன். அடுத்த வருஷம் ஒரு ஏக்கர் பரப்பில் நெல் விவசாயம் செய்து வீட்டுத்தேவைக்குப் போக மீதி நெல்லை விற்பனை செய்யலாம்னு திட்டம் போட்டிருக்கேன். என்னோட பணத்தேவையை பூர்த்தி செய்யக் குவாரி பிஸினஸ் செய்யுறேன். ஆனா, என்னுடைய மன சந்தோஷத்துக் காகவும், நஞ்சில்லா உணவு வேணும்கிற எண்ணத்துல நெல் விவசாயம் செய்யுறேன். ஆரம்பத்துல பள்ளத்தை மண் போட்டு நிரப்பியதுல இருந்து நெல் விவசாயத்துக்காக நான் செஞ்ச ஒவ்வொன்னையும் பார்த்துப் பக்கத்து குவாரிக்காரங்க சிரிச்சாங்க. இப்போ, ‘பரவாயில்லயே மக்கா... நெல்லை நட்டு பிரமாதமா அறுவடையே செஞ்சுட்டியே’ன்னு சொன்னதுடன், அவர்களும் பள்ளத்தை நிரப்பிக் காய்கறிகள் சாகுபடி செய்யலாமான்னு எங்கிட்ட யோசனை கேட்டுக்கிட்டு இருக்காங்க. மனம் இருந்தால் பாறையில்கூட நெல் விளைவிக்கலாம்” என்றார் மகிழ்ச்சிப் பொங்க.

தொடர்புக்கு, ராஜகுமாரன், செல்போன்: 94871 85805