Published:Updated:

ஏக்கருக்கு ரூ. 85,000... வற்றல் மிளகாய் தந்த வருமானம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அறுவடையான மிளகாயுடன் இராஜா ராஜேந்திரன்
அறுவடையான மிளகாயுடன் இராஜா ராஜேந்திரன்

மகசூல்

பிரீமியம் ஸ்டோரி
‘விவசாயிகளின் நம்பிக்கைக்குரிய நண்பன்’ என்றே மிளகாயைச் சொல்லலாம். பயிர் செய்யும் விவசாயிகளைக் கைவிடாது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குன்னம், மருவத்தூர், பேரளி, மூங்கில்பாடி உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி விவசாயிகள் ஒருகாலத்தில் மிளகாய்ச் சாகுபடி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் நாட்டுமிளகாய், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பகுதியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்த நாட்டு மிளகாய்ச் சாகுபடி காலப்போக்கில் படிப்படியாகக் கைவிடப்பட்டது. நாட்டு மிளகாய்ச் சாகுபடியைக் காண்பது அரிதாகிவிட்டது. இந்த நிலையில் ஒதியம் கிராமத்தில் இயற்கை முறையில் நாட்டு மிளகாய்ச் சாகுபடி செய்து வருகிறார் இளம் விவசாயி இராஜா ராஜேந்திரன்.

இயற்கை இடுபொருள் தெளிப்பில்...
இயற்கை இடுபொருள் தெளிப்பில்...

சிவந்த நாட்டு மிளகாய்ப் பழங்களைப் பறித்துக்கொண்டிருந்த இராஜா ராஜேந்திரனைச் சந்தித்தோம். “மிளகாய்ச் சாகுபடிக்குப் பெயர் பெற்றது எங்க குடும்பம். எங்க தாத்தா காலத்துல மூணு ஏக்கர்ல மிளகாய்ச் சாகுபடி செஞ்சாங்க. அவருக்குப் பிறகு படிப்படியாக மிளகாய்ப் பயிர் செய்வது குறைஞ்சுக்கிட்டே வந்தது. எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. ஆனாலும், வீட்டுத் தேவைக்காக மட்டும் எங்க அம்மா 30 சென்ட்ல கத்திரி, தக்காளி, கொத்தமல்லி பயிர்களோடு சேர்த்து நாட்டு மிளகாய்ப் பயிர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. நான் இந்த வருஷம் விவசாயத்துல இறங்கினேன். நாட்டு மிளகாயை ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில சாகுபடி செஞ்சு விளைச்சல் எடுத்திருக்கேன்’’ என்று முன்னுரை கொடுத்தவர், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். “எங்க தாத்தா முன்னோடி விவசாயி. மிளகாய், ஆமணக்கு, கம்பு, கேழ்வரகு, காய்கறிகள்னு பலவிதமான பயிர்கள் சாகுபடி செஞ்சாரு. 100 ஆடுகளும், ரெண்டு ஜோடி காளை மாடுகளும் இருந்துச்சு. எருவுக்குப் பஞ்சமிருக்காது. அப்போல்லாம் ரசாயன உரங்களைப் பயன்படுத்தினதில்லை. எங்க அப்பாவும் விவசாயிதான். எனக்கு ஆறு வயசு இருக்கும்போதே அவர் இறந்துட்டதால, எங்க அம்மாதான் விவசாயத்தை கவனிச்சிக்கிட்டு இருக்காங்க. ரசாயன முறையில வீரியரகப் பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நான் எம்.பி.ஏ-வுல சுற்றுச்சூழல் மேலாண்மை படிச்சிட்டு இருந்தப்போ, இயற்கை விவசாயத்து மேல தாக்கம் ஏற்பட ஆரம்பிச்சுது.

மிளகாய்த் தோட்டத்தில்
மிளகாய்த் தோட்டத்தில்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஏற்பாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஒடுகம்பட்டியில் நம்மாழ்வார் உருவாக்கின கொழிஞ்சி இயற்கை வேளாண்மைப் பண்ணையில ஒரு மாசம் நேரடிப் பயிற்சி வகுப்பு நடந்துச்சு. இயற்கை விவசாயத் தொழில்நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. அதுல ஆர்வம் அதிகமாகி இயற்கை விவசாயத்துல இறங்கினேன். எங்க நிலத்தோட ரசாயனத்தன்மையைப் போக்க, ஏக்கருக்கு 20 டிப்பர் கணக்குல ஏரி வண்டல் மண் கொண்டு வந்து போட்டோம். எங்ககிட்ட இப்போ சொந்தமா மாடுகள் கிடையாது. எங்க மாமா காங்கேயம், கிர் நாட்டுமாடுகள் வளர்க்கிறார். இயற்கை இடு்பொருள்கள் தயாரிக்க, அவர்கிட்ட இருந்துதான் கோமியம், சாணம், பால் வாங்கிக்கிறோம். எங்க 10 ஏக்கர் நிலத்துல, ஒன்றரை ஏக்கர்ல பாரம்பர்யமா ஒரு குட்டை இருக்கு. மழைநீரை இதுல சேகரிச்சு, பற்றாக்குறைக் காலங்கள்ல பயன்படுத்திக்கிறோம். மீதி எட்டரை ஏக்கர்ல எங்க அம்மா ரசாயன முறையில மக்காச்சோளம் பயிர் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. மக்காச்சோளத்தைக் கைவிட்டுட்டு, இயற்கை முறையில பாரம்பர்யப் பயிர்கள் சாகுபடி செய்யணுங்கறதுதான் என்னோட ஆசை. ஆனா, எங்க அம்மா ஒத்துக்கலை. போன வருஷம் முதல் கட்டமா, ரசாயன உரங்களை முற்றிலும் தவிர்த்துட்டு, இயற்கை முறையில மக்காச்சோளம் சாகுபடி செஞ்சோம். நாட்டுக்கோழி வளர்க்கும் என் நண்பர் மக்காச்சோளத்தை வாங்கிக்கிட்டார்.

‘‘எங்க பகுதியைப் பொறுத்தவரைக்கும் மிளகாய்ச் சாகுபடியில முரலி நோய்த்தாக்குல் பெரிய பிரச்னை. இலைகள் சுருங்கி செடிகள் குன்றிப்போயிடும். நான் கடலைப்பிண்ணாக்குக் கரைசல் தெளிச்சதுனால அந்த பாதிப்பு வரலை.’’

இந்த வருஷம் ஏழரை ஏக்கர்ல மக்காச்சோளம் சாகுபடி செஞ்சோம். குறைந்தபட்சம் ஒரு ஏக்கர்லயாவது இந்த மண்ணுக்கான பாரம்பர்யப் பயிர் சாகுபடி செய்யணுங்கறதுல உறுதியா இருந்தேன். எங்க அம்மாவும் இதுக்கு சம்மதிச்சாங்க. உடனே ஒரு ஏக்கர்ல மானாவாரியில மிளகாய் விதைக்க இறங்கிட்டேன்’’ என்றவர், நாட்டு மிளகாய்ச் சாகுபடி குறித்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஊடுபயிராகக் கத்திரிக்காய்
ஊடுபயிராகக் கத்திரிக்காய்

‘‘நாட்டு மிளகாய் விதை எங்ககிட்ட எப்பவும் இருக்கும். ஆடிப்பெருக்கு அன்னைக்கு விதைவிட்டு, நாற்று உற்பத்தி செஞ்சு நடவு பண்ணினோம். ரசாயன முறையில சாகுபடி செய்யக்கூடிய வீரிய ரக மிளகாய்ச் செடிகள்ல வேர் கறையான், காய்ப்புழு பாதிப்புகள் வரும். எங்களோடது இயற்கை விவசாய நாட்டு மிளகாய் செடிங்கறதுனால அந்த மாதிரியான பிரச்னைகள் இல்லை.

ஊடுபயிராக ஆமணக்கு
ஊடுபயிராக ஆமணக்கு

எங்க பகுதியைப் பொறுத்தவரைக்கும் மிளகாய்ச் சாகுபடியில முரலி நோய்த்தாக்குல் பெரிய பிரச்னை. இலைகள் சுருங்கி செடிகள் குன்றிப்போயிடும். நான் கடலைப்பிண்ணாக்குக் கரைசல் தெளிச்சதுனால அந்த பாதிப்பு வரலை. நடவுல இருந்து 100 நாள்கள்ல காய்ப்புக்கு வந்துச்சு. நாங்க காய்களா பறிக்கிறதில்லை. நல்லா பழுக்கவிட்டுப் பழமா பறிச்சு, ஒரு வாரம் வெயில்ல காயவெச்சு, வரமிளகாயாக விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கோம். நடவுல இருந்து ஆறு மாசம் ஆச்சு. இதுவரைக்கும் 550 கிலோ வரமிளகாய் கிடைச்சிருக்கு. இதுல 500 கிலோ முதல் தர மிளகாய். ஒரு கிலோ 160 ரூபாய்னு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துல விற்பனை செஞ்சுக்கிட்டு இருக்கோம். `சாவி மிளகாய்’னு சொல்லப்படுற லேசா மஞ்சள், வெள்ளை நிறம் கலந்த ரெண்டாம் தர மிளகாய் 50 கிலோ. இதுக்கு கிலோவுக்கு 100 ரூபாய் விலை கிடைக்குது. இது மானவாரி நிலம்கிறதுனால இனிமே காய்ப்பு இருக்காது. இறவைப் பாசனமாக இருந்தால், இன்னும் கொஞ்ச நாள்கள் காய் எடுக்கலாம்’’ என்றவர் நிறைவாக,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறுவடையான மிளகாயுடன் இராஜா ராஜேந்திரன்
அறுவடையான மிளகாயுடன் இராஜா ராஜேந்திரன்

‘‘மிளகாய், மற்ற விளைபொருள்கள் மாதிரி மோசமான விலை சரிவைச் சந்திக்காது. விற்பனை செய்ய வியாபாரிகளையோ, இடைத்தரகர்களையோ எதிர்பார்க்க வேண்டியதில்லை. அறுவடை செஞ்ச உடனேயே இதை விற்பனை செஞ்சாகணுங்கற கட்டாயம் இல்லை. செடியிலேயே மிளகாயை நல்லா பழுக்கவிட்டு, பறிச்சு, வெயில்ல காயவெச்சு, வரமிளகாயாக மாத்திட்டோம்னா, இரண்டு வருஷம் வரைக்கும் தாங்கும். அதிக விலை கிடைக்கிற வரைக்கும் காத்திருந்து, அதுக்குப் பிறகு விற்பனை செஞ்சுக்கலாம்.

ஏக்கருக்கு ரூ. 85,000... வற்றல் மிளகாய் தந்த வருமானம்!

மக்கள் வீட்டுக்கே தேடி வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. இது இயற்கை முறையில சாகுபடி செய்யற நாட்டு மிளகாய்ங்கறதுனால இதுக்குக் கூடுதல் வரவேற்பு. இது நல்லா நீளமா, அதிக விதைகளோட இருக்கும். இதுல காரத்தன்மையும் கூடுதலா இருக்கும். எனக்கு இந்த ஒரு ஏக்கர் நாட்டு மிளகாய்ச் சாகுபடி மூலம் 85,000 ரூபாய் வருமானம் கிடைச்சுது. இதுல செலவு போக, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல லாபம்” என்றார்.

தொடர்புக்கு, இராஜா ராஜேந்திரன், செல்போன்: 94439 26176.

ஒரு ஏக்கரில் நாட்டு மிளகாய்ச் சாகுபடி செய்வதற்கு இராஜா ராஜேந்திரன் சொல்லும் தொழில்நுட்பம்!

நாற்று உற்பத்தி

ஐந்து சென்ட் பரப்பில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். லேசான ஈரப்பதத்தில், அடியுரமாகத் தலா ஐந்து கிலோ கடலைப்பிண்ணாக்கு, ஆமணக்குப்பிண்ணாக்கு, எண்ணெய்ப் பசையுடன்கூடிய வேப்பங்கொட்டைத்தூள் இவற்றை ஒன்றாகக் கலந்து போட வேண்டும். 10 அடி நீளம், மூன்றடி அகலம்கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும். ஒன்றேகால் கிலோ விதையை 12 மணி நேரம் பஞ்சகவ்யாவில் ஊறவைத்து, அதிகாலை 5 மணிக்கு பாத்திகளில் தூவிவிட வேண்டும். விதை வெளியில் தெரியாதவாறு, களைக்கொத்தால் மண்ணைக் கிளறிவிட்டு, தண்ணீர் தெளிக்க வேண்டும். 40-ம் நாள் நாற்றுகள் நன்கு வளர்ந்து நடவுக்குத் தயாராக இருக்கும்.

சாகுபடி நிலம்

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில் லேசான மழை ஈரத்தில் ஆழமாக ஒரு சால் உழவு ஓட்டி, தலா 50 கிலோ எண்ணெய்ப் பசையுடன்கூடிய வேப்பங்கொட்டைத்தூள், ஆமணக்குப்பிண்ணாக்கு போட்டு மீண்டும் ஒரு சால் உழவு ஓட்டி, நிலத்தைச் சமப்படுத்தித் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அடுத்த சில நாள்களில் ஒரு மழை பொழிந்த பிறகு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நாற்றுகளின் வேர்ப்பகுதியில் சேறு பிடிமானம் இல்லாதவாறு, தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்த பிறகுதான் நடவு செய்ய வேண்டும். செடிக்குச் செடி தலா இரண்டடி இடைவெளி இருக்க வேண்டும். நாற்றுகளின் நுனிப்பகுதியை லேசாகக் கிள்ளிவிட வேண்டும். இதுபோல் செய்தால் அதிக அளவில் பக்கக் கிளைகள் உருவாகி, மகசூல் அதிகமாகக் கிடைக்கும்.

புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் 10 முதல் 20 நாள்களுக்கு ஒரு சிறு மழைத்தூறலாவது கிடைத்துவிடும். மார்கழி, தை மாதங்களில் பனி ஈரத்திலேயே செடிகள் செழிப்பாக வளர்ந்துவிடும். நடவிலிருந்து 30-35 நாளில் களையெடுக்க வேண்டும். 40-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் நான்கு லிட்டர் பஞ்சகவ்யா கலந்து செடிகள்மீது தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில், ஐந்து லிட்டர் அக்னி அஸ்திரம் கலந்து தெளிக்க வேண்டும். 55-60-ம் நாள் மீண்டும் களையெடுக்க வேண்டும். 65-ம் நாள் ஏற்கெனவே சொன்ன அளவில் பஞ்சகவ்யா தெளிக்க வேண்டும். 75-ம் நாள் 100 லிட்டர் தண்ணீரில் ஐந்து லிட்டர் ஐந்திலைக் கரைசல் தெளிக்க வேண்டும். 80-ம் நாள் ஐந்து கிலோ கடலைப்பிண்ணாக்கை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் ஊறவைத்து, நன்கு நொதிக்கவிட வேண்டும். அதை நன்கு கலக்கிவிட்டு 100 லிட்டர் தண்ணீரில் கலந்து, செடிகள்மீது தெளிக்க வேண்டும். நாட்டு மாட்டுப் பாலில் தயார் செய்யப்பட்ட ஐந்து லிட்டர் மோரை, ஒரு வாரத்துக்கு நன்கு புளிக்கவிட்டு, அதனுடன் நான்கு லிட்டர் தண்ணீர் கலந்து நன்கு கலக்கிவிட வேண்டும். எட்டு லிட்டர் கரைசல் கிடைக்கும். இதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து 87-ம் நாள் தெளிக்க வேண்டும். 100-ம் நாள் செடிகள் காய்ப்புக்கு வரத் தொடங்கும். நம் தேவைக்கு ஏற்ப பச்சை மிளகாயாகவோ, பழமாகவோ அறுவடை செய்யலாம்.

ஊடுபயிர்

``மிளகாய்ச் செடிகளுக்கு இடையே ஊடுபயிராக 25 சென்ட்டில் சின்ன வெங்காயம் சாகுபடி செஞ்சோம். 75-ம் நாள் வெங்காயம் அறுவடைக்கு வந்துச்சு. 100 கிலோ மகசூல் கிடைச்சுது. வீட்டுத் தேவைக்குப் போக விற்பனையும் செஞ்சோம். வெங்காயம் கடுமையான தட்டுப்பாட்டுல இருந்த நேரம். கிலோ 100 ரூபாய் விற்பனை ஆகிட்டு இருந்துச்சு.

எங்களுக்கு ஊடுபயிர் மூலம் கிடைச்ச வெங்காயத்தோட விலை மதிப்பு 10,000 ரூபாய். இன்னொரு 25 சென்ட்ல மிளகாய்க்கு இடையில ஊடுபயிராக மூணு கிலோ கொத்தமல்லி விதை தெளிச்சோம். 72-ம் நாள் கொத்தமல்லி அறுவடைக்கு வந்துச்சு. செடியோடு பிடுங்கி, வெயில்ல காயவெச்சு, கைகளால் தேய்ச்சு எடுத்தோம். 50 கிலோ கொத்தமல்லி தானியம் கிடைச்சுது. கிலோ 100-130 ரூபாய் விலை போய்க்கிட்டு இருந்துச்சு. எங்களுக்குக் கிடைச்ச 50 கிலோ கொத்தமல்லி தானியத்தோட மதிப்பு 5,000 ரூபாய்” என்கிறார் இராஜா ராஜேந்திரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு