Published:Updated:

மாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி!

அறுவடை செய்த காய்கறிகளுடன் சிவராமையா
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்த காய்கறிகளுடன் சிவராமையா

மகசூல்

மாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி!

மகசூல்

Published:Updated:
அறுவடை செய்த காய்கறிகளுடன் சிவராமையா
பிரீமியம் ஸ்டோரி
அறுவடை செய்த காய்கறிகளுடன் சிவராமையா
“மானாவாரி நிலமாக இருந்தாலும், இறவைப் பாசன நிலமாக இருந்தாலும் ஒரே பயிரை அதிக பரப்பளவில் சாகுபடி செய்வதைவிட, பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்ய வேண்டும். அப்போதுதான் தொடர் மகசூல், கணிசமான வருமானம் உறுதியாகக் கிடைக்கும்’’ என்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த சிவராமையா.

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பனையங்குறிச்சியில் உள்ளது சிவராமையாவின் வயல். அறுவடைப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தவரை காலை வேளையில் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்தியவுடன் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

அறுவடை செய்த காய்கறிகளுடன் சிவராமையா
அறுவடை செய்த காய்கறிகளுடன் சிவராமையா

“எனக்குச் சொந்த ஊரே நெல்லைதான். விவசாயத்துக்கும் என் குடும்பத்துக்கும் சம்பந்தமில்ல. ஆனா, ஸ்கூல்ல படிக்கும்போதே விவசாயத்துமேல ரொம்ப ஈடுபாடு. பி.எஸ்ஸி கெமிஸ்ட்ரி படிச்சு முடிச்சதும் தனியார் கம்பெனிகள்ல மார்க்கெட்டிங்ல 5 வருஷம் வேலை பார்த்தேன். சொந்தமா தொழில் செய்யலாம்னு மளிகைச் சாமான்களை மொத்தமாக வாங்கி, பாக்கெட் போட்டு வீடுகளுக்கு டோர் டெலிவரியா 3 வருஷம் விற்பனை செஞ்சேன். வாடிக்கையாளர் களோட எண்ணிக்கை அதிகமானதுனால ரொம்ப முதலீடு தேவைப்பட்டது. அதனால அந்தத் தொழிலை விட்டுட்டு, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தேன். அதை 12 வருஷமா செஞ்சேன். அந்த நேரத்திலதான், இந்த 3 ஏக்கர் நிலத்தை வாங்கினேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாரந்தோறும் திருக்கோயில்களுக்கு உழவாரப் பணிகளுக்குப் போறது வழக்கம். அந்த நேரத்துலதான் இயற்கை விவசாயி சுப்பிரமணியன் அறிமுகம் கிடைச்சது. இயற்கை விவசாயத்தைப் பத்தி விரிவாகச் சொன்னதோடு, அவரோட தக்காளி தோட்டத்துக்கும் கூப்பிட்டுப் போனாரு. கொடிகள்ல கொத்துக்கொத்தா காய்ச்சு தொங்கிக்கிட்டு இருந்த தக்காளிப் பழங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன். நாமளும் இயற்கை விவசாயத்தைச் செய்யணும்னு முடிவெடுத்தேன். என்னோட விருப்பத்தைச் சுப்பிரமணியன்கிட்ட சொன்னேன். ‘குறைஞ்சது 10 விவசாயிகளைப் பார்த்துட்டு, அவங்க அனுபவங்களையும் கேட்டுட்டு, பிறகு விவசாயத்தைத் தொடங்குங்க’ன்னு சொன்னார்.

மேட்டுப்பாத்திகள்
மேட்டுப்பாத்திகள்

திருநெல்வேலியைச் சுத்தி இருக்க, சில தோட்டங்களுக்கும், சில விவசாயப் பயிற்சி வகுப்புகளுக்கும் அழைச்சுட்டுப் போனார். ஒவ்வொரு விவசாயியோட சாகுபடி முறை, தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல்னு பல விஷயங்களைத் தெரிஞ்சுகிட்டேன். முதல்ல ஒரு ஏக்கர்ல இயற்கை முறையில கொடித் தக்காளிச் சாகுபடி செஞ்சேன். நல்ல மகசூல் கிடைச்சுது. ஆனா, அறுவடையான பழங்களை விற்பனை செய்ய முடியாம திணறிப் போயிட்டேன். ஒரே ரகப் பயிரை மட்டும் சாகுபடி செய்றதுதான் இந்தச் சிக்கலுக்குக் காரணம்னு தெரிஞ்சுகிட்டேன். அப்பத்தான் சுப்பிரமணியன் மேட்டுப்பாத்தி முறையைப் பத்திச் சொன்னாரு. இப்போ ஒரு வருஷமா ஒரு ஏக்கர்ல மேட்டுப்பாத்தி முறையில காய்கறி, படர் கொடி, சின்ன வெங்காயம், கீரைகளைச் சாகுபடி செய்திட்டு இருக்கேன்” என்றவர் வருமானம் குறித்துப் பேசினார். “தினமும் ஒரு பாத்திங்கிறதைவிட, வாரத்தில ஒரு நாள் 6 பாத்தி கணக்கில் பாத்தி அமைச்சுக்கிறேன். 6 பாத்திகள்ல 40 நாளுக்குப் பிறகு பறிக்கலாம். தொடர் பாத்தி சாகுபடியால சுழற்சி முறையில காய்ப்பு வரும். ஒருநாள் விட்டு ஒரு நாள் கணக்குல மாசத்துக்கு 15 நாள்கள் பறிக்கிறேன். 6 பாத்திகள்ல இருந்து கிடைக்குற காய்கறிகளோட மகசூல் அளவு, தொடர் பாத்தி அமைப்புகளால படிப்படியாக அதிகரிக்கும். தொடர்ச்சியாகக் காய்கறிகளைப் பறிக்கலாம். இப்படிச் சுழற்சி முறையில தொடர்ச்சியா பாத்தி அமைச்சு விதைக்குறதால மகசூலும் வருமானமும் அதிகரிக்கும். ஒரே பயிரை நம்பியிருக்க வேண்டாம். கலப்புச் செடிகளாக இருக்குறதால பூச்சி, நோய்த்தாக்குதலும் குறைவு. உதாரணமா, முதல் 6 பாத்திகள்ல 40-ம் நாளுக்கு மேல ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்யும்போது, எல்லாக் காய்கறிகளும் கலந்து 15 - 20 கிலோ கிடைக்கும். பிறகு 60-ம் நாளுக்குப் பிறகு மகசூல் அதிகரிக்கும்.

எல்லாக் காய்கறிகளுக்கும் ஒரே விலை

100 முதல் 120-ம் நாள்ல மகசூல் குறைஞ்சிடும். அந்தப் பாத்திகள்ல அதே வரிசைப்படி மறுபடியும் சாகுபடியை ஆரம்பிக்கணும். காய்கறி, கீரையைச் சந்தையில விற்பனை செய்யாம நேரடியா வீடுகளுக்கு விற்பனை செய்றேன். பொதுவா சந்தை விற்பனையில ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு விலை இருக்கும். ஆனால், நான் எல்லாக் காய்களையுமே ஒரு கிலோ ரூ.20-க்குதான் விற்பனை செய்றேன். ஒரு கட்டு கீரை ரூ.10-க்கு விற்பனையாகுது. சந்தையில இயற்கைக் காய்கறிகளுக்குனு வியாபாரி தனி விலை ஏதும் கொடுக்கப்போறதில்ல. ஆனா, அதே நஞ்சில்லா காய்கறிகளை வீடுகளுக்கு விற்பனை செய்றதை ஆத்ம திருப்தியா நினைக்கிறேன். வாடிக்கை யாளர்களும் என் தோட்டத்துக் காய்கறி, கீரையை எதிர்பார்த்து காத்திருக்காங்க’’ என்றவர் நிறைவாக,

மாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி!

‘‘இப்ப ஒருநாள் விட்டு ஒருநாள் அறுவடை செய்றது மூலமா 2,000 முதல் 2,500 வரை வருமானம் கிடைக்கிது. மாசத்துக்கு 30,000 முதல் 37,500 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கிது. இதுல கீரை மூலம் மட்டும் மாசம் 5,000 வரைக்கும் தனி வருமானம் கிடைக்கிது. இதுல செலவு 10,000 ஆகும். அதுபோக மத்ததெல்லாம் லாபம்தான்’’ என்றார் மகிழ்ச்சியாக.

தொடர்புக்கு, சிவராமையா, செல்போன்: 98942 71124

இப்படித்தான் சாகுபடி செய்யணும்!

மேட்டுப்பாத்தி முறையில் சாகுபடி செய்வது குறித்துச் சிவராமையா கூறிய தகவல்கள் பாடமாக இங்கே...

மாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி!

சாகுபடிக்காகத் தேர்வு செய்த நிலத்தை 10 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை உழவு செய்ய வேண்டும். மண் நன்கு பொலபொலப்பாக இருப்பது அவசியம். பிறகு, 50 அடி நீளம், 3 அடி அகலம், 1.5 அடி உயரத்தில் பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும். பாத்திகளின் இடைவெளி 1.5 அடி. ஒவ்வொரு பாத்தியிலும் 50 கிலோ கனஜீவாமிர்தத்தைப் பரவலாகத் தூவ வேண்டும். 2 அடி இடைவெளியில் காய்கறி நாற்றை நடவு செய்ய வேண்டும். காய்கறிகளுக்கு இடையில் அகலவாக்கில் மண்ணில் கோடிட்டு கீரை விதையைத் தூவ வேண்டும். 10 அடி இடைவெளியில் படர்கொடி விதைகளை (3 விதைகள்) ஊன்ற வேண்டும். பாத்தியின் இரண்டு ஓரங்களிலும் சின்ன வெங்காயம் ஊன்ற வேண்டும்.

காய்கறி என்றால் கத்திரி, வெண்டை, தக்காளி, மிளகாய், அவரை. படர்கொடிகள் என்றால் புடலை, பீர்க்கன், பாகல், சுரை, வெள்ளரி. கீரைகள் என்றால் பச்சைத்தண்டு, சிவப்புத்தண்டு, சிறுகீரை, அரைக்கீரை, பாலக் கீரை. ஓரங்களில் முள்ளங்கி, சின்ன வெங்காயம், நிலக்கடலை (சுழற்சி முறையில்), இதில் ஒரு பாத்தியில் நடவு செய்யும் செடி, கொடி வகைகள் அடுத்த பாத்தியில் இடம்பெறாது. காய்கறி நாற்றுகள் 18 முதல் 25 நாள் வயதுடையதாக இருக்க வேண்டும். நாற்றுகளையும் விதைகளையும் பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி செய்து நட வேண்டும். நடவு செய்தவுடன் பாசனம் செய்ய வேண்டும். பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் பாய்ச்சி வரலாம். மேட்டுப்பாத்தியைப் பொறுத்தவரையில் சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.

7-ம் நாளில் முதல் களை எடுக்க வேண்டும். 10 நாள்களுக்கு ஒருமுறை ஜீவாமிர்தத்தைப் பாசன நீருடன் (6 பாத்திகளுக்கு 30 லிட்டர்) கலந்து விட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மி.லி மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 30 முதல் 35-ம் நாளில் கீரையை அறுவடை செய்துவிடலாம். பிறகு, கீரை அறுவடை செய்த இடத்தில் மண் அணைக்க வேண்டும். தொடர்ந்து, ஒவ்வொரு பாத்தியிலும் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். 45-ம் நாளுக்கு மேல் காய்கறி, படர்கொடி ஆகியவற்றை அறுவடை செய்யலாம்.

கற்றுக்கொடுத்த கர்நாடக விவசாயி

திருநெல்வேலி இயற்கை விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் சுப்பிரமணியனிடம் பேசினோம். “கர்நாடக மாநிலம் சாத்தனகள்ளியைச் சேர்ந்த குமாரசாமி என்ற விவசாயி, ‘100 நாள்கள், 100 பாத்திகள் தொடர் வருமானம்’ என்ற முறையில மேட்டுப்பாத்தியில 30 வகையான காய்கறிகள், கொடி வகைகள், 7 வகைக் கீரைகள், 6 வகைக் கிழங்கு வகைகளை இயற்கை முறையில பயிரிட்டு மாசம் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமானம் பார்த்துட்டு வர்றார்னு ஃபேஸ்புக் மூலமா தெரிஞ்சுகிட்டேன். அதைப் படிச்சதும் ஆச்சர்யப்பட்டேன். எங்க சங்கத்தைச் சேர்ந்த 5 விவசாயிக நேரடியாகவே குமாரசாமி தோட்டத்துக்குப் போனோம். 100 அடி நீளம், 3 அடி அகலம், 1.5 உயரத்தில மேட்டுப்பாத்திகளை அமைச்சிருந்தாங்க.

மாதம் ரூ. 37,500 தொடர் வருமானம் தரும் மேட்டுப்பாத்தி!

புதுசா அமைக்கப்பட்டு விதை விதைக்கப்பட்ட நிலை, கீரை அறுவடை செய்த நிலை, காய்கறி அறுவடைக்குத் தயாரான நிலை, அறுவடை முடியும் நிலைனு நாலு வகையான மேட்டுப்பாத்திகளைப் பார்த்தோம். ஒவ்வொன்னையும் தெளிவா விளக்கிச் சொன்னாரு. ‘நேரடி விற்பனை மூலம் மாசம், ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்குது’னு சொன்னதோடு, அதுக்கான ஆதாரங்களையும் காட்டினார். இந்த மேட்டுப்பாத்தி முறை சாகுபடியை நெல்லையில செஞ்சு பார்த்தோம். ஓரளவு கணிசமான மகசூலும் வருமானமும் கிடைச்சுட்டு வருது.

சிவராமையாவுக்கும் குமாரசாமியோட மேட்டுப்பாத்தி முறையைத்தான் சொன்னேன். அதைச் செஞ்சு இப்ப வருமானம் பார்த்துட்டு இருக்காரு. ஒரு பயிரை மட்டும் நம்பி இருக்காம பல பயிர்களைச் சேர்த்துக் கலப்புப் பயிர் சாகுபடி செஞ்சா, வருஷம் முழுக்கத் தொடர் வருமானமும் மகசூலும் கிடைக்கும். இதனால விவசாயிகள், விளைபொருள்களை நேரடியாகவே விற்பனை செய்ய முடியும். கலப்புப் பயிர் சாகுபடியால பூச்சி, நோய்த்தாக்குதல் குறைவு. எங்க சங்கம் மூலம் இந்த மேட்டுப்பாத்தி முறையைச் சொல்லிக்கொடுக்கிறோம். இலவச நேரடி களப்பயிற்சி கொடுக்கவும் முயற்சி செய்றோம்’’ என்றார்.

தொடர்புக்கு, செல்போன்: 99948 76697